Published : 14 Aug 2015 12:41 PM
Last Updated : 14 Aug 2015 12:41 PM
நாளை சுதந்திர நாள். சுதந்திர தினம் என்றதும் ஒவ்வொரு ஊரில் இருக்கும் இளைஞர்கள் குழுவுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.
பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இளைஞர்கள் குழுவாகச் சுதந்திர தினத்தைக் கொண்டாடி சுதந்திர உணர்வை வெளிப்படுத்தினார்கள். தற்போதைய இளைய தலைமுறையினர் இப்படியெல்லாம் குழுவாகச் சேர்ந்து சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில்லை, வேறு முறைகளில் சுதந்திர உணர்வை வெளிப்படுத்துகிறார்கள்.
போன தலைமுறை இளைஞர்களுக்கும், இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கும் இடையே சுதந்திர தினக் கொண்டாட்டம் எப்படி மாறியிருக்கிறது?
இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் வீதிக்கு ஒரு இளைஞர் குழு இருக்கும். சுதந்திர தினத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே கொண்டாட்டத்துக்கு நிதி கேட்டு வீடு வீடாக இளைஞர்கள் படியேறி வருவார்கள். தெருவாசிகளும் கையில் இருக்கும் காசைக் கொடுப்பார்கள்.
அந்தப் பகுதியில் உள்ள பெரிய மனிதர்களிடம் கூடுதலாக நிதியை வாங்கி சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்குப் போதுமான நிதியைச் சேகரிப்பார்கள். சுதந்திர தினத்துக்கு முதல் நாள் இரவே ஒலிபெருக்கியைக் கட்டி மைக் டெஸ்ட் பார்ப்பது முதலே தெருவில் உள்ள சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் வரை சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒட்டிக்கொள்ளும்.
விடியற்காலையில் தேசபக்திப் பாடல்களுடன்தான் ஒவ்வொரு வீட்டிலும் கண் விழிப்பார்கள். சுதந்திர தினக் கொடியேற்றும் வைபவம் பற்றி இளைஞர்கள் மாறி மாறி ஒலிபெருக்கி மூலம் குரல் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். தேசியக் கொடியையும், குண்டூசியையும் வாங்கி சட்டை பையில் குத்தியவுடனே ஒரு மிடுக்கு வந்துவிடும். காலை 8.30 மணிக்கு தேசியக் கொடியேற்றத்துடன் சுதந்திரத் தினக் கொண்டாட்டம் முறைப்படி தொடங்கும்.
மதியம் விளையாட்டுப் போட்டிகள், மாலையில் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழா, இரவில் வீடியோவில் திரைப்படம் என நாள் முழுவதும் சுதந்திர தினக் கொண்டாட்டம் களைகட்டும். ஒரு வீதி மட்டுமல்ல, இரண்டு தெரு தள்ளி அங்கும் ஒரு இளைஞர் குழு இதே போன்ற ஒரு ஏற்பாட்டுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ச்சியில் திளைக்கும். இதுதான் போன தலைமுறை இளைஞர்களின் சுதந்திர தினக் கொண்டாட்டம்.
போன தலைமுறையினர் இளைஞர்கள் குழு என்ற பெயரில் நடத்திய சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களை சில இடங்களில் அடுத்த தலைமுறையினரும் அதே பாணியில் கொண்டாடவும் செய்கிறார்கள். ஆனால், முன்புபோல் இல்லை. ஆரவாரங்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில்லை. வீதிக்கு வீதி இருந்த இளைஞர்கள் குழுக்களை காண முடிவதில்லை.
இளைஞர்களின் சுதந்திர தினக் கொண்டாட்டமும் மாறிவிட்டது. இளைஞர்கள் குழுவாக இருந்தது மாறி, நண்பர்கள் வட்டமாகச் சுருங்கிவிட்டார்கள். தெருவில் நான்கைந்து நண்பர்கள் மட்டும் கூடி, காலையில் கொடியேற்றி, இனிப்பு வழங்கி அதோடு சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முடித்துக் கொள்கிறார்கள்.
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக இணையதளங்களில் தேசியக் கொடியுடன் ஒரு படத்தைப் போட்டு வாழ்த்துகள் கூறிக் கொள்கிறார்கள். இன்னும் சில இளைஞர்கள், இளைஞிகள் ப்ரொபைல் படத்தில் தேசியக் கொடியை மாற்றி வைத்துக் கொள்கிறார்கள்.
‘ப்ரவுட் டு பி இந்தியன்’ என்ற வார்த்தையை இணையதளங்களில் அதிகம் உலவவிடுவார்கள். இன்னும் சில இளைஞர்கள் தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி இரு சக்கர வாகனங்களில் வலம் வருகிறார்கள். முகத்தில் தேசியக் கொடியை வரைந்துகொண்டு சுதந்திர உணர்வை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள்.
இளைஞர்கள் சுதந்திர தினக் கொண்டாட்டம் பற்றி சென்னையைச் சேர்ந்த ஜெய்கணேஷ் என்ன சொல்கிறார்? “இப்போது எல்லாமும் மாறிவிட்டது. இந்த மாற்றத்தை எதுவும் செய்ய முடியாது. இப்போது அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவிட்டன. ஒவ்வொரு இடத்திலும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் பெருகிவிட்டன. முன்பு இளைஞர்கள் கொண்டாடிய சுதந்திர தினக் கொண்டாட்டத்தை இந்தச் சங்கங்கள் எடுத்துக்கொண்டுவிட்டன. காலையில் தொடங்கி மாலை வரை இவர்கள் போட்டிகள்.
கலை நிகழ்ச்சிகள் வைத்து சுதந்திர தினத்தைக் கொண்டாடிவிடுகிறார்கள். அதனால், இளைஞர்களுக்குக் கொண்டாட்ட வாய்ப்பு இப்போது குறைந்துவிட்டது” என்கிறார் ஜெய்கணேஷ்.
தலைமுறை மாறுவதற்கு ஏற்ப இளைஞர்களின் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் மாறினாலும், அவர்கள் வெளிப்படுத்தும் நாட்டுப் பற்று எப்போதும் மாறுவதில்லை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT