Last Updated : 14 Aug, 2015 11:27 AM

 

Published : 14 Aug 2015 11:27 AM
Last Updated : 14 Aug 2015 11:27 AM

‘தனிமைப் பெண்’ணின் உள்ளத்திலே குடியிருக்க நாம் வரலாமா?

கூட்டமில்லாத ஹோட்டல்கள், காபி கடைகள் போன்றவற்றில் தனியே உட்கார்ந்து நீண்ட நேரம் சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களையோ காபி குடித்துக்கொண்டிருப்பவர்களையோ பார்த்திருக்கிறீர்களா?

ஜோடிகளும் இளைஞர் பட்டாளங்களும் அலைமோதும் பூங்காக்கள், கடற்கரை போன்ற இடங்களில் தனியாக உட்கார்ந்து எதையோ யோசித்துக்கொண்டும், கடலையோ வானத்தையோ வெறித்துக்கொண்டும் இருப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?

பார்ப்பதற்குக் கொஞ்சம் பரிதாபமாக இருக்கும் இல்லையா! மனிதர்கள் தனிமையாக இருக்கப் பிறந்தவர்கள் இல்லை என்பதால் அவர்கள் மீது நமக்கு இனம்புரியாத பரிதாபம் ஏற்படும். அதுவும் காதல் ஜோடிகளாய் நிரம்பி வழியும் இடத்தில் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒரு பையனோ பெண்ணோ உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் ‘ஐயோ பாவம், திறமையற்றவர்கள்’ என்று சொல்லத் தோன்றுமல்லவா!

தனிமையைப் போக்க நீங்கள் ஏதோ ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து எதையோ கொறித்துக்கொண்டிருக்கிறீர்கள். அப்போது ஒரு பெண் அங்கே வந்து உங்கள் எதிரே உட்கார்ந்துகொண்டு உங்களின் தனிமையைப் பகிர்ந்துகொள்ள முன்வந்தால் எப்படி இருக்கும்? கூடவே, உங்களை எங்காவது அழைத்துச்செல்வதாகக் கூறி அந்தப் பெண் கூப்பிட்டால் உங்கள் மனதில் எத்தனை பட்டாம்பூச்சி சிறகடிக்கும்!

‘பிராங்க் பாஸ்’ என்ற யூடியூப் இணையதளம் வெளியிட்டிருக்கும் வீடியோவைப் பாருங்கள். வெவ்வேறு ஹோட்டல்களில் தனியாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வெவ்வேறு இளைஞர்களை அணுகி நடுவயதுப் பெண் ஒருவர் பேச்சுக் கொடுக்கிறார். ‘உங்களுடன் உட்காரலாமா?’ என்று அந்தப் பெண் கேட்கிறார்.

ஒரு பெண்ணே வந்து இப்படிக் கேட்கும்போது கசக்குமா என்ன! அவர் அணுகும் ஒவ்வொரு இளைஞரின் மனதுக்குள்ளும் மணியடிக்கிறது. பேச்சு தனிமையைப் பற்றி நகர்கிறது. ‘பிறரின் தனிமையைப் போக்க விரும்புவீர்களா?’ என்று கேட்கிறார். ஓரிருவர் உடனே ‘ஆம்’ என்றும், வேறுசிலர் தயக்கத்துடனும் ஒப்புக்கொள்கிறார்கள். தன்னுடன் வரச் சொல்கிறார். தனது இடம் அருகேதான் இருக்கிறது என்று சொல்லியபடி தனித்தனியே ஒவ்வொருவரையும் காரில் அழைத்துச்செல்கிறார்.

காரில் முன்சீட்டில் தனக்கு அருகே ஒவ்வொருவரையும் அமர வைக்கிறார். எல்லோரும் சங்கடத்துடனே இருக்கிறார்கள். சைடுபார்வை பார்க்கிறார்கள். ‘கல்யாணம் ஆகிவிட்டதா?’ என்று ஒருவர் கேட்கிறார். சிரித்துக்கொண்டே அந்தப் பெண், ‘ஆம்’ என்கிறார்.

‘என்ன வேலை பார்க்கிறீர்கள்?’ என்று கேட்பதற்கு, ‘ஆசிரியர்’ என்கிறார். ‘இன்னும் நேரமாகுமா?’ என்று கேள்விக்கு ‘இதோ நெருங்கியாயிற்று’ என்று பதிலளிக்கிறார். தயக்கத்துடனும் பயத்துடனும் இருக்கும் ஒருவர் காரை நிறுத்தச் சொல்லிவிட்டு இறங்கிப் போய்விடுகிறார். கார் அந்த ‘தனிமைப் பெண்’ணின் இருப்பிடத்துக்கு வந்து நிற்கிறது. அடுத்தது என்னன்னு தெரிஞ்சுக்க மனசு படபடக்கிறதா, அவசரப்படாதீங்க பாய்ஸ்!

சஸ்பென்ஸ் உடையக் கூடாது, வீடியோவைப் பார்த்தே முடிவைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களுக்கு குட்பை. இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோ இணைப்புக்கு நேராகச் சென்றுவிடுங்கள். வீடியோவைப் பார்க்க முடியாதவர்கள் மட்டும் இனி படிக்கலாம்.

தன்னுடன் காரில் வந்த இளைஞரை உள்ளே அழைத்துச்செல்கிறார் அந்தப் பெண். உள்ளே அவர் காணும் காட்சி அவரை அப்படியே அசத்திப்போடுகிறது. அது ஒரு ‘முதியோர் இல்லம்’. உலகிலேயே மிகவும் தனிமையானவர்கள் வாழும் இடங்களுள் ஒன்று. அவர்களுடன் நேரத்தைப் பகிர்ந்துகொள்வதில் அவர்களுடைய பிள்ளைகள், உறவினர்கள் போன்றோருக்கு மட்டுமன்றி இந்தச் சமூகத்துக்கும் நேரமில்லை.

‘முதுமை தரும் மிகப் பெரிய அச்சம் தனிமைதான். யாரேனும் ஒரு முதியவருடன் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். அவர்களுக்கு உங்கள் நேரமும் துணையும் மிகவும் தேவை’ என்ற வாசகங்களோடு வீடியோ முடிகிறது.

எத்தனையோ யூடர்ன் வீடியோக்களை யூடியூபில் பார்த்திருப்போம். நம் மனதை யூடர்ன் அடிக்க வைக்கும் ஒருசில வீடியோக்களில் இதுவும் ஒன்று. இந்த வீடியோ பார்த்த பிறகு தெருவோரங்களிலும் பூங்காக்கள், கடற்கரை போன்ற இடங்களிலும் தனிமையில் உட்கார்ந்திருக்கும் முதிய ஆத்மாக்களுடன் ஒருசில நிமிடங்களாவது செலவிட நம்மால் முடிந்தால் அதுவே இந்த வீடியோவுக்குக் கிடைத்த வெற்றி!

வீடியோவுக்கான இணைப்பு: >https://goo.gl/GM065N

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x