Published : 17 Jul 2015 12:58 PM
Last Updated : 17 Jul 2015 12:58 PM

உறவுகள்: மறுபடியும் வசந்தம் வரும்

சிறு வயதிலிருந்தே பயந்த சுபாவம் கொண்டவள் நான். என் சுபாவத்தை மறைத்துக்கொள்ள அதிகமாகப் பேசுவேன், குழந்தைத்தனமாக நடந்துகொள்வேன். என் 16 வயதில், பள்ளியைக் கண்டு மிரண்டுபோயிருந்த என்னிடம், குடும்பத் தகராறு காரணமாக என் பெற்றோர் மேல் உள்ள கோபத்தை என் உறவினர் என் மேல் காண்பித்தார்.

இதனால் நிலைமை மோசம் ஆனது. அதுவரை படிப்பிலும் திறமையிலும் நன்றாய் இருந்த நான், பள்ளி செல்ல முடியாமல், மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். 6 வருடங்களாக மருந்து எடுத்துக்கொள்கிறேன். எந்த விஷயத்தையும் முழுமையாக முடிக்க முடிவதில்லை. கல்லூரி சென்று படிக்க முடியவில்லை. ஆசிரியர் பயிற்சியை ஒரு வருடம் மிகுந்த சிரமத்துடன் கற்றேன்.

சில வருடங்களாக ஒளிப்படத்துறை மீது ஆர்வம் கொண்டிருக்கிறேன். என்னால் அதில் எதுவும் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். என் தோல்விகளைச் சுட்டிக்காட்டி என்னைத் தோல்வியின் மறு உருவமாகக் காண்கிறார்கள். என்னால் முடியாது என நானே நம்ப ஆரம்பித்துவிட்டேன். ஆனால் நான் இப்படி இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. இப்படி என் குடும்பத்தையும் நண்பர்களையும் சார்ந்தே நான் இருந்துவிடுவேனோ என்று பயமாக உள்ளது. என் குடும்பம் இல்லாமல் என்னால் எதுவும் இயலாது என என் நண்பர் கூறுகிறார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் துணையின்றி இந்த உலகில் வாழ முடியாதா? என் வாழ்க்கை இவ்வளவுதானா? மிகவும் குழப்பமான மனநிலையில் உள்ளேன். தங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

உங்களை யார் என்ன காரணத்துக்காக மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள் என்று தெரியவில்லை. இப்போதும் மருந்து சாப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். மனநல மருத்துவரிடம் ‘ரிவ்யூ’வுக்குப் (review) போகாமல், தொடர்ந்து அதே மருந்தை எடுத்துக்கொள்வது நல்லதல்ல. இப்போது உங்கள் நிலையைப் பற்றித் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதால்தான் கவலைப்படுகிறீர்கள்.

நீங்கள் வாழ்க்கையில் அடைந்த தோல்விகளும், பிறர் உங்களை மட்டமாகப் பேசியதும் உங்கள் சுயமதிப்பைக் குறைத்திருக்கின்றன. சுதந்திரமாக, யாரையும் சார்ந்து இல்லாமல் நீங்கள் வாழ நினைப்பதைப் பாராட்டுகிறேன். ஆனால் எங்கே ஆரம்பிப்பது, என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் குழப்பம், சரியா? கடந்த காலத்தைப் பற்றி வருத்தப்படுவதிலும், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதிலும் நிகழ்காலத்தைக் கோட்டைவிடுகிறீர்கள். இன்று என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

ஒரு நாளில் தூங்கி எழுந்ததிலிருந்து, இரவு படுக்கப்போகும்வரை என்ன செய்கிறீர்கள் என்று பட்டியலிடுங்கள். நிறைய நேரம் விரயமாகியிருக்கும்! சும்மா இருந்தால் புத்தி வேண்டாததையெல்லாம் நினைக்கும். இதை நிறுத்த வேண்டும், முதலில். தினசரி ஒரு ‘ரொட்டீனை’ (routine) கொண்டுவாருங்கள். காலையில் எழுவதிலிருந்து, குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது எல்லாம் நேரப்படி நடக்க வேண்டும்.

இது ‘செட்’டானவுடன், உங்களுக்குப் பிடித்தமான, பகுதிநேர/ முழுநேர வேலையில் சேருங்கள். எதையுமே நினைக்க நேரம் இருக்காது. வேலை முடிந்து வந்ததும் உடற்பயிற்சி செய்யுங்கள். இதையெல்லாம் செய்ய ஆரம்பித்தால், தன்னம்பிக்கை கூடும், உற்சாகம் தோன்றும். மேலும் சில செயல்களை-தியானம், பாடுவது அல்லது வரைவது ஆகியவற்றை அடுத்து சேர்க்கலாம். ‘இன்று’ (நிகழ்காலம்) உங்கள் கையில் உள்ள மூலதனம். அதைக் கோட்டைவிடாதீர்கள்.

நான் இன்ஜினீயரிங் முடித்து மூன்று மாதங்கள் ஆகின்றன. நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். நானும் அவரும் மூன்று வருடங்களாக நண்பர்கள். ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனோம். எல்லா விஷயங்களையும் அவருடன் பகிர்ந்துகொள்வேன். நாங்கள் நண்பர்களாக இருந்தபோது, அவர் என்னுடன் பேசவில்லை என்றால் ஏதாவது பிசியாக இருப்பார் பின்னர் பேசுவார் என விட்டுவிடுவேன். மேலும் அப்போது நாங்கள் அதிகமாகப் பேசிக்கொள்வதில்லை. போனில் குறுஞ்செய்திகளை மட்டுமே பரிமாறிக்கொள்வோம்.

தினமும் காலையில் அவர் அனுப்பும் குறுஞ்செய்தியே என்னை எழுப்பும். அப்போதுதான் அவர் என்னைக் காதலிக்கிறாரோ என்று தோன்றியது. அப்போது எனக்குக் காதல் என்பதன் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அதனால் காதல் அவசியமற்றது என்ற புரிதலால் நான் அவரை விலக்கிவிட்டேன். சிறிது நாட்களுக்குப் பிறகே பேசினேன். அதன் பின்னர் இருவரும் உரையாடலைத் தொடங்கிவிட்டோம். என் கஷ்டங்களை அவரிடம் பகிர்ந்துகொள்வேன். ஒருமுறை அப்படிப் பகிர்ந்துகொண்டபோது அதைக் கேட்டு அவர் அழுதுவிட்டார். இதனால் நான் மனம் நெகிழ்ந்துவிட்டேன். இப்படி யாரும் என்னிடம் நடந்துகொண்டதில்லை. அது எனக்குப் புதிதாகவும் பிடித்ததாகவும் இருந்தது.

நான் அதிர்ஷ்டசாலி என்று நினைத்துக்கொண்டேன். பின்னர் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவரும் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகச் சொன்னார். அந்த நேரத்தில் அவரைக் காதலிப்பதை உணர்ந்தேன். அவரிடமும் சொன்னேன். ஆனால் அவரோ நாம் நண்பர்களாகவே இருப்போம் என்று சொல்லிவிட்டார். தினசரி இரண்டு மூன்று மணி நேரம் பேசுவோம். என்னைக் காதலிக்காதே. அப்படிக் காதலித்தால் பின்னல் உனக்குத்தான் சிரமம் என்று சொன்னார். இதெல்லாம் நடக்காது வேண்டாம் என்றார். ஆனால் என் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்வார். ஆனால் இப்போது என்னவென்று தெரியவில்லை அவர் என்னிடம் ஒழுங்காகப் பேசுவது இல்லை.

கேட்டால் பிஸி என்று சொல்கிறார். சில நாட்களில் நன்கு பேசுகிறார். சில சமயங்களில் சரியாகப் பேசுவதில்லை. அவர் சரியாகப் பேசாவிட்டால் என் மனம் வருந்துகிறது. நான் யாரிடமும் எதற்காகவும் கெஞ்சியதில்லை. ஆனால் அவரிடம் ரொம்பக் கெஞ்சுகிறேன். ஆனால் இப்படிக் கெஞ்சுவதே அவரை எரிச்சலூட்டுகிறது. அவர் என்னை விட்டுச் சென்றுவிடுவாரோ என்று கஷ்டமாக இருக்கிறது. ஆனால் அவரிடம் பேசவும் பயமாக இருக்கிறது. முன்னர் பேசாவிட்டால் ஏன் பேசவில்லை என்று கேட்பார். இப்போதோ போன் செய்தால் கூட அதை எடுத்துப் பேசுவதில்லை. அவரிடம் பேசாமல் எனக்கு எந்த வேலையும் ஓடவில்லை. பிறரிடம் கோபப்படுகிறேன். எனக்கு என்ன பண்ணுவதென்றே தெரியவில்லை. நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?

உங்கள் உறவு அவருக்குத் தொந்தரவாகிவிட்டது என்று தெரிகிறது. காதலோ, நட்போ உங்களை ஏன் ஒதுக்கினார் என்று சொல்லிவிட்டுச் செய்திருக்கலாம். இந்தத் தவிப்பாவது குறைந்திருக்கும். வெளிப்படையாகப் பேசிக்கொள்ளாததாலேயே உங்கள் உறவு பாதிக்கப்பட்டிருக்கிறது - முதலில் நீங்கள் பேசவில்லை, இறுதியில் அவர்; இடையில் அவர் “என்னைக் காதலிக்காதே. அப்படிக் காதலித்தால் பின்னால் உனக்குத்தான் சிரமம்.” என்று புதிர்போட்டாரே ஒழிய, அதையும் விளக்கிச் சொல்லவில்லை!

அவரிடம் கெஞ்சுவது உங்களுக்கே பிடிக்கவில்லை. அவரை உண்மையாக நீங்கள் விரும்பினால், அவருக்கு எது பிடிக்குமோ, அதை செய்யவிட வேண்டுமல்லவா? அவர் வாழ்வை அவருக்குப் பிடித்தபடி அமைத்துக்கொள்ளட்டும். நீங்கள் தனிமையில் இருப்பதைத் தவிர்த்து, நண்பர்களுடன் இருங்கள். அவரைப் பற்றி யோசிக்கக்கூட நேரமில்லாதவாறு உங்களை ‘பிஸி’யாக வைத்துக்கொள்ளுங்கள்.

பிறரை மாற்றுவது நம் கையில் இல்லை; ஆனால், அவர்கள் செயலால் நாம் பாதிக்கப்படாதவாறு நம்மைப் பாதுகாத்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. உங்களுக்குப் பிடித்தால், சமூகநல நிறுவனங்களில் சேர்ந்து, சமுதாயத்துக்கு உங்கள் பங்களிப்பைச் செய்யலாம். உங்கள் சேவையால் பயனடைபவர்கள் உங்கள் வரவை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருக்கும்போது, இங்கொருவர் உங்களை ஒதுக்கியதைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள்! அவரை விட்டு விலகி வாழ்வது, இப்போது கடினமாக இருக்கும். சில மாதங்களில் பழகிவிடும். தவறவிட்ட வாய்ப்பை எண்ணி வருந்த வேண்டாம்; சில சமயம் ‘நீ வேண்டும்’ என்றும் பிறகு ‘நீ வேண்டாம்’ என்றும் நடந்துகொள்ளும் ஒரு மண்குதிரையை நம்பிப் போகாமல் தப்பினீர்களே! அதை எண்ணி சமாதானமடையுங்கள்! வசந்தம் மறுபடி வரும் உங்கள் வாழ்வில்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x