Published : 26 Jun 2015 02:06 PM
Last Updated : 26 Jun 2015 02:06 PM
ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போல சீனாவுல இளம் பெண்கள் இப்போது காலர் போன் சேலஞ்சுன்னு ஒண்ணு கண்டுபிடிச்சிருக்காங்க. புருவத்தை உயர்த்துறீங்களா, இல்லை முகத்தைச் சுளிக்கிறீங்களா? நீங்க என்னவோ பண்ணுங்க. அதைப் பத்தியெல்லாம் இளைஞர்கள் கவலைப்படப்போறதே இல்லை. அவங்களோட உலகமே வேற. அங்க அவங்கள உற்சாகப்படுத்த ஏதாவது புதுசு புதுசா விஷயம் கிடைச்சுக்கிட்டே இருக்கு.
சோஷியல் மீடியாவில் அவங்க பண்ற அட்டகாசத்துக்கு அளவே கிடையாது. அவ்வளவு அலப்பறையைக் கொடுக்குறாங்க. அவங்களுக்கு எல்லாமே கிண்டல், கேலி, ஜாலிதான், சரி, விஷயத்துக்கு வா, அதென்ன காலர் போன் சேலஞ்ச்?
பொதுவாகவே ஒல்லியான தோற்றத்தின் மீது பெண்களுக்குக் கொள்ளைப் பிரியம் உண்டு. உடம்பு துரும்பா மெலிந்து ஒயிலான நடைபயில ஆசை இல்லாத பெண்களே இல்லை. தினசரி கண்ணாடி முன்னால நின்ணு பார்க்கும் பெண்களுக்குத் தாங்கள் மெலிந்திருப்பது போல் தோன்றாவிட்டால் வருத்தமே மிஞ்சும். ஒல்லிக் குச்சி உடம்புக்காகவே என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
தேனைக் குடிப்பாங்க, பச்சைத் தேநீரைக் குடிப்பாங்க கூழைக்கூட குடிப்பாங்க. எப்படியாவது மெலியணும். அவ்வளவுதான். அப்படி மெலிஞ்சா மட்டும் போதுமா? பிறரைவிட அதிகமாக மெலிஞ்சிருக்கிறதக் காட்டியாகணுமே. அதுக்கு என்ன பண்றது? இந்தக் கேள்விக்கு விடையே காலர்போன் சேலஞ்ச்.
அதாவது ஒல்லிக் குச்சி உடம்புக்காரப் பெண்களிடையே நடைபெறும் சேலஞ்ச்தான் காலர்போன் சேலஞ்ச். ஒரு பெண் எந்த அளவுக்கு ஒல்லியாக மாறுகிறாரோ அந்த அளவுக்கு அவரது கழுத்தெலும்பும் வெளியே தெரியுமாம். அதாவது அவங்க மெலிஞ்சிருக்காங்கிறத கழுத்தெலும்பில் தென்படும் குழிவை வைத்துக் கண்டுபிடித்துவிடலாமாம்.
அதுதாங்க இந்தச் சவாலுக்கு அடிப்படை. அதிக அளவில் மெலிந்தால் அதிகக் குழிவு ஏற்படும். குழி அதிகமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டுமே! அதை நிரூபிக்கத்தான் கழுத்தெலும்புக் குழியில் நாணயங்களையோ வேறு ஏதாவது ஒரு பொருளையோ வரிசையாக அடுக்கிவைத்து போட்டோ எடுத்து அதை சோஷியல் மீடியாவில் அப்லோட் செய்கிறார்கள்.
காலர் போன் சேலஞ்ச் சீனாவில் இப்போது படுவேகமாகப் பரவிவருகிறது. இளம் பெண்கள் ஏராளமாக இப்படி போட்டோ எடுத்து அவற்றை சீன இணையதளமான வெய்போவில் (Weibo) அப்லோட் செய்துவருகிறார்கள்.
சீன நடிகை லெவ் ஜியராங் (Lv Jiarong) என்பவர் தன்னுடைய வலது, இடது கழுத்தெலும்பு பள்ளத்தில் சுமார் எண்பது நாணயங்களை அடுக்கிவைத்து அதை போட்டோ எடுத்துப் பதிவேற்றியுள்ளார். இந்தப் படத்துக்கு இளம் பெண்களிடையே பெரும் வரவேற்பு.
ஆனால் இதைப் போன்ற டிரெண்டுகளால் இளைஞர்களிடையே உணவுப் பழக்கத்தில் சிக்கல் ஏற்படும், இது ஆரோக்கியமானது அல்ல என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கவும் செய்கிறார்கள். ஏனெனில், உடம்பு மெலிய வேண்டும் என்ற ஆசையில் போதுமான போஷாக்கான உணவை உண்ணாமல் தங்களது உடம்பை வீணாக்கிக்கொள்கிறார்கள். சிலரது உயிருக்கே இப்படியான டிரண்டுகள் உலைவைத்துள்ளன என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
சீனாவில் இதற்கு முன்னர் இதே இணையதளத்தில் பெல்லிபட்டன் சேலஞ்ச் என்ற ஒன்று பரவியுள்ளது. வலது கையால் தொப்புளை எளிதில் தொட்டுவிடலாம். ஆனால் முதுகுக்குப் பின் கையை வளைத்து இடது பக்கம் வழியாகத் தொப்புளைத் தொட வேண்டும். இதுதான் பெல்லிபட்டன் சேலஞ்ச். அந்த அளவு மெலிய வேண்டும்.
ஈஸியாத் தொடுற தொப்புள சுத்தி வளைச்சுத் தொடுறது என்ன சவாலோன்னு முனகுறீங்களா? பாஸ் உங்களுக்கு வயசாயிருச்சு பாஸ். வழிவிட்டு நில்லுங்க.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT