Published : 28 Jul 2020 09:59 AM
Last Updated : 28 Jul 2020 09:59 AM
திருமணம் செய்து கொண்டுவிட்டால், மகிழ்ச்சி கிடைத்துவிடும் என்று பலரும் நினைக்கிறார்கள். காதல், திருமணம் ஆகியவற்றுக்கும் மகிழ்ச்சிக்கும் நேரடித் தொடர்பிருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் முயன்றிருக்கிறார்கள். மிச்சிகன் மாகாணப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 18 - 60 வயது வரையுள்ள 7,532 பேரின் உறவுப் பின்னணியை இந்த ஆராய்ச்சிக்காக அலசியுள்ளார்கள்.
‘பாசிட்டிவ் சைக்காலஜி’ என்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. “மகிழ்ச்சியாக இருப்பதற்குத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றுதான் நம்மில் பெரும்பாலோர் நினைக்கிறார்கள். அதனால், இந்த ஆய்வில், ‘மகிழ்ச்சியாக இருப்பதற்கு திருமண உறவு கட்டாயம் தேவையா? தனித்து வாழ்ந்தால், அது உங்கள் மொத்த வாழ்க்கையையும் மகிழ்ச்சியின்மையாக மாற்றிவிடுமா? திருமணம் செய்துகொண்ட பிறகு, அது தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?’ என்பது போன்ற கேள்விகளை இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் கேட்டிருந்தோம்” என்கிறார் மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் வில்லியம் சாப்பிக். “இந்த ஆய்வின் முடிவில், திருமணம் செய்துகொள்வதால் மகிழ்ச்சி கிடைத்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று தெரியவந்துள்ளது” என்கிறார் அவர்.
“வாழ்க்கை முழுக்கத் தனித்து வாழ்ந்தவர்களுக்கும் வித்தியாசமான உறவுப் பின்னணியைக் கொண்டிருந்தவர்களுக்கும் இடையே மகிழ்ச்சியின் அளவைப் பொறுத்தவரை பெரிய வித்தியாசமில்லை. இந்தக் கண்டறிதல் எங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. வாழ்க்கையின் முடிவில், திருமணம் செய்துகொண்டவர்களும் சரி, திருமணமே செய்துகொள்ளாதவர்களும் ஒரே அளவிலான மகிழ்ச்சியுடனே இருக்கிறார்கள் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் உறுதிபடுத்துகின்றன” என்கிறார் இந்த ஆய்வுக் குழுவைச் சேர்ந்த மரியா புரோல்.
மகிழ்ச்சியைப் பொறுத்தவரை, ஒருவர் உறவுடன் இருக்கிறாரா, இல்லையா என்பதை மட்டுமே வைத்துக்கொண்டு முழு கதையையும் முடிவுசெய்துவிட முடியாது. திருமணம் அல்லது காதல் உறவுகளிலும் மகிழ்ச்சியின்மையை பலர் நிச்சயமாக எதிர்கொள்வார்கள். அதே மாதிரி தனித்து வாழ்பவர்கள், நட்பு, பணி, மனத்துக்கு இனிய பொழுதுபோக்குகள் ஆகிய மற்ற அம்சங்களிலிருந்தும் மகிழ்ச்சியைப் பெற முடியும் என்று தெரிவிக்கிறது இந்த ஆய்வு.
“ஏற்கெனவே மகிழ்ச்சியில்லாத ஒருவர், திருமணம் செய்துகொள்வதால் மகிழ்ச்சி கிடைத்துவிடும் என்று நினைத்துத் திருமணம் செய்துகொண்டால், அது பெரிதாக எதையும் மாற்றிவிடாது. திருமணத்துடன் மகிழ்ச்சியைத் தொடர்புப்படுத்துவது என்பது முழுக்க முழுக்க மனநிலை சம்பந்தப்பட்டதுதான். தனித்து வாழும்போது, உங்களால் மகிழ்ச்சியையும்
மனநிறைவையும் அடைய முடிந்தால், உங்களால் அந்த மகிழ்ச்சியை வாழ்க்கை முழுக்கத் தக்கவைத்துகொள்ள முடியும். அந்த வகையில், திருமணத்துக்கும் மகிழ்ச்சிக்கும் நேரடியான தொடர்பில்லை” என்கிறது இந்த ஆய்வு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT