Published : 19 Jun 2015 03:15 PM
Last Updated : 19 Jun 2015 03:15 PM

ஹெல்மெட்: சில உண்மைகள்.. சில நம்பிக்கைகள்

ஹெல்மெட் அணிவது தொடர்பாக நம்மிடையே சில மூட நம்பிக்கைகள் உள்ளன. அவற்றுக்கும் உண்மைக்கும் இடையே எவ்வளவு இடைவெளி உள்ளது?

நம்பிக்கை 1: ஹெல்மெட் அணிவ தால் பார்வைத் திறன் குறைகிறது.

இது உண்மையல்ல. ஹெல்மெட் அணியாதபோது 180 டிகிரி அளவிலும் ஹெல்மெட் அணிந்திருக்கும்போது 210 டிகிரி அளவுக்கும் சுற்றிலும் பார்க்க முடியும் என்கின்றன ஆய்வுகள். ஆகவே, ஹெல்மெட் அணிவதால் பார்வை மறைக்கப்படுவதில்லை. முழுவதும் முகத்தை மூடியிருக்கும் சில ஹெல்மெட்டுகளில் வேண்டுமானால் பார்வை மறைக்கப்படலாம். ஆனால், அதை அணிபவர்கள் எண்ணிக்கையில் குறைவு.

நம்பிக்கை 2: ஹெல்மெட் அணிவதால் போக்குவரத்து ஓசைகளைக் கேட்க இயலாது.

இதுவும் உண்மையல்ல. காற்றின் இரைச்சலைத் தடுத்து, கேட்கும் திறனைப் பாதுகாப்பதில் ஹெல்மெட்டுகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. சுமார் 100 கி.மீ. அளவிலான வேகத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றால் செவிப்பறைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஹெல்மெட்டோ புற ஓசைகளைப் பெருமளவில் குறைத்து செவிப்பறையைப் பாதுகாக்கிறது. அதே நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான போக்குவரத்து ஓசைகளைத் தெளிவாகக் கேட்கவும் முடியும். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளும் ஹெல்மெட் அணிந்து சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தேவையான ஓசையைக் கேட்க இயலும் என்பதையே நிரூபித்துள்ளன.

நம்பிக்கை 3: ஹெல்மெட் அணிவதால் தலை சூடாகும்.

இல்லை. ஹெல்மெட்டின் உள்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மென்மையான பஞ்சு போன்ற பகுதி புற வெப்பத்தை உள்ளுக்குள் கடத்தாமல் பார்த்துக்கொள்கிறது. அதிகபட்சம் ஓரிரு டிகிரிகள் வெப்பநிலை வேண்டுமானால் உயரக்கூடும். நாம் நினைக்கும் அளவுக்கு அதிகப்படியான வெப்பநிலை உயர வாய்ப்பில்லை. மிகக் குறைந்த வேகத்தில் செல்லும்போது காற்று வரத்து பாதிக்கப்படுவதால் சிறிது வெப்பநிலை உயரலாம். இதுவும் அதிகப்படியான போக்குவரத்து நெருக்கடியான சூழலில் வெயில் பொழுதின்போது மிக மெதுவாகப் போக்குவரத்து ஊர்ந்து செல்லும்போது ஏற்படலாம். அதற்கும் புறச் சூழல்தான் காரணமே ஒழிய ஹெல்மெட் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்பிக்கை 4: ஹெல்மெட் அணிபவர்கள் அடிக்கடி விபத்தை எதிர்கொள்கிறார்கள்.

இதுவும் உண்மையல்ல. ஹெல்மெட் அணியாதவர்களைவிடக் குறைந்த அளவிலான விபத்துகளையே ஹெல்மெட் அணிபவர்கள் எதிர்கொள்கிறார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. வெள்ளை, அடர் வண்ணங்களிலான ஹெல்மெட்டுகளில் பெரும்பாலானவை வெளிச்சம் குறைந்த சமயத்திலும் ஒளியை நன்கு பிரதிபலிக்கின்றன. எனவே, ஹெல்மெட் அணிந்திருப்பவர்களை எளிதில் பார்க்க முடியும். ஆகவே, வெற்றுத் தலையுடன் செல்பவரைவிட ஹெல்மெட் அணிந்து செல்பவரை எளிதில் பார்க்கலாம்.

ஹெல்மெட் உண்மைகள்

பெரும்பாலான இரு சக்கர வாகன விபத்துகளில் தலையில் அடிபடுவதாலேயே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

உயிரிழப்புகளையோ தலையில் அடிபடுவதையோ 30 சதவீதத்துக்கும் மேல் தடுத்துவிடும் வல்லமை கொண்டது ஹெல்மெட்.

மோசமான விபத்துகளின்போது ஹெல்மெட் அணியாதவர்கள் உயிரிழக்க 40% அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

காரில் செல்பவரைவிட பைக்கில் செல்பவருக்கு விபத்தால் உயிரிழப்பு ஏற்பட 32 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது.

விபத்து ஏதேனும் ஏற்பட்டால் ஹெல்மெட் அணிந்தவரைவிட அணியாதவருக்கு மூன்றிலிருந்து நான்கு மடங்கு மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.

இவற்றையெல்லாம் கூறுவது, உங்களைப் பயமுறுத்துவதற்காக அல்ல; மாறாக ஹெல்மெட்டால் நமக்கு ஏற்படும் அனுகூலங்களைச் சுட்டிக்காட்டுவதற்கே. ஹெல்மெட் அணிவதால் போக்குவரத்துக் காவலரைச் சமாளிக்கலாம்.

ஆனால், அது மிகவும் சிறிய விஷயம்தான். விபத்துகளையோ, அவற்றில் ஏற்படும் பாதிப்புகளையோ தவிர்ப்பதுதான் ஹெல்மெட் அணிவதன் முக்கியமான நோக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x