Last Updated : 10 Mar, 2020 11:51 AM

 

Published : 10 Mar 2020 11:51 AM
Last Updated : 10 Mar 2020 11:51 AM

பேசும் படம்: மனசாட்சியை உலுக்கும் பீங்கான்!

இந்திய-கொரியக் கலைஞர்களின் பீங்கான் (செராமிக்), டெரக்கோட்டா படைப்புகளின் ‘எர்த் மேட்டர்ஸ்’ (Earth Matters) என்ற கண்காட்சி சென்னை தட்சிணசித்ராவில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில், நான்கு இந்தியக் கலைஞர்கள், நான்கு கொரியக் கலைஞர்கள் என எட்டு பேரின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இன்கோ சென்டர், கிளேஆர்ச் கிம்ஹே அருங்காட்சியகம், கலாக் ஷேத்ரா ஆகியவை இணைந்து இந்தக் கண்காட்சியை ஒருங்கிணைத்திருந்தன. இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த படைப்புகளை கலாக்ஷேத்ராவில் தங்கி இருநாட்டுக் கலைஞர்களும் உருவாக்கியிருக்கிறார்கள்.

“இந்தியா-கொரியா என இரண்டு நாடுகளின் பாரம்பரியத்தையும் இணைக்கும்விதமாக இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். வளமான பீங்கான் பாரம்பரியத்தைக் கொண்ட நாடு கொரியா. இந்தியாவில் டெரகோட்டாவுக்கு இருக்கும் பாரம்பரியத்தைப் போன்றது கொரியாவின் பீங்கான் பாரம்பரியம். கொரியாவின் இந்தப் பீங்கான் பாரம்பரியத்தை முன்னிறுத்தும் விதமாக இந்தக் கண்காட்சியை ஒருங்கிணைத்திருந்தோம். இயற்கை அம்சங்களான பஞ்சபூதங்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் இந்தக் கண்காட்சியில் படைப்புகள் இடம்பெற்றிருந்தன” என்று சொல்கிறார் இன்கோ சென்டரின் இயக்குநர் ரதி ஜாஃபர்.

இயற்கையும் மனிதனும்

இந்தக் கண்காட்சியில் சென்னையைச் சேர்ந்த கலைஞர் ராம்குமாரின் ஐந்து படைப்புகள் இடம்பெற்றன. தற்போது மனிதர்களால் பூமி எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை இவரது படைப்புகள் பிரதிபலித்தன. “இப்போது இயற்கைக்கும் மனிதனுக்குமான நட்பு முழுவதும் சிதைந்து போயிருக்கிறது. ஒரு காலத்தில் இயற்கையிடமிருந்து அனைத்தையும் கற்றுக்கொண்ட மனிதன், இப்போது அந்த இயற்கையையே அழிக்கத் தொடங்கியிருக்கிறான். எந்த வகையில் எல்லாம் மனிதன் இயற்கையை அழிக்கிறான் என்பதை விளக்கும் விதத்தில் என் படைப்புகளை உருவாக்கினேன்” என்று சொல்கிறார் ராம்குமார்.

கிராமங்களின் வளங்களை பெருநிறுவனங் கள் எப்படி அழிக்கின்றன என்பதைப் பிரதிபலிக்கும்படி இவரது ‘வயல்வெளி’ படைப்பு அமைந்திருந்தது. அத்துடன், இலங்கையில் உடல் நலிவடைந்த யானையை திருவிழாவின்போது ஒரு கோயில் வாசலில் நிற்கவைத்திருந்தார்கள். உடல் நலிவடைந்த அந்த யானையின் படம் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

“உடல் நலிவடைந்த அந்த யானையின் படம் என்னை மிகவும் பாதித்தது. காட்டில் சுதந்திரமாக இருக்க வேண்டிய யானையை மனிதன் எவ்வளவு மோசமாகக் கையாள்கிறான் என்பதை விளக்கும்படி, என் ‘யானை’ படைப்பை உருவாக்கினேன். மனிதன் கட்டுப்படுத்துவதால் உலகின் பெரிய விலங்கான யானை எதிர் கொள்ளும் துயரை என் படைப்பில் வெளிப்படுத்தி இருக்கிறேன்” என்று சொல்கிறார் ராம்குமார்.

படங்கள்: ரேகா விஜயஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x