Last Updated : 31 May, 2014 10:11 AM

 

Published : 31 May 2014 10:11 AM
Last Updated : 31 May 2014 10:11 AM

மணப்பாறை முறுக்கு

மணப்பாறை, திருச்சி. இந்த இரு ஊருக்குமே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது ‘மணப்பாறை முறுக்கு’.

தமிழ்நாட்டின் மத்தியப் பகுதி திருச்சி. நீங்கள் தென் தமிழ்நாட்டின் எந்த ஊருக்குச் சென்றாலும் திருச்சியைத் தொட்டுத்தான் போக வேண்டியிருக்கும். திருச்சியைத் தொடாமல் ஊர் போய்ச் சேர முடியாது என்பார்கள். திருச்சிக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்கள் பல இருந்தாலும் மணப்பாறை முறுக்கு அவற்றுள் பிரதானமானது.

திருச்சியிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது மணப்பாறை என்னும் சிறிய நகரம். ஊருக்குள் நுழைந்ததும் முறுக்குக் கம்பெனிகள் தான் தோரணம் கட்டி வரவேற்கின்றன. அழகர் முறுக்குக் கடை, முருக விலாஸ் முறுக்குக் கடை, அன்னை முறுக்குக் கடை, மணப்பாறை முறுக்குக் கடை என எங்கு திரும்பினாலும் முறுக்குக் கடைகள்தாம். இது தவிர மணப்பாறையில் 150-லிருந்து 200 குடும்பங்கள் இந்த முறுக்குத் தொழிலை ஆதாரமாகக் கொண்டுள்ளன.

இதற்கு ஆதாரம் அமைத்துத் தந்தவர் கிருஷ்ண அய்யர் என்பவர்தான். இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பே அவர் இந்தத் தொழிலை தொடங்கியுள்ளார். ஆனால் தனிச் சிறப்புமிக்க முறுக்குத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் மணி அய்யர்தான் என்கிறார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக இந்தத் தொழிலில் இருக்கும் துரைசாமி. இவர் கிருஷ்ண அய்யரின் மருமகன்.

கிருஷ்ண அய்யர் திருநெல்வேலி பகுதியில் இருந்து இங்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரயில்கள் தான் முக்கியப் போக்குவரத்து. இப்போது இருப்பதுபோல அந்தக் காலத்தில் பேருந்துகள் அதிகம் புழக்கத்தில் இல்லை. தமிழகத்தின் வடபகுதியில் இருந்து தென்பகுதிக்கு வரும் ரயில்கள் மணப்பாறையில்தான் தண்ணீர் பிடிப்பதற்காக நிற்கும். இதைப் பயன்படுத்திக்கொண்டு இங்கு இந்த வியாபாரத்தை அவர் தொடங்கியதாகச் சொல்லப் படுகிறது.

“எது எப்படியோ அவருக்குத் தான் நாங்கள் எல்லோரும் கடமைப்பட்டுள்ளோம்” என்னும் துரைசாமியின் மகன் மனோகர். இப்போது இவர் முறுக்குத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து இந்தத் தொழிலைச் செய்துவருகிறார்.

மணப்பாறை முறுக்கின் இந்தத் தனிச் சுவைக்கு, இங்குள்ள தண்ணீர் தான் காரணம் எனச் சொல்கிறார் மனோகர். மணப்பாறையில் கிடைக்கும் தண்ணீர் லேசான உவர் தன்மையுடன் இருப்பது முறுக்கிற்குக் கூடுதல் சுவையைத் தருகிறது என்கிறார்கள். மேலும் இங்கு முறுக்கை இரு முறை எண்ணெயில் வேக வைத்து எடுக்கிறார்கள். முதலில் பிழிந்து வைத்த மாவை மிதமாக வேக வைத்து எடுக்கிறார்கள். சில மணித் துளிகளுக்குப் பிறகு மீண்டும் வேக வைக்கிறார்கள். இப்படி இரு முறை வேகவைக்கும் நுட்பத்தையும் மணி அய்யர்தான் கண்டுபிடித்தார் என்கிறார் துரைசாமி.

முறுக்கிற்கான பச்சரிசி மாவை மதுரையில் உள்ள மில்களில் இருந்து வாங்கிவருகிறார்கள். அந்த மாவை, உப்புச் சுவை கூடிய மணப்பாறைக் குடிநீருடன் கலந்து பக்குவமாகப் பிசைகிறார்கள். இந்தக் கலவையுடன் ஓமத் தண்ணீ ரும் எள்ளும் போதிய அளவு சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த மாவு பிசையும் நுட்பமும் இந்தச் சுவைக்குக் காரணம். அதிகாலை 4 மணிக்கே வேலையைத் தொடங்கிவிடுகிறார்கள். மதியம் 2 மணிபோல்தான் மாவைக் கலந்து முறுக்காக்கக் கொண்டுவருகிறார்கள்.

தான் திருச்சியைத் தாண்டி பெரிதாக எங்கும் சென்ற தில்லை என்கிறார் துரைசாமி. ஆனால் அவர் தயாரித்த முறுக்கு அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடு களுக்கெல்லாம் போயிருக்கிறது. ஒருமுறை ரோமில் உள்ள பிஷப்பிற்குக்கூட முறுக்கு வாங்கிச் சென்றிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார். இன்றும் அதே சுவையை மாறாமல் தந்துகொண்டிருக்கும் மணப்பாறை முறுக்கிற்குப் புவிசார் குறியீடு (Geographical Indication tag) வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இப்போது வலுத்துவருகிறது. மணப்பாறையில் உள்ள முறுக்குக் கம்பெனிகளில் வேலை பார்க்கும் திறமையான தொழிலாளர்கள்தாம் இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x