Last Updated : 21 Jul, 2020 09:45 AM

 

Published : 21 Jul 2020 09:45 AM
Last Updated : 21 Jul 2020 09:45 AM

கரோனாவால் மாறிய கிரிக்கெட்!

கரோனா வைரஸ் தொற்றால் இனி விளையாட்டுப் போட்டிகள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்த நிலையில், பல நாடுகளில் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் சிறிது சிறிதாகத் தொடங்கிவருகின்றன. அதில், சர்வதேச கிரிக்கெட்டும் அடங்கும்.

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி ரசிகர்களின் மனத்தைத் துளைத்துக்கொண்டிருக்கும் வேளையில், இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கியுள்ளது. அத்துடன் கரோனாகாரணமாகப் பல புதிய விதிமுறைகள் சர்வதேச கிரிக்கெட்டில் நடைமுறைக்குவந்துள்ளன.

எச்சிலுக்குத் தடை

கிரிக்கெட் போட்டிகளில் பந்தைப் பளபளப்பாக்க வீரர்கள் அடிக்கடி எச்சிலைத் தொட்டுப் பந்தைத் துடைப்பது வழக்கம். அனில் கும்ப்ளே தலைமையிலான ஐ.சி.சி. கமிட்டி, எச்சிலைப் பயன்படுத்தத் தடைவிதித்து ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது. அதன்படி சவுதாம்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்த விதிமுறை முதன்முறையாக நடைமுறைக்கு வந்தது. எச்சிலுக்குப் பதில் வியர்வையை வீரர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது (பழக்கதோஷத்தில் வீரர்கள் எச்சிலைத் தொட்டு பந்துவீசிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி கேலி, கிண்டலுக்கும் ஆளாகின).

காலி மைதானம்

கடந்த மார்ச்சில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் சிட்னி, ஹோபர்ட் ஆகிய நகரங்களில் காலி மைதானங்களில் நடைபெற்றன. ஆனால், ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறையாக அறிவிக்கப்பட்ட பிறகு, முதல் போட்டியாக இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டி பதிவானது. ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானங்களில் போட்டி நடைபெற்றாலும், தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மாற்று வீரர்

டெஸ்ட் போட்டி நடக்கும்போது வீரர் யாருக்காவது கரோனா அறிகுறி தென்பட்டால், மாற்று வீரரைப் பயன்படுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் போட்டி நடக்கும்போது வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி ஊழியர்கள் எங்கும் செல்ல முடியாத வகையில் கண்காணிப்பின்கீழ் கொண்டு வரப்பட்டனர். இதன்படி இரு அணியினருக்கும் மைதானம் அருகே தனித்தனி தங்கும் பகுதிகள் என அனைத்தும் இரண்டாகப் பிரிக்கப்பட்டன. உயிர் பாதுகாப்புப் பகுதிகளாக அவை கண்காணிக்கப்பட்டன.

பொது அம்பயர் இல்லை

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பொதுவாக வேறு நாட்டு அம்பயர் பணிக்கு அமர்த்தப்படுவது வழக்கம். இந்த விதியை ஐ.சி.சி. தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. போட்டி நடைபெறும் நாட்டைச் சேர்ந்தவர்களையே அம்பயர்களாக பணிக்கு அமர்த்த முடிவானது. அந்தவகையில் இன்னும் சிறிது காலத்துக்கு அனுபவமற்ற அம்பயர்கள் சர்வதேசப் போட்டிகளில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்பதால், அம்பயரின் முடிவை எதிர்த்து அணிகள் கூடுதலாக ஒரு டி.ஆர்.எஸ். (Decision Review System) ரிவ்யூசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கைகுலுக்க முடியாது

வீரர்கள் பயன்படுத்தும் தொப்பி, குளிர்க்கண்ணாடி, ஸ்வெட்டர் போன்ற எந்தப் பொருளையும் அம்பயர்களிடம் தரக் கூடாது என்ற உத்தரவும் இந்தப் போட்டியில் பின்பற்றப்பட்டது. தேவைப்பட்டால் அம்பயர் தன்னுடைய கைகளில் கையுறை அணிந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது. விக்கெட்டை வீழ்த்தும்போது ஒருவருக்கொருவர் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்த வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. எனவே, வீரர்கள் கை முட்டிகளில் இடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.

கரோனா அச்சம் இல்லாத சூழ்நிலை உருவாகும்வரை இந்த விதிமுறைகள் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் நீடிக்கும். கரோனாவிலிருந்து மீள சமூக விலகல், முகக்கவசம், கைகளைக் கழுவுதல் போன்ற தற்காப்புச் செயல்பாடுகள் நடைமுறையில் உள்ளதைப் போல் விளையாட்டுப் போட்டிகளிலும் இனிவரும் காலத்தில் புதிய, அதேநேரம் சற்றே விநோதமான விதிமுறைகளை நாம் பார்க்க நேரிடலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x