Published : 17 May 2014 05:27 PM
Last Updated : 17 May 2014 05:27 PM
விமானப் படை போன்ற மத்திய அரசுப் பணிகளுக்கு என்றைக்கும் போட்டாபோட்டி இருக்கும். ஒரு காலத்தில் மிக எளிதாகக் கிடைத்த இம்மாதிரியான வேலைவாய்ப்பு பின்னாட்களில் குதிரைக் கொம்பாகிப் போனது. தேர்வு முறையிலும் நிறைய கட்டுப்பாடுகள் வந்தன. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும். பிறகு உடற்தகுதித் தேர்வையும் எதிர்கொள்ள வேண்டும். தேர்வில் தேறிவிடும் சிலர் உடற்தகுதித் தேர்வில் கோட்டை விட்டுவிடுவார்கள். சிலர் எழுத்துத் தேர்வில் கோட்டை விட்டுவிடுவார்கள். இரண்டையும் திறம்படச் செய்து முடிப்பவர்களுக்குத்தான் வேலை கிடைக்கும். இந்த விதமான சிக்கல்கள், கஷ்டமான தேர்வுகள் எதுவும் இல்லாமல் சீனாவில் சிலருக்கு வேலை கிடைத்திருக்கிறது. அவர்கள் வேறு யாருமல்ல. இங்கே நம் ஊரில் சேட்டைக்குப் பெயர்போன குரங்குகள். சீனாவில் இந்தக் குரங்குகளுக்குப் பொறுப்பான வேலை கொடுத்திருக்கிறார்கள். அதுவும் The People's Liberation Army Air Force-ல்.
பெய்ஜிங் அருகே உள்ள விமான தளத்தைப் பாதுகாக்க இந்தக் குரங்குகளைப் பணியில் அமர்த்தியுள்ளார்கள். ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி கொடுப்பதுபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட குரங்குகளுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. பறவைகள் மூலம் விமானங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுப்பது இந்தக் குரங்குகளின் முதன்மையான பணி. சீனாவின் வடபகுதியில் அமைந்துள்ள இந்த விமானப் படைத் தளத்தில் வரத்துப் பறவைகள் அதிக அளவில் ஆண்டுதோறும் கூடுகிறதாம்.
இந்தப் பறவைகள் விமானப் படை விமானங்களுக்கு இடையில் வந்து சிக்கிக்கொள்கின்றன. சமயங்களில் விமான எஞ்சினுக்குள்ளும் சிக்கிவிடுகின்றன. இதனால் விமானங்கள் விபத்துக்குள்ளாகி விமானிகள் இறக்கும் ஆபத்தும் உள்ளது. மேலும் பறவைகள் இறப்பதும் பெருகிவருகிறது. இதைத் தடுக்க வழி தெரியாமல் விமானப் படை உயர் அதிகாரிகள் விழி பிதுங்கினர். பட்டாசுகளை வெடித்துப் பார்த்தனர். துப்பாக்கியால் சுட்டும் பார்த்தனர். அந்தச் சமயத்தில் மட்டும் கலைந்து ஓடும் பறவைகள். பிறகு மீண்டும் கூடிவிடும். கடைசியாகத்தான் அவர்கள் இந்த யோசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இப்போது அவர்களைக் காக்க இந்தக் குரங்குகள் வந்துவிட்டன. குரங்குகள் அருகில் உள்ள மரங்களில் உள்ள கூடுகளை அழிக்கக் கற்றுவருகின்றன. குரங்குகள் எங்களுடைய விசுவாசம்மிக்க வேலைக்காரன் என ஒரு உயரதிகாரி புன்னகையுடன் சொல்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT