Published : 02 Jun 2020 09:32 AM
Last Updated : 02 Jun 2020 09:32 AM

இனி பொம்மைகளுடன் சாப்பிடலாம்!

கனி

கரோனா பெருந்தொற்றின் காரணமாக பல துறைகள் தலைகீழ் மாற்றங்களை எதிர்கொண்டுவருகின்றன. அந்த வகையில் உணவகத் துறை, இந்தப் பெருந்தொற்று காலத்தில் தன்னை தகவமைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. உலகம் முழுவதும் உள்ள உணவகங்கள் இந்த நேரத்தில் இயங்குவதற்குப் பல புதுமையான வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றன.

லித்துவேனியத் தலைநகர் வில்னியஸின் மேயர், அந்த நகரின் சில இடங்களில் உணவகங்கள் வெளிப்புற 'கஃபே'க்கள் அமைப்பதற்கு ஏப்ரலில் முதற்கட்ட அனுமதி வழங்கினார். தற்போது அந்நகரில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், உணவகங்கள் உட்புறமாக இயங்குவதற்குப் புதுமையான தீர்வைக் கண்டுபிடித்துள்ளன.

உணவகங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காகச் சில மேசைகளைக் காலியாக வைக்க வேண்டிய அவசியம் உள்ளதால் இந்தக் காலி மேசைகள் ஃபேஷன் காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கின்றன. அந்நகரின் சுற்றுலா நிறுவனமான ‘கோ வில்னியஸ்’, உணவகங்கள், அந்நகரின் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த உணவக ஃபேஷன் காட்சியகத்தை உருவாக்கியிருக்கின்றன.

உணவகங்களில் காலியாக விடப்பட்டிருக்கும் மேசைகளில் ஜவுளிக் கடை பொம்மைகளான ‘மேனிக்கின்’ஸை (Mannequins) ‘பருவநிலை பேஷன்’ என்ற பெயரில் புது ஆடைகளுடன் அமரவைத்துள்ளனர். இந்நகரில் உள்ள பல உணவகங்கள் இந்த ஃபேஷன் காட்சியகத்துடன் இயங்கத் தொடங்கியிருக்கின்றன.

தனிமனித இடைவெளிக்காகக் காலியாக விடப்பட்டிருக்கும் உணவக மேசைகளை அகற்றுவது நன்றாக இருக்காது என்பதால், இந்த ஃபேஷன் காட்சியகத்தை உருவாக்கியதாகச் சொல்கிறார்கள் அந்த நகரின் உணவக உரிமையாளர்கள். வாடிக்கையாளர்கள் தனிமையில் அமர்ந்து உண்ணும் எண்ணத்தைப் போக்க இந்த ஜவுளிக் கடை பொம்மைகள் உதவிகரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் உணவக உரிமையாளர்கள். உணவகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆடைகள், பொருட்கள் ஆகியவை பிடித்திருந்தால், அவற்றை எங்கே வாங்கலாம் என்ற தகவலையும் உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

லித்துவேனியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவின் வாஷிங்டனின் பிரபல உணவகமான ‘தி இன்’ னும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக உணவகத்தில் ஜவுளிக் கடை பொம்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிவரும் காலத்தில், இதுபோன்ற பல புதுமையான போக்குகளை உணவகங்கள் மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் பார்க்க நேரிடலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x