Published : 12 Jun 2015 02:12 PM
Last Updated : 12 Jun 2015 02:12 PM
வயது வரம்பின்றி அனைவரும் ருசித்து உண்ணும் மேகி நூடுல்ஸில், அதீத ரசாயனப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, பல்வேறு மாநிலங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது. இச்செய்தி வெளியானதும், டுவிட்டர், வாட்ஸ் ஆப், பேஸ்புக் என அனைத்து சமூக வலைத்தலங்களிலும் சுவாரஸ்யமான கமெண்ட்டுகள் குவிந்தன, விவாதங்கள் எழுந்தன.
இரண்டு நிமிடங்கள் இல்லாவிட்டாலும் அதிகபட்சம் ஐந்து நிமிடங்களில் தயாராகும் மேகியை நம்பித்தான் பல இளைஞர்கள் இருந்தார்கள். எத்தனை முறை ரசித்துச் சாப்பிட்ட மேகியைத் தடை செய்ததில் பலருக்கு ஆச்சரியம். மேகி தடை பற்றி இளைஞர்கள் என்னதான் சொல்கிறார்கள்?
ஒரே பாத்திரத்தில் சாப்பிடுவோம்
தான் முதன்முதலில் சமைக்கக் கற்றுக்கொண்ட உணவு மேகிதான் என்கிறார் கல்லூரி மாணவி மோனிகா. “வீட்டுக்கு நண்பர்கள் வரும்போதெல்லாம், மேகிதான் கைகொடுக்கும். ஒரே பாத்திரத்தில் நான்கைந்து பேர் மொத்தமாக மேகியைப் போட்டுச் சாப்பிடுவோம்” என்று ஏக்கத்துடன் அந்த நாள்களை நினைவுகூர்கிறார் அவர்.
மேகி ஆரோக்கியமான உணவு அல்ல எனச் சொல்லி பத்து வருடங்களுக்கு முன்பே மேகிக்குத் தடைவித்தவர் தன் அம்மா என்கிறார் மனோஜ். ஆனால் நண்பர்கள் சாப்பிடுவதைப் பார்த்து, ஒரு நாள் அம்மாவிடம் அடம்பிடித்து மேகி வாங்கி சமைத்துச் சாப்பிட்டதாகக் கூறுகிறார் அவர். “ அந்த நாள் இன்னும் என் நினைவில் உள்ளது” என்கிறார் இன்ஜினீரியங் இறுதியாண்டு மாணவரான மனோஜ். இப்போது தான் மேகி சாப்பிடுவதில்லை என்பதையும் பகிர்ந்துகொண்டார்.
காய்ச்சல் என்றால்கூட மேகிதான்
பள்ளிப் பருவத்தில், பெரும்பாலும் மாலை நேரங்களில் மேகியைத் தான் சாப்பிட்டதாகக் கூறுகிறார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ராகப்பிரியா. “வாரத்திற்கு ஒருமுறையாவது டிபன் பாக்ஸில் மேகி எடுத்துச்செல்வேன். பரீட்சைக்குப் படிக்கும் போதும், உடம்பு சரியில்லாத நேரங்களிலும்கூட மேகிதான் சாப்பிட்டிருக்கிறேன்” என்கிறார்.
அம்மாவுக்குச் சமைத்துக் கொடுப்பேன்
பெரும்பாலான பசங்களுக்குச் சமைக்கத் தெரிந்த ஒரே உணவு மேகிதான். அதைத் தடை செய்தது வருத்தம்தான் என்கிறார் பொறியியல் மாணவரான டானியல் தாமஸ். “முட்டை மேகி, சீஸ் மேகி, ஃபிரைட் மேகி, மேகி கட்லெட் எனப் பலவிதமாகச் சமைத்து என் அம்மவுக்குக் கொடுத்திருக்கிறேன். நான் செய்யும் மேகி என் அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும்” என்கிறார் அவர். அவ்வளவு ஏன் சமைக்காத மேகியை, பாக்கெட்களில் இருந்து அப்படியே சாப்பிட்டதும், நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது இரவு விடுதிகள் மூடிக் கிடந்த நாட்களில் அனைவரும் கப் நூடில்ஸ் சாப்பிட்ட அனுபவங்களையும் மறக்கவே முடியாது என்கிறார் அவர்.
ஓர் உணவில் இவ்வளவு உணர்வுகளா என நினைக்கும்போது ஆச்சரியமாகவும், சிலிர்ப்பாகவும் இருக்கிறதல்லவா! ஆனால் எத்தனை மகிழ்ச்சி இருந்தாலும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று தெரிந்த பின்னர் எப்படி அந்த உணவைச் சாப்பிட முடியும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT