Published : 03 Jul 2015 01:28 PM
Last Updated : 03 Jul 2015 01:28 PM

என் வீக்எண்ட்: மலையும் மழலையும் பிடிக்கும்

என் பெயர் விக்னேஷ். காரைக்குடியில் வசிக்கிறேன். சென்னை லயோலா கல்லூரியில் எம் .ஏ . சமூகப் பணி படித்தேன். கடந்த 6 வருடங்களுக்கு மேலாகச் சமூகப் பணிகளைச் செய்து வருகிறேன். அதிலும் குழந்தைகளுக்கு உதவுவது எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.

அதைத் தவிர்த்து ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிப்பேன்; கவிதைகள் எழுதுவேன். இப்படித்தான் என் நேரத்தைச் செலவிடுகிறேன். இது பொழுதுபோக்கு தான் என்றாலும் நான் இதை என் எதிர்காலத்துக்கான முதலீடாகவே நினைக்கிறேன்.

பள்ளி நாள்களிலும், கல்லூரி நாள்களிலும் பேச்சு, கட்டுரை, கவிதை, நடனம் என எந்தப் போட்டி நடந்தாலும் முதல் ஆளாகப் போய் பெயரைக் கொடுத்துவிடுவேன். கலந்துகொள்வது மட்டுமல்லாமல் பல பரிசுகளையும் தட்டிக்கொண்டு வந்துவிடுவேன்.

எனக்கு மலையைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். வார நாட்களில் நண்பர்களோடு கொடைக்கானலுக்குச் சென்று வருவேன். மலையின் சுத்தமான காற்றைச் சுவாசிப்பது சுகமான அனுபவமாக இருக்கும். ஒருவேளை எங்கேயும் போகும் வாய்ப்பு இல்லையென்றால் அடுத்த பொழுதுபோக்கான குழந்தைகளிடம் தாவிவிடுவேன்.

வாழ்க்கைக்குத் தேவையான கல்வியையும் குழந்தைகளின் உரிமைகள் பற்றியும் தலைமை ஏற்கத் தேவையான பயிற்சி போன்றவற்றைச் சொல்லுவேன். அதைக் கேட்கும் மனநிலை குழந்தைகளுக்கு இல்லாத வேளைகளில் அவர்களை உற்சாகப்படுத்தும்படி கதைகளைச் சொல்லுவேன்.

கல்லூரியில் படிக்கும்போது ஒரு கவிதைப் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளேன். இப்போது ஒரு கவிதைத் தொகுப்புக்குத் தேவையான கவிதைகளையும், குழந்தைகளுக்கான ஒரு கதைப் புத்தகத்தையும் எழுதி முடித்துள்ளேன். இவை வெளியிடத் தயாராக உள்ளன. அந்த வேலையையும் பார்க்க வேண்டும்.

வார நாட்களில் நண்பர்களுடன் வெளியில் எங்காவது சென்று வருவதால் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. புத்துணர்ச்சியடைந்த மனம் நிறைவாக இருக்கும். எனவே அடுத்த வேலைக்காக மனம் தயாராகிவிடும். ஆகவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளுக்காகப் பணிபுரிகிறேன். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதற்காகத் தயாராகிறேன். எல்லா நாட்களையும் மழலைகளுடன் கழிக்க முடிந்தால் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக நினைத்துக்கொள்வேன்.

‘என் வீக்எண்ட்’ பகுதியில் நீங்களும் உங்கள் வீக்எண்ட் அனுபவங்களை ஜாலியாகப் பகிர்ந்துகொள்ளலாம். உங்கள் வீக்எண்ட் கொண்டாட்டங்களை ‘இளமை புதுமை’ வரவேற்கிறது. உங்களைப் பற்றிய விவரங்களுடன் புகைப்படத்தையும் இணைத்து அனுப்புங்கள். வயது வரம்பு: 16 - 30.

தொடர்புக்கு: ilamaiputhumai@thehindutamil.co.in

கடிதத் தொடர்புக்கு:

இளமை புதுமை,

தி இந்து, கஸ்தூரி மையம், 124,

வாலாஜா சாலை, சென்னை - 600002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x