Published : 05 Jun 2015 04:11 PM
Last Updated : 05 Jun 2015 04:11 PM
என் பெயர் சுந்தர். தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரியில் சேர்ந்த நாட்களிலிருந்தே வார இறுதிநாட்கள் என்றாலே குதூகலம்தான். சனி, ஞாயிற்றுக் கிழமைகள் எனக்கு விடுதலையைத் தரும் நாட்கள்.
சனிக்கிழமை இரவுபோல உற்சாகமான ஒரு பொழுது உலகில் ஏதும் இல்லை. காதில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு விடிய விடிய லேப்டாப்பில் படங்கள் பார்ப்பது சுகானுபவம். பாடல்களைக் கேட்டபடியே தூங்கி மறுநாள் காலை பத்து மணிக்குத்தான் எழுவேன். நான் ஒரு நாளிதழ் பைத்தியம். மற்ற நாட்களில் வருவதைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் நாளிதழ்கள் அதிகப் பக்கங்களுடன் சதைப்பிடிப்பாகப் பார்க்க புஷ்டியாக இருக்கும். அதை முழுவதும் வாசித்து முடிக்கும்போது மணி பன்னிரெண்டு ஆகியிருக்கும்.
பிறகு வாரம் முழுக்க சமைக்கும் அம்மாவிற்கு அன்று லீவ் கொடுத்துவிட்டு, அன்றைய சமையல் பொறுப்பை நானும் என் தங்கையும் பகிர்ந்துகொள்வோம். வாயில் நுழையாத பெயர் உடைய உலகளாவிய பிரியாணியை செய்து என் அப்பாவிடம் டேஸ்ட் பார்க்கக் கொடுத்தால் அவர், “கூட்டாஞ்சோறு சூப்பரா இருக்குடா” என்பார். இப்படி நையாண்டியும் நக்கலுமாக மதிய நேரம் கழியும்.
என் தங்கை ஒரு புகைப்படப் பிரியை. எஸ்எல்ஆர் காமிராவும் வைத்திருக்கிறார். பிறகு என்ன! சாப்பாடு முடிந்ததும் போட்டோ ஷூட் என்று அவளைக் கூட்டிக்கொண்டு வெளியே கிளம்பிவிடுவேன். வீக் எண்டில் தியேட்டரில் படங்கள் வெளியாகிறதோ இல்லையோ பேஸ்புக்கில் என்னுடைய புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன். பள்ளியில் ஒன்றாய்ப் படித்த நண்பர்களுடன் வாடிக்கையாகச் செல்லும் ஜூஸ் பாருக்குப் போய் அரட்டை அடித்துவிட்டு வீடு திரும்புவேன்.
குறும்படங்கள் மீது எனக்கு விருப்பம் உண்டு. நல்ல படைப்புகளைத் தேடிப் பிடித்துப் பார்ப்பேன். அப்படி ஒரு ஞாயிறு தினத்தில் நானும் என் தங்கையும் இரண்டு நிமிடமே ஓடக்கூடிய ஒரு குறும்படம் எடுக்க முடிவுசெய்தோம். அவள் ஒளிப்பதிவு செய்ய நான் கான்செப்ட் எழுதி இயக்கினேன்.
பக்கத்து வீட்டில் இருக்கும் இரண்டு சிறுவர்களை நடிக்க வைத்தோம். ஒரே நாளில் அந்தக் குறும்படத்தை எடுத்து முடித்தோம். நண்பர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. என்னால் மறக்கவே இயலாத மனதிற்கு நிறைவைத் தந்த வீக்எண்ட் அது. எங்கோ ஒரு புள்ளியில் தொலைந்த என்னை மீட்டெடுக்க வீக்எண்ட்கள் எனக்குப் பெரிதும் உதவுகின்றன. நான் வீக்எண்ட்டைக் காதலிப்பவன். ஒரு வீக் எண்ட் முடியும்போதே அடுத்த வீக் எண்டுக்குக் காத்திருக்கத் தொடங்கிவிடுவேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT