Published : 10 Jul 2015 02:12 PM
Last Updated : 10 Jul 2015 02:12 PM
என் தோழிக்குக் கல்யாணமாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவள் கணவனுக்கும் அவளுக்குமிடையே இதுவரை கணவன் மனைவி உறவு எதுவும் இல்லையாம். அவர் அருகில்கூட அவள் செல்லக் கூடாதாம். ஏதாவது தேவை என்றால் அதை மட்டும் அவளிடம் சொல்வாராம். அவளைத் திட்ட வேண்டும் என்றால் மட்டும் மணிக் கணக்கில் திட்டுவாராம். என் தோழி வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண். அவளுடைய கணவர் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். வரதட்சணையும் வாங்கிக்கொண்டு தான் தோழியை அவர் திருமணம் செய்திருக்கிறார்.
தோழி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவளுடைய பெற்றோர் தோழியின் கணவனுக்கு வாடகை கிடைக்கும் ஒரு கடையையும் கொடுத்திருக்கிறார்கள். அந்த வாடகையையும் வாங்கிக் கொள்வாராம். அதில்கூட அவளுக் கென்று எதுவும் கொடுப்பதில்லையாம். வீட்டு வேலைகளை அவள்தான் செய்கிறாள். அதில் ஏதாவது சிறு தவறு நேர்ந்தால்கூட அதைக் குத்திக் காட்டித் திட்டுகிறாராம். அவருக்குத் தன்பால் உறவு வேறு இருக்கிறதாம். அவரே போன் செய்து பிறரை அழைக்கிறாராம். இப்படியெல்லாம் நடந்துகொண்டு அவளைக் கொடுமைப்படுத்துகிறார்.
தோழியின் பெற்றோருக்கு இந்த விவரம் தெரியாதாம். அவள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் மகளுக்கு வாழ்க்கை சரியாக அமையவில்லை என்பது அவளுடைய பெற்றோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அவர்கள் தெரியாததுபோல் நடந்துகொள்கிறார்கள். நான் அவளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லிவிட்டேன். தோழியின் கணவர் குடும்பமே கிரிமினல் குடும்பமாகத் தெரிகிறது. கொஞ்ச நாள் சென்ற பின்னர் உன் சொத்து நகை எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு உன்னை வேலையாள் போல நடத்தப்போகிறார்கள் என நான் அவளை எச்சரித்துவிட்டேன். உன்னைத் தொடக்கூட மாட்டார், பேச மாட்டார் எனும்போது ஏன் நீ இங்கே இருக்க வேண்டும்? உன் பிறந்த வீட்டுக்குப் போய்விடு எனச் சொல்கிறேன். ஆனால் அவளுக்கு ஒரே குழப்பாக இருக்கிறது என்கிறாள். பயப்படுகிறாள். முடிவெடுக்க முடியாமல் திணறுகிறாள். நீங்கள் ஒரு வழிகாட்டியாக இருந்து அவளுக்கு ஆலோசனை சொல்லுங்களேன். என் தோழியின் கணவரைப் போன்றவர்களுக்குப் புத்திவரும்படி உங்கள் ஆலோசனை அமைந்தால் மிகவும் நல்லது என விரும்புகிறேன்.
உங்கள் தோழியின் கணவருக்குப் புத்தி சொல்லச் சொல்லி தோழியின் சார்பாக நீங்கள் கேட்கும் முயற்சியைப் பாராட்டுகிறேன். அவரை மாற்ற நான் வழி சொல்வதைவிடத் தோழிக்கு ஆலோசனை சொல்வது சாத்தியம். இங்கு மூன்று பிரச்சனைகள் தெரிகின்றன: ஓரினச் சேர்க்கை, வன்முறை, பணம் கறப்பது. உங்கள் தோழி பெற்றோருக்குக்கூடச் சொல்லாமல் மூன்று வருடங்களாக யாருக்காகத் தியாகம் செய்துகொண்டிருக்கிறார்?
யார் கிரீடம் வைத்துப் பாராட்டப் போகிறார்கள்? உடனே செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. தோழியின் வாழ்க்கையைப் பற்றி அவர்தான் தீர்மானிக்க வேண்டும். தீர்மானம் எதுவானாலும், தன் காலில் அவர் முதலில் நிற்க வேண்டும். ஓரினச் சேர்க்கை உறவில் இருப்பவர்களில் ஒரு சிலர் அதை மட்டுமே நாடுவார்கள்; மறுபாலினத்தவருடன் உறவு கொள்வது இவர்களுக்கு இயலாது. இது மாறும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது வீண். தோழியைத் தவிர்க்கவே அவர் வன்முறையைக் கேடயமாகக் கொண்டுள்ளாரோ?
தோழியின் பெற்றோர் மாப்பிள்ளையைத் தட்டிக்கேட்க உரிமை உண்டு. ஆனால் பலன் எதுவும் இருக்காது! அவருடன் தொடர்ந்து வாழ்ந்தால் குட்டக்குட்டக் குனிந்துகொண்டே இல்லாமல் தன்னம்பிக்கையோடு வாழ்வது என்பது மலையேற்றம் மாதிரி; தோழி களைத்துப் போவார். இடையறாது தன்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். கணவருடன் சண்டை போடச் சொல்லவில்லை; ஆனால் அவர் பேச்சுக்கு ஆடுவதை நிறுத்தச் சொல்கிறேன்.
பெற்றோரிடம் உண்மையைச் சொல்லி அவர்களின் அங்கீகாரத்தோடு வெளியே வரலாம்; ஆனால் தொடர்ந்து அவர்களின் ஆதரவு இருக்குமா? அதைத் தாண்டி ஒரு பெண் தனியாக வாழ முடியும்; பெண்களுக்குத் தங்கள் பலம் தெரிவதில்லை! தன் வாழ்க்கையைத் தன் விருப்பப்படி அமைத்துக்கொள்வது தோழியுடைய உரிமை.
நான் இன்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். நான் எப்போதும் அடுத்தவர்களின் சிக்கல்களைப் பற்றியே யோசிக்கிறேன். நண்பர்கள் யாராவது உடல் நலக் குறைவு என்று சொல்லிவிட்டால் என் மனம் வருந்தும். அவர்களது உடல் நலம் சரியாக வேண்டுமே எனக் கவலைகொள்வேன். இதைப் போன்ற விஷயங்களால், எனது குறிக்கோள் மீது செலுத்த வேண்டிய கவனம் சிதறுகிறது.பெரும்பாலான நேரங்களில் நண்பர்கள் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் உலக நடவடிக்கைகள் பற்றியும் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். உலகம் குரூரமானதாக இருக்கிறது. யாரையும் நம்ப முடியவில்லை.
என்னைப் பாதுகாப்பற்றவளாக உணர்கிறேன். எனக்கு நெருங்கிய நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் மீது எனக்கு அதிகப் பிரியம் இருக்கிறது. அவன் மீதான பிரியம் காதலாக மாறிவிடுமோ எனப் பயப்படுகிறேன். சாலையில் செல்லும் யாராவது ஒருவர் துப்பினால்கூட எனக்குக் கடுங்கோபம் வருகிறது. சில மணித் துளிகள் இந்தக் கோபம் நீடிக்கிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது? கோபம் தாள முடியாமல் சாபமிடுகிறேன். இதனால் எனது தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. சரிவரப் படிக்க முடிவதில்லை. இந்தச் சிக்கல்கள் எல்லாவற்றிடமிருந்தும் வெளியேறிவிட வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
உயர்ந்த சிந்தனைகள் இருந்தால் மட்டும் போதாது, தோழியே; அவை செயலாக மாறாவிட்டால் வெட்டிப் பொழுது கழித்ததாக ஆகிவிடும்! தொண்டு எனும் மதிப்பு (Value) உங்களுக்கு முக்கியமானதாக இருப்பதால், நீங்கள் தொண்டு செய்யக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தேடிப்போகிறீர்கள். பாராட்டுகிறேன். ஆனால் ஊரை, நாட்டை, மக்களை மாற்றுவது உங்களால் முடியுமா? குறிக்கோளை வெகுதொலைவில் வைத்ததால், அடைய முடியாமல் தொலைந்துபோய், சோர்ந்துவிட்டீர்கள். முதலில் உங்கள் தெருவில் உள்ள மக்களிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டுவாருங்கள்.
பின் உங்கள் சேவைகளின் வீச்சைக் கூட்டுங்கள். பாபா ஆம்தேயின் ‘ஆனந்த்வன்’ ஆகட்டும், அன்னா ஹஸாரேயின் ‘மாதிரி கிராம’மாகட்டும் (Model village), திடீரென்று முளைத்த காளான்கள் அல்ல. பல வருட உழைப்பு, தடைகளைத் தாண்ட நடந்த போராட்டங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய கனவுகள். உங்கள் மற்ற கடமைகளைத் தவறவிடாமல், உங்களால் முடிந்த தொண்டுகளைச் செய்யலாம்; அதை விட்டுவிட்டு உங்களை மீறிய விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட்டு நேரத்தை விரயம் செய்யாதீர்கள். “வாழ்க்கை எளிமையானது; நாமாக அதைச் சிக்கலாக்க வேண்டாமே!” என்று கன்ஃப்யூஷியஸ் சொன்னது போல், பல விஷயங்களையும் மண்டையில் போட்டுக் குடைந்துகொண்டு இருக்கிறீர்கள். பலருக்கும் புரியும் யதார்த்தங்கள் உங்களுக்கு ஏன் புரியவில்லை என்பதை அறிய உங்களைப் பற்றி மேலும் சில தகவல்களைச் சேகரிக்க வேண்டும். உங்களால் இந்தச் சிந்தனைகளைக் கட்டுப்படுத்தியே வைக்க முடியவில்லை என்றால், ஒரு மனநல மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT