Published : 28 Aug 2015 01:35 PM
Last Updated : 28 Aug 2015 01:35 PM
பேய்களுக்கான காலம் இது. தொடர்ந்து பேய்ப் படங்கள் வெளியாகி வெற்றிபெற்றுக் கொண்டிருக்கின்றன. பேய்ப் படங்களைக் காண குடும்பம் குடும்ப மாய்த் திரையரங்கில் குவிகிறார்கள். குழந்தைகளுக்கும் இந்த சினிமா பேய்களை ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. சாமிகளுக்குத் திருவிழா கொண்டாடுவதுபோல பேய்களுக்கும் எதிர்காலத்தில் திருவிழா கொண்டாடினாலும் ஆச்சரியமில்லை. ஆனால் சீனாவில் இப்போதே பேய்த் திருவிழாவைக் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்.
ஆடி என்றால் இங்கே அம்மன் சாமிகளுக்கு உகந்த மாதம். ஆட்டம், பாட்டம் எனத் தமிழ்நாடு முழுவதும் திருவிழாத் தோரணங்கள் களைகட்டும். சாமிகளுக்கு நாம் ஆடி மாதத்தை ஒதுக்கித் திருவிழா கொண்டாடினால் சீனர்கள் பேய்களுக்கு ஆவணி மாதத்தை ஒதுக்குகிறார்கள். இந்தப் பேய்த் திருவிழா சீனா முழுவதும் கொண்டாடப்படும் பெரும் பண்டிகை.
ஆடல், பாடல், தீபத் திருவிழா என ஒட்டுமொத்த சீனாவும் திருவிழாவில் திளைத்துப் போய்விடுமாம். ஒவ்வோர் ஆண்டும் சீன நாட்காட்டிபடி ஏழாவது மாதத்தின் 15-ம் இரவு இந்தப் பேய்த் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். இந்தாண்டு ஆங்கில மாதம் ஆகஸ்டில் வருகிறது பேய் மாதம். பேய்த் திருவிழா ஆகஸ்ட் 28-ம் நாளான இன்று கொண்டாடப்படுகிறது.
இந்தப் பேய்த் திருவிழா சீனா மட்டுமல்லாது சீனர்கள் வசிக்கும் உலக நாடுகள் பலவற்றிலும் கொண்டாடப்படுகிறது. கி.பி. 483-ம் ஆண்டுலிருந்து சீனர்களுக்கு இந்தப் பேய்த் திருவிழா கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. இந்தப் பேய் மாதத்தின் தொடக்கத்தில் பேய்கள், தங்கள் உலகத்தில் இருந்து பூமிக்கு வரும் என்பது அவர்களின் நம்பிக்கை. அப்படி வரும் பேய்கள் நிறைவேறாத ஆசை கொண்ட பேய்களாக இருக்கும். அந்தப் பேய்கள் ஒரு மாத காலம் வரையில் பூமியில் இருக்கும்.
அந்த ஒரு மாத காலத்தில் மறுபடியும் பூமியில் பிறந்து தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முயலும். மனிதர்களின் உடலில் புகுந்துகொள்ள சமயம் பார்த்துக் கிடக்குமாம். இந்த மாதிரி பேய்களை அவர்கள், ‘பசிகொண்ட பேய்கள்’ என்கிறார்கள். அதனால் இந்தத் திருவிழாவே ஹங்க்ரி ஹோஸ்ட் ஃபெஸ்டிவல் எனப்படுகிறது. பேய்கள் பூமியில் இருக்கும் காலங்களில் சீனர்கள் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.
உதாரணமாகக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள். புது வீடு வாங்க மாட்டார்கள். தொழில் தொடங்க மாட்டார்கள். இரவில் வெளியே துணிகளைக் காயப்போட மாட்டார்கள். அதைப் பேய்கள் எடுத்துக்கொண்டு போய்விடுமாம். சாலையில் கிடக்கும் பணத்தை எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் இதெல்லாம் பேய்களின் வேலை என நினைக்கிறார்கள். அப்படிப் பணத்தை எடுத்துவிட்டால் பேய்கள் பின் தொடர்ந்து வீட்டுக்கு வந்துவிடும். சிவப்பு பேய்களுக்குப் பிடித்த ஆடை என்பதால் சிவப்பு, வண்ண ஆடையை சீனர்கள் இந்த மாதத்தில் தவிர்ப்பார்கள். சுவர்களின் அருகில் நிற்பதையும் தவிர்ப்பார்கள்.
ஏனெனில் பேய்கள் சுவர்களில் ஒட்டியிருக்குமாம். பேய்கள் பிடித்துப் போய் பின்னாலேயே வந்துவிடும் என்பதால் விசில் அடிப்பதையும், பாட்டை முணுமுணுப்பதையும் ஒரு மாத காலத்துக்கு நிறுத்திவிடுவார்களாம். அதுபோல குளத்தில் நீந்துவதையும் தவிர்ப்பார்கள். பேய்கள் நீருக்கடியில் மறைந்திருக்குமாம். இந்த ஒரு மாத காலத்துக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினை. ஒரு மாதம் காலம் முடியும்போது பேய்கள் தங்களது உலத்துக்குத் திரும்பிவிடும். இல்லையெனில் அந்த உலகத்துக்கான கதவு அடைபட்டுவிடுமாம். அதனால் தனியாகப் பூமியில் மாட்டுக்கொள்ள விரும்பாத பேய்கள் அந்த மாதம் முடிந்ததும் திரும்பிவிடுமாம்.
மு-லியன் என்னும் புத்த துறவி இறந்துபோன தன் பெற்றோர் களைத் தன் ஞான திருஷ்டியில் கண்டிருக்கிறார். அவரது தந்தை சொர்க்கத்தில் இருந்திருக்கிறார். தாயோ ‘பசிகொண்ட பேய்களுடன்’ஒரு பேயாகச் சுற்றிக்கொண்டிருந்திருக்கிறார். அவர் பசியைப் போக்கும் பொருட்டு மு-லியன் எடுத்துக்கொண்ட முயற்சிதான் பின்னால் திருவிழாவாக ஆகியிருக்கிறது. அந்தப் பேய்களின் பசியைப் போக்கும் பொருட்டு ஐவகைப் பழங்கள், பேய்களுக்குப் பிடித்த உணவு வகைகளும், பூக்களும், பத்து திசைகளிலும் படைக்கப்படுகின்றன.
பேய்கள் மரங்களில் வசிக்கும் என்பதால் மரங்களைச் சுத்தப்படுத்தி வைக்கின்றனர். நிறைவேறா ஆசையுடன் இருக்கும் தன் முன்னோர் களுக்குச் செய்யும் சேவையாகவும் இதைச் சீனர்கள் செய்கிறார்கள். ஆடி அமாவாசை அன்று நம் நாட்டிலும் பரவலாக முன்னோர்களுக்குப் படையல் வைப்பது வழக்கம். அந்தச் சடங்குடன் இதை ஒப்பிடலாம். ஆனால் சீனர்கள் இன்றைக்கு இதைக் கொண்டாட்டமாகவும் மாற்றியிருக்கிறார்கள். வெவ்வேறு கலை நிகழ்ச்சிகளையும் நடத்து கிறார்கள். இந்தப் பேய்ப் பண்டிகை உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. நம் ஊருக்குப் பண்டிகை வருதோ இல்லையோ இதை வைத்து பேய்ப் படம் வந்தாலும் வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT