Published : 28 Aug 2015 03:00 PM
Last Updated : 28 Aug 2015 03:00 PM

ஐ.டி.உலகம் 12: விடுமுறை என்ற பெருங்கனவு!

நெருங்கிய நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு நண்பர்கள் கும்பலுடன் செல்வது, அன்பான தாத்தா பாட்டியின் பிறந்த நாள் விழாவில் சகோதர சகோதரிகளுடன் இணைந்து கலாட்டா செய்வது போன்றவையெல்லாம் ஐடி துறை நண்பர்கள் பற்றிய சினிமா கதைகளில் சாதாரணமாக இடம்பெறுபவைதான். ஆனால், யதார்த்தத்தில் இது மிகப்பெரிய கனவாகும். இன்று கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களுக்கும் இது கனவு தான்.

ஐடி பணியாளராக ஒருவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது வருடத்துக்கு 12 சி.எல், மாதத்துக்கு அரை நாள் ‘சிக் லீவ’, அது தவிர பிறந்த நாள், திருமண நாளைக் கொண்டாட ‘மை லீவ’ உண்டு என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

“3 பேர் பார்க்க வேண்டிய வேலையை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் விடுப்பு எடுத்தால் எனது நண்பர் மிகவும் கஷ்டப்படுவார் என்பதால் பல நேரங்களில் விடுப்பு எடுப்பதைத் தவிர்த்து விடுவேன். பத்து நாட்களில் செய்ய முடிந்த காரியத்தை ஐந்து நாட்களில் செய்து தருவதாக கிளைண்டிடம் சொல்லி விட்டு, நம்மிடம் அழுத்தம் கொடுப்பார்கள்” என்று நடைமுறையை விளக்குகிறார் ஐடி நிறுவனமொன்றின் தொழில்நுட்ப ஊழியர் சதீஷ்.

விடுமுறை பற்றி நினைக்கத் தொடங்கினாலே “லீவ் இருக்கிறது என்பதற்காக எடுக்கக் கூடாது. புராஜக்ட் முடித்தாக வேண்டும்” என்று மேலாளரின் குரல் நினைவில் வந்து அதட்டும்.

‘தி இந்து’ ஐடி தொடர் கட்டுரைகளைப் பார்த்து, கடிதம் எழுதியிருந்த வாசகர்களில் ஒருவரான தூத்துக்குடியைச் சேர்ந்த தி.மணி, “அமெரிக்க நிறுவனத்திடமிருந்து ‘கால்’ வரும். அது முடித்த பின்னர்தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும். இப்படி ஒரு நாள் வேலையை இரவு 11 மணிவரை நீட்டிப்பார்கள். இதற்கு ஓவர் டைம் சம்பளம் கிடையாது. மதிய உணவு இடைவேளை கிடையாது. பொது விடுமுறை நாளில் வேலை வாங்கினால் இரட்டிப்புச் சம்பளம் என்ற விதியும் அமலாவதில்லை” என்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளைக் குறிப்பிட்டிருந்தார். பணியின் காரணமாக நேரம் கடந்து கிளம்பும் பெண்களுக்கு நிறுவனமே வாகன வசதி ஏற்படுத்திக் கொடுப்பதும் தற்போது குறைந்துவிட்டது.

வேலைநேரம் நீட்டிப்பதும், ஊழியர் பற்றாக்குறையும், விடுமுறையை மறுப்பதும் ஏன் தொடர்கின்றன என்று அறிவுசார் பணியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சீதாராமன் கூறும்போது, “ஒரே தொழிலாளியிடமிருந்து எத்தனை அதிகமான உழைப்பு நேரத்தைப் பெற முடியுமோ அதுவே லாபத்தை அதிகரிப்பதற்கான குறுக்கு வழி. இதனால் அந்த ஊழியரின் தனிப்பட்ட வாழ்வில் என்ன நடக்கும் என்பது பற்றி நிறுவனம் கவலைப்படாது. நிறுவனத்தில் ஊழியர் பற்றாக்குறையையும், நிரந்தரமற்ற நிலையைத் தக்க வைப்பதன் மூலம் உளவியல் நெருக்கடியை ஏற்படுத்தி அதிகமாகச் சுரண்டுகின்றனர். மிகப்பெரும் நிறுவனங்கள் கூட இந்த நிலையை மாற்றவில்லை என்பது அபாயகரமானது” என்கிறார்.

விடுமுறை வழங்காமல் தவிர்ப்பது ‘முதல் நிலை’ சுரண்டல், முக்கிய விடுமுறை நாட்களிலும்கூட வேலையை நிறுத்தாமல் தொடர்ந்து உழைக்கச் சொல்வது அடுத்த கட்ட சுரண்டல். கடந்த தேர்தலின்போது, பல நிறுவனங்கள் விடுமுறை வழங்காமல், தேர்தல் ஆணையம் தலையிட நேர்ந்தது. ஆனால், எந்த அரசும் இப்படிப்பட்ட தலையீடுகளைச் செய்வதில்லை.

“புராஜெக்ட்டை விரைவில் முடித்தாக வேண்டும். அசாதாரண கால இடைவெளியில் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தாலும், எதிர்க் கேள்வி கேட்காமல் செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் இன்றைய நிலை. இந்த வருட சுதந்திர தினத்தன்று அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. எங்கள் குழுவினர் வேலை பார்த்தபடிதான் இருந்தோம்” என்று அதிரவைக்கிறார் பிரபல ஐடி நிறுவன ஊழியர் வெங்கடேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x