Published : 08 Sep 2020 09:56 AM
Last Updated : 08 Sep 2020 09:56 AM
அறிமுகமானது முதலே டிரெண்டிங் விளையாட்டாக உருவெடுத்திருந்தது பப்ஜி கேம். உலகெங்கும் 30 கோடிப் பேர் டவுன்லோடு செய்திருந்த இந்த கேமை, நாள்தோறும் 5 கோடிப் பேர் விளையாடுவதாகப் புள்ளிவிவரங்கள் அசரடித்தன. உலகில் உள்ள முகம் தெரியாத யாருடனும் அணி சேர்ந்து விளையாடப்படும் இந்த விளையாட்டால் நொந்துபோகாத பெற்றோர்களே கிடையாது. இரவில் எல்லோரும் தூங்கும் வேளையில், கண் விழித்துக் கத்தியப்படி விளையாடிய பதின்பருவத்து இளைஞர்களைக் கண்டு பதைப்பதைத்துபோயிருந்தார்கள் பெற்றோர்.
அண்மையில் இந்த பப்ஜி விளையாட்டுக்கு மத்திய அரசு விதித்துள்ள தடை, பெற்றோர் மனங்களைக் குளிரவைத்திருக்கிறது. அதேவேளையில் இத்தனை நாள் விளையாடி, இந்த விளையாட்டுக்கு அடிமையாகியிருந்த இளைஞர்களின் முகங்களிலோ சோக ரேகை. இதுபோன்ற இளைஞர்களுக்காக இந்தியாவிலேயே சுயமாக ஒரு ஆன்லைன் விளையாட்டு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் பாட்மிண்டன் முன்னாள் வீரர் புல்லேலா கோபிசந்தும்.
இவர்கள் இருவரும் இணைந்து பப்ஜிக்கு மாற்றாக ஃபவுஜி (FAU-G) என்ற பெயரில் புதிய ஆன்லைன் விளையட்டை அறிமுகம் செய்யவுள்ளனர். இதற்காக பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட தனியார் கேம்ஸ் நிறுவனத்துடன் கைகோத்துள்ளனர். இந்த விளையாட்டு முழுக்க முழுக்க இந்திய ராணுவத்தின் வீரதீர செயல்களையும் எல்லையில் அத்துமீறும் அண்டை நாடுகளின் சதித்திட்டங்களை தவிடுபொடியாக்கும் ராணுவ வீரர்களின் உழைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
இதில் முதல் விளையாட்டாக இந்தியா - சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதல் இடம்பெற உள்ளது. அக்டோபர் மாதத்தில் இந்த ஆன்லைன் விளையாட்டு அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மூலம் கிடைக்கும் வருவாயில் 20 சதவீதம் நாட்டின் பாதுகாப்பு பணியில் உயிர்நீத்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT