Published : 03 Jul 2015 01:26 PM
Last Updated : 03 Jul 2015 01:26 PM
தமிழ் நடிகர்களில் மேக்கப்பையும் ரீமேக்கையும் கமல் அளவு யாராலும் சிறப்பாகக் கையாள முடியாது. நாயகன் காலத்திலிருந்தே இந்த விஷயங்களை அவர் தொடர்ந்து கடைப்பிடித்துவருகிறார். அவ்வை ஷண்முகி, மகாநதி, இந்தியன், அன்பே சிவம் எனப் பல படங்களில் இந்த முத்திரைகளைப் பதித்தவர் அவர்.
பாபநாசத்திலும் அந்தப் பாதையே அவருக்குக் கைகொடுத்துள்ளது. ஜப்பானியப் படமான சஸ்பெக்ட் எக்ஸைத் தழுவி மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யத்தை முறைப்படி வாங்கித் தமிழில் பாபநாசமாக்கியுள்ளார்.
இது அனைவருக்கும் தெரிந்த சங்கதிதான். அவரது அடுத்த படமான தூங்காவனமும் இதே போன்ற ரீமேக்தான் என்கிறார்கள். பிரெஞ்சில் வெளியான ஸ்லீப்லெஸ் நைட் ( பிரெஞ்சுத் தலைப்பு: Nuit Blanche) படத்தின் உரிமையை வாங்கிப் பண்ணுகிறார் கமல் எனத் தெரிகிறது.
இந்தப் பிரெஞ்சுப் படத்தின் கதாநாயகன் தாமர் சிஸ்லே (Tomer Sisley). இவர் நடித்த லார்கோ விஞ்ச் என்னும் படத்தின் ரீமேக்கில் விஜய் நடிக்க கௌதம் மேனன் இயக்குவதாக அறிவிப்பெல்லாம் வந்தது, ஆனால் படம் எடுக்கப்படவில்லை. ஆனால், இப்போது அதே நடிகரின் படத்தின் பாதிப்பில் அல்லது தழுவலில் அல்லது ரீமேக்கில் கமல் நடிக்கிறார்.
2011-ல் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் ஸ்லீப்லெஸ் நைட் பிரெஞ்சுப் படம் வெளியானது. தாமர் சிஸ்லே, வின்சென்ட் என்னும் போலீஸ் அதிகாரி பாத்திரமேற்றிருகிறார். படு ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
போதைப் பொருள் கடத்திவரும் கும்பல் ஒன்றிடமிருந்து ஒரு ஹேண்ட் பேக்கில் உள்ள போதைப் பொருளை வின்சென்டும் அவருடைய நண்பரும் சேர்ந்து பறித்துவிடுவார்கள். அந்தப் போதைப் பொருள் அந்த ஊரில் நைட் க்ளப் நடத்திவரும் ஒருவருக்குச் சொந்தமானது. நைட் க்ளப் அதிபர் வின்சென்டின் மகனைக் கடத்திவிடுவார். போதைப் பொருளைத் தந்து மகனை மீட்கச் செல்வார் வின்சென்ட்.
அந்த இரவில் நைட் கிளப்பில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் தொண்ணூறு சதவீதப் பகுதி. விறுவிறுப்பாக நகரும் படத்தில் அடுத்தடுத்துப் பல திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்திருக்கும். இந்தத் துணிச்சலான ஸ்டைலான போலீஸ் அதிகாரி வேடத்தில்தான் நம் கமல் ஜமாய்க்கப்போகிறார் என்பதை நினைக்கும்போது, இப்போதே மெய்சிலிர்க்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT