Published : 18 Sep 2015 02:10 PM
Last Updated : 18 Sep 2015 02:10 PM
ஐ.டி. துறையில் வலுவான தொழிற்சங்கம் என்று எதுவுமில்லை. பத்தாண்டுகளுக்கு முன் உலகம் முழுவதுமே இதுதான் நிலைமை. ஐ.டி. துறையில் பணியாற்றும் நவீன இளைஞர்கள் தாங்கள் புரொபெஷ்னல் என்று அழைக்கப்படுவதையே விரும்புகின்றனர். அதிகச் சம்பளமும் அதனால் கிடைத்த வேறுபட்ட வாழ்க்கைத் தரமும் தொழிற்சங்கங்கள் அவசிய மில்லையென்று நினைக்கவைத்தது. தொழிற்சங்கங்களால் தங்களுக்குப் பிரச்சினைதான் என்றும் நினைத்தனர்.
அதே நேரத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும், மன நெருக்கடிகளுக்கும் அவர்களுக்கு வடிகால் தேவைப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பல வாக்குமூலப் (confession) பக்கங்களை அவர்கள் ஏற்படுத்தினார்கள். தங்களின் அன்றாடப் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளவும், அவை தொடர்பாக விவாதிக்கவும் அந்தப் பக்கங்களைப் பயன்படுத்திக்கொண்டனர். சிலர் புனைப்பெயர்களில் மறைந்து கொண்டு தங்கள் வருத்தங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். பல்லாயிரக் கணக்கான லைக்குகளுடன் இப்போதும் அந்தப் பக்கங்கள் இயங்கிவருகின்றன.
1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது அமெரிக்கத் தொழிற்சங்கங்களில் ஒன்றான வாஸ்டெக். அந்த அமைப்பின் ஐபிஎம் நிறுவனப் பிரிவுத் தலைவர் “உற்பத்தித் துறை சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளும் ஐ.டி. துறையையும் தாக்கிவருகின்றன. இந்தத் துறையில் சங்கம் அவசியம்” என்கிறார்.
மரம் சும்மாயிருந்தாலும், காற்று விடுவதில்லை என்று மாவோ சொன்னதைப் போல அடுத்தடுத்து வந்த நெருக்கடிகளும், பிரச்சினைகளும் தொழிற்சங்கங்கள் உருவாகக் காரணமாக அமைந்தன. குறிப்பாக 2008-ம் ஆண்டின் உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பலரும் சங்கங்களை நாடினார்கள்.
இந்தியாவில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி நேர்ந்த காலத்திலும், ஒரு பெரிய ஐ.டி. நிறுவனத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்ட காலத்திலும் தொழிற்சங்கங்கள் தோன்றின. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. பிரிவுத் தலைவர் கற்பக விநாயகம், “7 பேர் வேலை செய்தாலே அந்த நிறுவனத்தில் சங்கம் தொடங்கலாம். பல்லாயிரம் பேர் பணியாற்றும் ஐ.டி. நிறுவனங்களில் சங்கம் ஏற்படுத்தத் தடையாக இருந்தது வெளிப்படையற்ற ‘அப்ரைசல்’ (சம்பள உயர்வு) முறையும், நாஸ்காம் கருப்புப் பட்டியலில் வைத்துவிடுவார்கள் என்ற அச்சமும்தான். அவற்றையெல்லாம் மீறித்தான் சிலர் சங்கங்களில் இணைகின்றனர்” என்கிறார்.
ஐ.டி. நிறுவனங்கள் ‘நாஸ்காம்’ என்ற பெயரில் அமைப்பாக இணைந்துள்ளன. 1,250 நிறுவனங்கள் (2010 டிசம்பர்) அதில் உறுப்பினராக உள்ளனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசை அணுகுகின்றனர். ஆனால், இந்த நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 28 லட்சம் ஐ.டி. ஊழியர்களுக்குள் அந்த ஒற்றுமை இல்லை.
ஐ.டி. தொழிலாளர்களுக்கான கூட்டமைப்பு (எப்ஐ.டி.இ.) பொதுச் செயலாளர் தமிழ் நாசர், “ஐ.டி. துறையில் வேலை நீக்கம் நடந்துகொண்டேதான் இருந்தது. பெரிய அளவில் நடைபெற்றபோது ஊடகங்களில் பேசத் தொடங்கினார்கள். துண்டறிக்கை கொடுத்தாலோ, பேசினாலோ பயந்து ஒதுங்கும் ஊழியர்கள் இப்போது எங்கள் கூட்டங்களுக்கு வருகின்றனர். இணைய தளங்களில் பேஸ்புக் பக்கங்களில் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்” என்கிறார்.
வேலை நீக்கத்துக்கு எதிராக அவர்கள் தொடுத்த வழக்கும், தீர்ப்பும் பிரபலமானவை. “வேலை நீக்கப்பட்டவர்களில் ஒரு பெண் மட்டும் வழக்கு தொடர முன்வந்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார். நீதிமன்றம் உடனடியாக அந்த வேலை நீக்கத்தைத் தடை செய்தது. மறுநாள் நீதிமன்ற உத்தரவோடு பணிக்குச் சென்றார். இப்போது வேறு பல பிரச்சினைகளுக்காகவும் எங்களை நாடி வருகின்றனர். சென்னையைத் தாண்டி தமிழகத்தின் பல பகுதிகளிலும், பிற மாநிலங்களில் செயல்படும் நிறுவனங்களிலும் பிரச்சினைகளைக் கையாள்கிறோம்” என்கிறார்.
“கூட்டு பேர உரிமையும், அனைத்துப் பிரிவினரிடையே ஒற்றுமையும் பாரம்பரியமான தொழிற்சங்கங்களின் அடிப்படையாக அமைந்திருக்கும். ஆனால் ஐ.டி. துறையிலோ இந்த இரண்டும் சாத்தியமாவதில்லை. இங்குள்ள வேலைச் சூழலும், தொழிலாளர் மனநிலையும் மாறுபட்டுள்ளன. அவரவர் பிரச்சினைக்காக மட்டும் சங்கங்களை நாடுகின்றனர். இதன் காரணமாகத்தான் சங்கங்களில் செயல்படுவதே தனக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்ற அச்சமும் ஐ.டி. துறையில் நிலவியது.
சமீபத்தில், வேலை நீக்கப் பிரச்சினை அதிகரித்துள்ளதால், தொழிற்சங்கங்களுக்கு நிறைய பேர் வருகின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, சங்கங்கள்தான் தொழிலாளாருக்குப் பாதுகாப்பு என்பதை உணரவைக்க முயல்கிறோம்” என்கிறார் அறிவுசார் ஊழியர் கூட்டமைப்பைச் சேர்ந்த (கேபிஎப்) அருண் பிரகாஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT