Last Updated : 24 Jul, 2015 03:04 PM

 

Published : 24 Jul 2015 03:04 PM
Last Updated : 24 Jul 2015 03:04 PM

எங்களுக்கும் பொறுப்பு வந்துருச்சு...

பள்ளியிலிருந்து கல்லூரிக்கு வந்தவுடனே திடீரென நாம் வேறு ஒரு ஆளாக மாறிவிடுவதுபோல் இருக்கும். ஏதோ ஒரு பொறுப்புணர்வை நம்மிடம் பிறர் எதிர்பார்க்கிறார்களோ எனத் தோன்றும்.

பொறுப்புடன் சுதந்திரமான சிந்தனை, முடிவுகள் எடுக்கும் உரிமை, எதிர்காலத்தைத் துணிச்சலுடன் எதிர்கொள்வதற்கான திறமைகளைக் கற்றுக்கொடுப்பது எனப் பலவற்றையும் கல்லூரி வாழ்க்கை தன்னுள் வைத்திருக்கிறது. பள்ளியில் இருந்தவரை அம்மா, அப்பாவே எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்திருப்பார்கள். ஆனால், கல்லூரி வாழ்க்கைதான் நம்முடைய தனித்தன்மையை நமக்கே உணர்த்தும். இந்த ஆண்டு கல்லூரியில் அடியெடுத்து வைத்திருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

காவ்யா,பி.மோகன்குமார், எச்.கீர்த்திவாசன்,எஸ்.டிவெர்ஜினா

என். காவ்யா, பி.ஏ. முதலாம் ஆண்டு, இதழியல், மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி, சென்னை

எனக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூர். இதழியல் படிக்க வேண்டும் என்பது என் கனவு. இங்கே சென்னையில் கல்லூரிக்கு வந்து ஒரு மாதமே ஆகிறது. அதற்குள் கல்லூரி வாழ்க்கையோடு சேர்ந்து ஹாஸ்டல் வாழ்க்கையும் பல புதுமையான அனுபவங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. பதினான்கு வருடப் பள்ளி வாழ்க்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாய் கல்லூரி வாழ்க்கை இருக்கிறது. இங்கே கல்லூரியில் சுதந்திரத்தை உணர முடிகிறது.

அந்தச் சுதந்திர உணர்வே பொறுப்பாகச் சிந்திக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. அதோடு, இங்கே கல்லூரியில் எல்லோரும் சேர்ந்து டீமாக ஒரு விஷயத்தை செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும் எங்கள் வகுப்பில் என்ஆர்ஐ மாணவர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுடன் பழகுவதும், அவர்கள் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்வதும் புதிய அனுபவத்தைத் தருகிறது. வீட்டை ரொம்பவே ‘மிஸ்’ செய்தாலும் காலேஜ் லைஃபையும் ரொம்ப ‘என்ஜாய்’ பண்ணுகிறேன்.

பி. மோகன்குமார், பி.இ., முதலாம் ஆண்டு, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், வேலம்மாள் பொறியியல் கல்லூரி, சென்னை

பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்வதில் மகிழ்ச்சி, சோகம் இரண்டையும் உணர்கிறேன். பள்ளி நண்பர்களை ‘மிஸ்’ பண்ணுவது வருத்தமாக இருக்கிறது. அதே சமயம், கல்லூரிக்குச் செல்லப்போவதை நினைத்தால் உற்சாகமாக இருக்கிறது. கல்லூரி வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை முழுவதுமாக ஊகிக்க முடியவில்லை. ‘மெக்கானிக்கல் இஞ்சினீயர்’ ஆக வேண்டும் என்பதுதான் என் இலட்சியம். கல்லூரி வாழ்க்கையே என் லட்சியத்தை அடைவதைத் தீர்மானிக்கும் என்பதால் அதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த மாதம் கல்லூரி திறக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

எச். கீர்த்திவாசன், பி.காம் (சி.எஸ்), முதலாம் ஆண்டு, லொயோலா கல்லூரி, சென்னை

கல்லூரியில் புது நண்பர்கள், புதுச் சூழல் என ரொம்ப ஜாலியாக இருக்கிறேன். ஸ்கூல் யுனிஃபார்ம், டிரஸ் கோட் இல்லாமல் பிடித்த மாதிரி டிரஸ் அணிந்து செல்வது, பிடித்த ஹேர் ஸ்டைல் வைத்துக் கொள்வது எனக் கல்லூரியில் நிறைய ஃப்ரீடம் இருக்கிறது. ஸ்கூலில் இருக்கும் நிறைய ‘ரூல்ஸ்’ கல்லூரியில் இல்லை. அத்துடன், கிளப் செயல்பாடுகள் மூலம் சமூகத்தைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்ள முடிகிறது. ‘ரோட்ராக்ட்’. ‘ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ போன்ற கிளப்களில் இணையத் திட்டமிட்டிருக்கிறேன். எனக்கு நடிப்பில் ஆர்வம் இருக்கிறது. அதற்கும் எங்கள் கல்லூரியில் ‘கல்ச்சுரல்ஸ்’ செயல்பாடுகளில் பங்கேற்க உற்சாகப்படுத்துகிறார்கள். இப்படி எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருப்பதால், அந்தப் பொறுப்பை உணர்ந்து படிக்கவும் முடிகிறது. காலேஜ் லைஃபை அனுபவிக்கவும் முடிகிறது.

எஸ்.டி. வெர்ஜினா, பி.காம் (சி.எஸ்), முதலாம் ஆண்டு, டாக்டர் ஜிஆர்டி கலை அறிவியல் கல்லூரி, கோவை

கல்லூரி வாழ்க்கை வித்தியாச மானதாக இருக்கிறது. பள்ளியில் இருக்கும்போது ஒரு பாதுகாப்பு உணர்வு எப்போதும் இருக்கும். பெரிய பொறுப்புகள் எதுவும் இருக்காது. ஆனால், இப்போது திடீரென்று எனக்குப் பொறுப்புகள் வந்துவிட்டதாக உணர்கிறேன். என்னால் தனியாக முடிவு எடுக்க முடியும் என்னும் தன்னம்பிக்கையைக் கல்லூரி வாழ்க்கை தருகிறது. எனக்கு ‘டென்னிஸ் பிளேயர்’ ஆக வேண்டுமென்பது கனவு. அதற்கு என் கல்லூரி நிறைய வாய்ப்புகளைத் தருகிறது.

இவர்களுக்குப் பள்ளி கடந்த காலமாகிவிட்டது. வேலை, குடும்பம் என்ற எதிர்காலம் இவர்களுக்குக் காத்திருக்கிறது. இப்போது இந்தக் கல்லூரி வாழ்க்கை எனும் நிகழ்காலத்தில் இவர்கள் உற்சாகமாக வாழ்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x