Last Updated : 24 May, 2014 12:00 AM

 

Published : 24 May 2014 12:00 AM
Last Updated : 24 May 2014 12:00 AM

ஒரு போலி அசலான கதை

பாயாசத்தில் சேர்க்கும் ஜவ்வரிசியை எல்லோரும் ருசித்திருப்போம். மகாராஷ்டிராவில் கிச்சடி செய்வதற்கு அதை உபயோகிக்கிறார்கள். மேற்கு வங்கத்திலோ அது ஊட்டச்சத்து உணவு. இப்படி இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்த உணவுப் பொருளின் தாயகம் இந்தோனேசியா. இதன் உண்மையான பெயர் சேகோ (Sago). மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) என்ற ஒருவகை பனை மரத்தின் பதநீரைக் காய்ச்சும்போது இறுதியில் மாவு போன்ற ஒரு பொருள் கிடைக்கும். இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகத் (குருணைகளைப் போல்) திரட்டி சேகோ தயாரிக்கப்படுகிறது. இந்த உணவுப் பொருள் ஜாவா தீவிலிருந்து இறக்கப்பட்டதால் அது ‘ஜாவா அரிசி’ என அழைக்கப்பட்டுப் பிறகு அந்தச் சொல் மருவி ‘ஜவ்வரிசி’ ஆகிவிட்டது. ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் இந்த ‘ஜவ்வரிசி’ உண்மையானதல்ல. ஆனால் இந்தப் போலி ஜவ்வரிசி அசல் ஜவ்வரிசியாக அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. அதைத் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் எஸ். நீலகண்டன்.

மாணிக்கம் செட்டியார் கண்டுபிடித்த மைதா மாவு

முதலில் ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டுப் பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பிறகு எல்லா இறக்குமதிக்கும் தடை வந்தபோது, ஜவ்வரிசியையும் இறக்குமதி செய்ய முடியாமல் போனது. இதே போல மரிக்கன் மாவு என அழைக்கப்பட்ட மைதா மாவுக்கும் திண்டாட்டம் வந்தது. ஏனெனில் அதுவும் வெளிநாட்டில் இருந்து (அமெரிக்கா) இறக்குமதி செய்யப்பட்டதுதான்.

இந்நிலையில் இதைப் பயன்படுத்திக் கொண்ட சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் செட்டியார் என்பவர், மைதாவுக்குப் பதிலாகக் குச்சிக் கிழங்கு மாவை விற்கலாம் என யோசனை பண்ணினார். அதற்காக அவர் கேரளப் பகுதிகளில் இருந்து குச்சிக் கிழங்கை வாங்கி மாவாக்கி விற்றார். மைதாவுக்கு மாற்றாக குச்சிக் கிழங்கு மாவு வெற்றிபெற்றது. குச்சிக்கிழங்கிலிருந்து தயாரானாலும் அதுவும் ‘மரிக்கன் மாவு’, ‘மைதா மாவு’என்றே அழைக்கப்பட்டது. போப்பட்லால் ஷா என்பவர் இதைக் குறித்துக் கேள்விப்பட்டு மாணிக்கம் செட்டியாரைப் பார்க்க வந்தார். இவர் மலேசியாவில் ஜவ்வரிசி வியாபாரம் செய்துவந்தவர். அந்தப் பகுதிகளை ஜப்பான் படைகள் கைப்பற்றிவிட்டதால் அங்கு வியாபாரம் செய்ய முடியாமல் அங்கிருந்து இந்தியா திரும்பினார். இங்கும் ஜவ்வரிசியை இறக்குமதி செய்ய முடியாத நிலை. இந்தச் சமயத்தில் மரிக்கன் மாவுக்கு மாணிக்கம் செட்டியார் ஒரு டூப்ளிகேட் செய்ததுபோல முயன்று பார்க்கலாம் என நினைத்தார்.

ஒரு போலி உருவாகிறது

மாணிக்கம் செட்டியார் தயாரித்துவந்த குச்சிக்கிழங்கு மாவைத் தொட்டிலில் இட்டு அதைக் குலுக்கிப் பார்த்தார் போப்பட்லால் ஷா . அந்த மாவு குருணை, குருணையாகத் திரண்டது. அந்தக் குருணைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு வறுத்தார். அது ஜவ்வரிசிபோல மாறியுள்ளது. இவ்வாறுதான் போலி ஜவ்வரிசி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு இருவரும் ஜவ்வரிசி தயாரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த வியாபாரம் 1943 வாக்கில் பிரபலமடைந்தது. பிறகு இந்தத் தொழில் சேலத்தை மையமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றது. ஆனால் 1944-ல் இதற்குத் தடை வந்தது. பிறகு இந்தத் தடை நீங்கியது. ஆனாலும் இந்தத் தொழிலைக் காப்பதற்காக, மாணிக்கம் செட்டியாரைத் தலைவராகக் கொண்டு சேகோ உற்பத்தியாளர் சங்கம் தொடங்கப்பட்டது. இப்படியாகக் குச்சிக் கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி உற்பத்தி பெருகியது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு அமைந்த இந்திய அரசும் இந்த உள்ளூர் ஜவ்வரிசிக்கு ஆதரவாக அசல் ஜவ்வரிசி இறக்குமதிக்குத் தடைவிதித்தது. ஆனால் 1950களுக்குப் பிறகு அசல் ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில்தான் இது அதிகமாக விற்பனையானது.

அசல் ஜவ்வரிசி சற்று மங்கலான நிறம் உடையது. போலி எப்போதும் உண்மையைவிடப் பிரகாசமாக இருக்குமல்லவா? குச்சிக் கிழங்கு ஜவ்வரிசி வெண்மையானது. அசல் ஜவ்வரிசிக்கும் குச்சிக் கிழங்கு ஜவ்வரிசிக்கும் சுவை அளவில் வித்தியாசமே இல்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அன்றைய கல்கத்தா வியாபாரிகள் சிலர் குச்சிக் கிழங்கு ஜவ்வரிசிக்குச் சாயமேற்றி விற்கத் தொடங்கினர்.

அசல் ஜவ்வரிசி இறக்குமதியாளர்கள் கல்கத்தா நகராட்சியிடம் புகார் தெரிவித்தனர். விளைவு, கல்கத்தாவில் குச்சிக்கிழங்கு ஜவ்வரிசிக்குத் தடைவிதிக்கப்பட்டது. ‘இது உண்ணத் தகுந்ததல்ல’ என்னும் கல்கத்தா நகராட்சியின் குற்றச்சாட்டை எதிர்த்து சேகோ உற்பத்தியாளர் சங்கம், பொது ஆய்வு நிறுவனத்தில் தங்கள் ஜவ்வரிசி மாதிரிகளைக் காட்டிச் சோதித்து, உண்ணத் தகுந்தது என்று சான்றிதழ் பெற்றனர். ஆனால் இப்போது கல்கத்தா நகராட்சி, குச்சிக்கிழங்கு மாவை, ஜவ்வரிசி (Sago) என அழைப்பதைத் தவறு எனச் சொன்னது. விவகாரம் நீதிமன்றம் சென்றது. ஆனால் இறுதியில் வெற்றி சேகோ உற்பத்தியாளர் சங்கத்திற்கே கிடைத்தது. குச்சிக் கிழங்கு மாவால் தயாரிக்கப்படும் போலி ஜவ்வரிசி அசல் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x