Published : 21 Jul 2020 09:41 AM
Last Updated : 21 Jul 2020 09:41 AM
ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரை குற்றாலத்தின் சீஸன் களை கட்டும். தமிழக நகரங்களிலிருந்தும் இந்திய மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிவார்கள். இந்த மூன்று மாத காலத்தில் ஈட்டும் வருமானம்தான் இந்த நகரை நம்பி வாழ்வு நடத்தும் வணிகர்களது எஞ்சிய நாட்களைக் கழிக்கப் பெருமளவில் உதவும்.
ஜூலை மாதத்தின் விடுமுறை நாட்களில், குறிப்பாக வார இறுதி நாட்களில் குற்றாலத்தின் சாலைகளில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் தலைதான் தென்படும். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து நடமாடும் சாலைகளில் குதூகலத்துக்குப் பஞ்சமே இருக்காது. அதுவும் சமீப ஆண்டுகளில் கடும் போக்குவரத்து நெருக்கடியால் குற்றாலம் பிதுங்கி வழிந்தது. இது வழக்கமான சூழல். ஆனால், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்த ஆண்டில் குற்றாலம் வழக்கமான சுறுசுறுப்பின்றி முடங்கிக்கிடக்கிறது. குற்றாலத்தின் வியாபாரத்தையும் உற்சாகத்தையும் கரோனா ஒன்றுமில்லாமலாக்கிவிட்டது.
குற்றாலத்தின் பேருந்து நிலையத்தில் வரிசையாக வேன்களும் கார்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சீஸன் நேரத்தில் இந்தப் பேருந்து நிலையம் ஜேஜே என்றிருக்கும். ஈரம் சொட்டச் சொட்ட மனிதர்கள் அங்கும் இங்கும் அலைந்துகொண்டே இருப்பார்கள். குற்றாலச் சாலைகளின் ஓரம் அமைந்துள்ள தேநீர்க் கடைகளில் ஆவி பறக்கும் தேநீரும் கடுஞ்சூடான காபியும் சதா டம்ளர்களை நிரப்பிக்கொண்டே இருக்கும். குளித்துக் காயாத மேனியுடன் மனிதர்கள் வடையையோ பஜ்ஜியையோ கடித்தபடி, சூடாகத் தேநீர் அல்லது காபியைக் குடித்தபடி அடுத்து எந்த அருவிக்குச் செல்லலாம் என யோசித்தபடி நின்றுகொண்டிருப்பார்கள்.
இப்போதோ கடையைத் திறந்து வைத்திருக்கும் தேநீர்க் கடைக்காரர்கள் அடுப்பை வெறுமனே வெறித்தபடி யாராவது வாடிக்கையாளர்கள் வர மாட்டார்களா என்று காத்திருக்கிறார்கள். வீதியோர விடுதிகள் வெறுமை சுமந்து காணப்படுகின்றன. அவ்வப்போது ஒன்றிரண்டு வாகனங்கள் சாலையில் செல்கின்றன; யாராவது ஒருவர் சாலையில் முகக்கவசம் அணிந்தோ அணியாமலோ செல்கிறார். வீதிகளில் உணவுக்காக மந்திகள் கூட்டம் கூட்டமாக உலவுகின்றன.
குற்றாலம் ஐந்தருவி சாலையிலிருந்து பேரருவிக்குச் செல்லும் கிளைச் சாலையோரங்களிலுள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. குற்றாலநாதர் கோயிலும் வழக்கத்துக்கு மாறான கடும் அமைதியில் கண்ணயர்ந்துகிடக்கிறது. அருவியோ, பெரிய அறையில் கட்டிலில் இருந்து தனிமையில் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும் அழகிய தமிழ்க் கதாநாயகி போல் துயரார்ந்த அழகுடன் வழிந்துகொண்டிருக்கிறது. குற்றால அழகைக் காண ஆயிரம் கண் போதாது என்று எழுதிய, இந்த ஆண்டு நூற்றாண்டு காணும் கவிஞர் மருதகாசி, ஏகாந்தமாக வழிந்துகொண்டிருக்கும் குற்றாலத்தைப் பார்த்தால் பதைபதைத்துவிடுவார்.
மனப்பிறழ்வுக்காளான மனிதர் ஒருவர் தனக்குத் தானே ஏதோ பேசிக்கொண்டே வழக்கம்போல் சாலையில் காறி உமிழ்கிறார். மனநிலை சரியானவர்களே இப்படியான காரியத்தில் எந்தக் கவனமுமின்றி ஈடுபடும்போது, மனநிலை பிறழ்ந்த இந்த மனிதர்மீது நமக்குக் கோபம் வரவில்லை. ஆளரவமின்றிப் பேரருவியே இப்படியான அடர்ந்த அமைதியில் ஆழ்ந்துகிடக்கும்போது, ஐந்தருவியையோ பழைய குற்றால அருவியையோ பார்க்கும் எண்ணமே எழவில்லை. இப்போதைக்கு அடுத்த ஆண்டில் குற்றால சீசன் வழக்கம்போல் களை கட்டும் என்று நம்பிக்கைகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT