Last Updated : 25 Aug, 2020 10:13 AM

 

Published : 25 Aug 2020 10:13 AM
Last Updated : 25 Aug 2020 10:13 AM

உங்களில் யார் அடுத்த எம்.எஸ். தோனி?

கிரிக்கெட்டிலிருந்து எத்தனையோ சாதனை வீரர்கள் ஓய்வுபெற்றிருக்கிறார்கள். ஆனாலும், எம்.எஸ். தோனியின் ஓய்வு தனித்துவமான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வழியனுப்புப் போட்டியுடன் ஓய்வுபெறுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கெல்லாம் ஏமாற்றம். வழியனுப்புப் போட்டி என்பதையெல்லாம் தாண்டி எம்.எஸ். தோனி என்றால் தலைமைப் பண்பு என்பதைப் பல தலைமுறைகளுக்கும் தெரியும்வண்ணம், அழுத்தமாகப் பாடம் நடத்திவிட்டு ஓய்வுபெற்றிருக்கிறார். அவருடைய தலைமைப் பண்புகள், வெற்றிக்கான சூத்திரம்.

1. எப்போதும் அமைதி

எம்.எஸ். தோனி களத்தில் ஆக்ரோஷமாகவோ ஆரவாரமாகவோ இருப்பதை யாருமே பார்த்திருக்க முடியாது. அதனால்தான் ‘கேப்டன் கூல்’ என்ற பட்டத்துக்கு எடுத்துக்காட்டானார். களத்தில் எந்த அழுத்தத்துக்கும் அடிபணியக் கூடாது என்பதுதான் தோனி உணர்த்தும் பாடம். அது எப்போதும் சாதகமான முடிவுகளை எடுக்க உதவும். 2007 டி20 உலகக் கோப்பையில் இறுதி ஓவரை ஜோகிந்தர் சர்மாவை பந்துவீசச் செய்தது, 2011 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங்குக்கு முன்பாகக் களம் இறங்கியது போன்ற முடிவுகளை எடுப்பதற்கு இந்த ‘கூல்’ அணுகுமுறையே காரணம். கடினமான காலத்தில் கேப்டன் நிதானமாக இருப்பது அணியின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும். அந்த வகையில் தோனி, கூல் கேப்டன்சிக்கு நியாயம் சேர்த்தவர்.

2. வெற்றியைக் கையாளுதல்

ஒருவருக்கு வெற்றி எப்போதும் கிடைக்கலாம். ஆனால், அந்த வெற்றியைக் கையாளும் விதம்தான் அவரைத் தலைவராக உயர்த்தும். சிலர் குறுகிய காலத்தில் வெற்றியைப் பெற்றுச் சமநிலையை இழந்து, தலைமைக்கான பண்புகளைத் தொலைத்துவிடுவார்கள். 2007-ம் ஆண்டில் எம்.எஸ். தோனி கேப்டனாகப் பதவியேற்றது முதலே கிடைத்த வெற்றி என்ற போதையை, மமதையை தலைக்கு ஏறாமல் பார்த்துக்கொண்டார். கேப்டன் பொறுப்பை விட்டு விலகும்வரை அதை ஓர் உத்தியாகவே கையாண்டார். வெற்றியைத் தொடர்ந்து ருசிக்க வேண்டியவர்கள் தலைக்கனம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்கு தோனி ஓர் உதாரணம்.

3. அணியைத் தயார்செய்

வெற்றியை ஒருவர் எப்படியெல்லாம் கையாளக் கூடாதோ, அதேபோல் தோல்வியில் துவண்டும் போய்விடக் கூடாது. எந்த ஒரு தலைவரும் இரண்டையும் சமமாகவே கையாள வேண்டும். 2011 உலகக் கோப்பையை இந்தியா வியக்கத்தக்க வகையில் வென்ற பிறகு இந்திய அணி பல போட்டிகளில் தடுமாறியது. எப்போதும் உலகக் கோப்பையை வென்ற அணியின் வீரர்கள் தொடர்ந்து அணியில் தங்கள் பங்களிப்பைச் செலுத்துவது வழக்கம். ஆனால், இந்திய அணியில் 2011-க்குப் பிறகு முக்கியமான வீரர்கள் உடற்தகுதி அல்லது ஃபார்ம் இழப்பு காரணமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வெளிநாடுகளில் கிடைத்த தொடர் டெஸ்ட் தோல்விகள் இந்திய அணியைப் பாதித்தன. ஆனால், ஒவ்வொரு வீரருக்கும் பதிலாக மாற்று வீரர்களை அடையாளம்கண்டதில் தோனியின் தலைமைத்துவம் பளிச்சென வெளிப்பட்டது. யார் ஒருவர் அணியில் இல்லையென்றாலும் வேலை எப்போதும்போல் நடக்க வேண்டும். அதற்குத் தலைவன் அணியைத் தயார்படுத்தி வைக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது, இல்லையா?

4. ஒற்றை ஆளாக...

அணி விளையாட்டில் தலைவர் எப்போதும் முன்னின்று அணியை வழிநடத்த வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால், குழு சோபிக்காதபோது சில சந்தர்ப்பங்களில் தலைவன் என்ற பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டிய சூழலும் கேப்டனுக்கு ஏற்படும். அந்த வகையில் தனி ஒருவனாக இந்திய அணியைப் பல முறை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றவர் எம்.எஸ்.தோனி. கேப்டன் என்பவர் அணியின் வெற்றியைத் தீர்க்கமாக உறுதிப்படுத்த வேண்டும். அது தோனிக்குக் கைவந்த கலை. வெற்றிபெற நினைப்பவர்களுக்கு, இதுவும் ஒரு பாடம்தான்.

5. அணியின் வீரர்

என்னதான் அணியில் ஒருவர் கேப்டன் என்றாலும், அவரும் மற்றவர்களைப் போல் ஒரு வீரர்தான். இதில் கேப்டன் என்பவர் அணியில் உள்ள மற்ற வீரர்களை ஆதரிக்க வேண்டும், அவர்களுடைய நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்த அம்சம்தான் எம்.எஸ். தோனி தொடர்ந்து 10 ஆண்டுகள் அணியை வழிநடத்திச் செல்ல, அவருக்கு உதவியாக இருந்தது. குழுவில் ஓர் அங்கமாகச் செயல்பட்டு 2007 டி20 உலகக் கோப்பை, 2008 ஆஸ்திரேலிய முத்தரப்புத் தொடர், 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என அழுத்தமான தடங்களை இந்திய அணி பதிக்க உதவியது. அணியின் கேப்டன் என்ற இறுமாப்பைத் தவிர்த்து, நாமும் அணியில் ஓர் அங்கம் என்று நினைத்தால், குழு மனப்பான்மை ஓங்கி வளரும். வெற்றியும் அணிவகுக்கும்.

எம்.எஸ்.தோனியைப் போல் எந்தத் துறையிலும் நீங்கள் சாதிக்கலாம். அதற்குத் தேவை, இதுபோன்ற தலைமைப் பண்புகள்தாம். இப்போது சொல்லுங்கள், உங்களில் யார் அடுத்த எம்.எஸ். தோனி?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x