Published : 14 Aug 2015 12:30 PM
Last Updated : 14 Aug 2015 12:30 PM
இப்படியும் ஒரு சாதனை
ஸ்வன் கேக்மயர் என்னும் ஜெர்மனிக்காரர் ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 4 அன்று இவரது 26-வது பிறந்த தினம் வந்தது. அதை அவர் தொடர்ந்து 46 மணி நேரம் கொண்டாடியிருக்கிறார். இதனால்தான் நீண்ட நேரம் பிறந்தநாள் கொண்டாடியவர் என்னும் சாதனையை இவர் ஏற்படுத்தியிருக்கிறார். அதனாலேயே இந்த ஜெர்மனிக் காரரின் பெயரை இன்று நீங்கள் உச்சரிக்கிறீர்கள்.
46 மணி நேரமும் என்ன செய்திருப்பார் என யோசிக்கிறீர்களா? ஆக்லாந்து, நியூசிலாந்து, பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா, ஹானலுலு ஆகிய நாடுகளுக்குப் பறந்து கொண்டேயிருந்திருக்கிறார். இதற்கு முன்னர் பாகிஸ்தானைச் சேர்ந்த பீம்ஜி 1998-ல் தனது பிறந்தநாளை 35 மணி நேரம் 25 நிமிடங்கள் கொண்டாடியதுதான் சாதனையாக இருந்துவந்தது. இதை முறியடித்துவிட்டார் இந்த ஜெர்மானியர்.
டாட்டூக்கள் ஜாக்கிரதை!
இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உடம்பில் டாட்டூக்கள் பொருத்திக்கொள்வது தொடர்பாக 2012 ஜூலையில் சில நிபந்தனைகளை ராணுவம் விதித்திருந்தது. இப்போது, அந்தக் கொள்கையில் மேலும் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. அதன்படி அதிகாரி பணிக்குத் தேர்வாகி நேர்காணலுக்கு வந்தவர்கள் உடம்பில் ஆட்சேபனைக்குரிய டாட்டூக்கள் பொருத்தப்பட்டிருந்தால் அவர்கள் நிராகரிக்கப்பட்டுவிடுவார்கள்.
ஆட்சேபணையற்ற டாட்டூகள் பொருத்தியிருந்தால்கூட மேற்கொண்டு எதுவும் டாட்டூ பொருத்தக் கூடாது என்றும் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. பழங்குடியினருக்கு அவர்களது பண்பாடு சார்ந்த டாட்டூக்கள் அனுமதிக்கப்படும். அது குறித்துப் பயப்பட வேண்டியதில்லை. ஆனால் அமெரிக்காவில் ராணுவ வீரர்கள் உடம்பில் டாட்டூ பொருத்திக்கொள்ள எந்தத் தடையுமில்லை.
இந்திப் படத்துக்கு ஜப்பானில் கௌரவம்
1995-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்திப் படம் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே. ஷாரூக் கானும் கஜோலும் நடித்த இப்படம் 19 ஆண்டுகளைக் கடந்து இருபது ஆண்டுகளாக ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் பெருமையைத் தொடர்ந்து இப்படம் ஜப்பானின் திரைப்பட விழா ஒன்றுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பண்பாடு சார்ந்த படங்களைத் திரையிடும் இந்த விழாவில் திரையிடப்படும் ஒரே இந்தியப் படம் இதுதான். இந்தப் படத்தின் பாடல்கள் இந்தியா முழுவதுமே சக்கைப் போடு போட்டவை என்பதை மறக்க முடியாது.
இவர் ஒரு நரேந்திர மோடிதான்!
நார்வே நாட்டைச் சேர்ந்தவர் குன்னார் கார்ஃபோர்ஸ். இவர் நமது பிரதமர் நரேந்திர மோடியைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். இதைப் படித்ததுமே புரிந்துகொண்டிருப்பீர்கள். ஆம் நாடு சுற்றுவதில் தான் இவர் மோடியை மிஞ்சிவிட்டார். 2008-ம் ஆண்டு 85 நாடுகளைச் சுற்றி முடித்த இவர் மீதமிருக்கும் நாடுகளையும் சுற்றி முடித்துவிட வேண்டும் என ஆசைப்பட்டார்.
அந்த ஆசையை 2013 மார்ச்சில் நிறைவேற்றி விட்டார். ஆம், வெறும் 37 வயதுக்குள் உலக நாடுகளைச் சுற்றி முடித்த பெருமையை அடைந்துவிட்டார். அது போக 2014-ம் ஆண்டில் 14 நாடுகளைச் சுற்றியிருக்கிறார். ஒரே ஆண்டில் இத்தனை நாடுகளுக்கும் போய்வந்ததும் ஒரு சாதனைதான். எப்படியெல்லாம் சாதிக்கிறாங்க!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT