Published : 14 Aug 2015 12:37 PM
Last Updated : 14 Aug 2015 12:37 PM
கல்லூரியில் புதிதாகச் சேர்ந்தவர்கள் ‘எப்படி இருக்கும்?’ என்ற ஆவலோடும் ‘நம்மள என்ன பண்ண சொல்லப் போறாங்களோ?’ என்ற பயத்தோடும் அந்த நாளை எதிர்நோக்கியிருப்பார்கள்.
அன்றுதான், ஜீன்ஸ் அணியும் மாணவர்கள் பலர் முதல் முறையாக வேட்டி கட்டுவார்கள். அவர்களுக்குள் ‘பாரம்பரிய உடையை அணிந்துள்ளோம்’ என்கிற பெருமிதம் இருக்கும். இருப்பினும், ‘‘மச்சி வேட்டி இடுப்புல நிக்குமா? இல்ல ‘படார்’னு அவுந்துருமானு பயமா இருக்குடா’’ என்பார்கள். சுடிதார் அணியும் மாணவிகள் பலர் ‘‘ஒழுங்கா சேலை கட்றது எப்டினு சொல்லிக் கொடும்மா?’ இல்ல பசங்கெல்லாம் என்னய கிண்டல் பண்ணுவாங்கம்மா’’ என்று அம்மாக்களிடம் கெஞ்சுவார்கள்.
அந்த நாள் எது? கல்லூரிகளில் நடத்தப்படும் ‘வெல்கம் பார்ட்டி’தான். தற்போது, கல்லூரிகள் அனைத்தும் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் ‘ஃப்ரஷர்ஸ் டே’ கொண்டாட்டத்தில் மும்முரமாக இருக்கின்றன. இதில் சுய அறிமுகம், ஆசிரியர்களின் அறிவுரை, சீனியர்களின் கலாய்த்தல் என்பது வழக்கமான போக்கு. சரி, ‘வெல்கம் பார்ட்டி’யில் கலந்துகொண்ட முதலாமாண்டு மாணவ, மாணவிகள் சிலரது அனுபவங்கள் எப்படி இருந்தன என்பதைப் பார்த்துவிடுவோமா?
வெல்கம் பார்ட்டியில் கலந்து கொள்வதற்கு முன் ‘பொண்ணுங்கட்ட பேசுறதுலாம் நம்மளுக்கு சரிப்பட்டு வராது பாஸ்’ என்று சொல்லிக்கொண்டு இருந்தவர் தினேஷ். அதற்கு அவர் சொன்ன ‘ஸ்டிரியோடைப்’ காரணம் “நான் ப்ளஸ் 2 வரைக்கும் படித்தது ஆண்கள் பள்ளி”. ஆனால், இன்று சக தோழிகளிடம் சகஜமாகப் பேசிப் பழகும் அவர், “வெல்கம் பார்ட்டியில் சீனியர்ஸ்லாம் என்னைய பாட்டு பாடச் சொன்னாங்க.
எனக்கு ஓரளவுக்குப் பாடத் தெரியும். ஆனா, பொண்ணுங்க முன்னாடி பாடணும்னதும் உள்ளுக்குள் பயம் வந்துருச்சு. வேற வழி இல்லாம எந்திருச்சுட்டேன். மைக்க கையில் பிடிச்சதும் கால் நடுங்க ஆரம்பிச்சுருச்சு. எல்லாரும் கை தட்டி விசில் அடிச்சாங்க. எப்படியோ சமாளிச்சு பசங்க பக்கமா பாத்துக்கிட்டே பாடிட்டேன். வெல்கம் பார்ட்டி முடிஞ்சதும் நிறைய பொண்ணுங்க வந்து கை கொடுத்து நல்லா பாடுனேன்னு வாழ்த்து சொன்னாங்க. அன்னைக்குத்தான் எனக்குள்ள இருந்த பயம் கொஞ்ச கொஞ்சமா போக ஆரம்பிச்சுச்சு. இப்ப எந்தப் பொண்ணுட்ட பேச சொன்னாலும் தைரியமா பேசுவேன்” என்றார்.
அங்கயற்கண்ணி பாக்குறதுக்குத்தான் அமைதி. பேச ஆரம்பிச்சதும் போதும் போதும் நிறுத்துங்கனு சொல்றவரைக்கும் பேசுனாங்க. ஏன்னா அவங்க அனுபவம் அப்படி. “எங்க ஊரில இருக்கிற மத்த காலேஜவிட எங்க காலேஜ்ல ஃப்ரஷர்ஸ் டே கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். டான்ஸ், பாட்டு, ரங்கோலி, ஜெஸ்ட் எ மொமண்ட், எஸ்சே ரைட்டிங்க்னு நிறைய புரோக்ராம்ஸ் இருக்கும். ஃப்ரஷர்ஸ் டேக்கு இருபது நாள் முன்னாடியே நம்ம எதுல கலந்துக்க போறோம்னு சொல்லிறனும்.
எல்லா டிப்பார்ட்மெண்ட்டும் ஒண்ணாதான் கொண்டாடு வாங்க. எங்க ஃப்ரஷர்ஸ் டேல என்னோட பெர்ஃபாமன்ஸ் வைச்சு என்னை ‘மிஸ் ஃப்ரஷர்’னு எல்லாரு முன்னாடியும் அறிவிச்சாங்கப்பா. அத இப்ப நெனச்சாலும் புல்லரிக்குது. எனக்குள்ள இருந்த திறமைய எல்லாருக்கும் காட்டிய நாள மறக்கவே மாட்டேன்’’ என்று பூரிப்புடன் பேசினார் அங்கயற்கண்ணி.
வெல்கம் பார்ட்டி அன்று லீவ் எடுத்துவிடலாம் என்று எண்ணி இருந்தவர் கணேஷ். ஆனால், சீனியர்ஸின் கட்டாயத்தின் பேரில் தான் கலந்துகொண்டார். “எல்லாரையும் மாதிரி நானும் வெல்கம் பார்ட்டி சீனியர்ஸ் ஜூனியர்ஸை ரேக் பண்றத்துக்குனு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, எங்க டிப்பார்ட்மெண்ட் சீனியர்ஸ் யாருமே இத நீ செஞ்சுதான் ஆகணும்னு கட்டாயப்படுத்தல.
உங்களோட திறமையைத் தைரியமா வெளிப்படுத்துங்கனு எங்கரேஜ் தான் பண்ணாங்க. நல்ல டான்ஸ் ஆடுற சீனியர் ஒருத்தர் என்னை மேடைக்கு கூட்டுட்டு போய் டான்ஸ் ஆட கத்துக்கொடுத்தார். அப்ப எனக்குள்ல இருக்குற கூச்சம் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சு நம்மலாலயும் முடியும்னு நம்பிக்கை வந்துச்சு” என்று தன் பயம் கரைந்து நம்பிக்கை துளிர்த்த அனுப வத்தைப் பகிர்ந்தார் கணேஷ்.
பார்ப்பதற்கு பக்கா மாடர்ன் டைப் பார்வதி. அவர் வெல்கம் பார்ட்டியில் தன் பேச்சால் சீனியர் அனைவரையும் சைலண்ட் மோடுக்கு மாற்றி இருக்கிறார். “என்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாம் வெல்கம் பார்ட்டினதும் பயத்துலதான் இருந்தாங்க.
ஆனா, எனக்கு அத நெனச்சு துளிகூடப் பயம் இல்ல. முழுக்க முழுக்க சந்தோஷம் மட்டும் தான். நம்ம கிளாஸ் மேட்ஸ், நம்ம சீனியர்ஸ் அவங்க முன்னாடி பெர்ஃபார்ம் பண்றதுக்கு எதுக்குப் பயப்படணும்” என்ற பார்வதியின் பேச்சிலேயே துணிச்சல் தெரிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT