Last Updated : 26 Jun, 2015 01:05 PM

 

Published : 26 Jun 2015 01:05 PM
Last Updated : 26 Jun 2015 01:05 PM

டங்கா மாரி ஊதாரி

நாஸ்டா என்றால் டிபன், பிஸ்தா என்றால் டான் அப்படிங்கிறதெல்லாம் சென்னை பாஷையோட ஸ்பெஷல். இதுமாதிரி சென்னைக்கே ஸ்பெஷலான பல விஷயங்கள் இருக்கு. அதுல ஒண்ணுதான் கானா. தமிழ்நாட்டு ஒவ்வொரு ஏரியாவுக்கும் தனியான நாட்டுப்புறப் பாட்டு இருக்கும். ஆனால், அது எல்லாமே நாட்டுப்புறப் பாட்டுங்கிற வகைக்குள்ளதான் வரும். ஆனால், சென்னைல இருக்கிற கானா வேறு எங்கயும் கிடையாது.

சென்னை கானா சும்மா பாட்டு மட்டும் இல்ல. பாட்டுக்குள் பல பல மேட்டர்கள் இருக்கும். சென்னை பாஷை, வாழ்க்கை, ஏரியா, வரலாறு எல்லாமே இருக்கும். இந்த கானாவை சினிமா வழியாகப் பிரபலப்படுத்துனது நம்ம தேனிசைத் தென்றல் தேவாதான். சென்னைக்குன்னு உள்ள தனியான விஷயங்களைத் தமிழ்நாடு முழுக்கக் கொண்டுபோய் சேர்த்த பெருமை அண்ணாத்தேக்குத்தான்.

அவரோட பாட்டு கேட்டீங்கன்னாலே போதும் சென்னை பாஷையைக் கத்துக்கலாம். அது மட்டுமல்ல சென்னைல உள்ள ஏரியா என்னென்ன? அங்க மார்க்கெட் முன்னாடி எங்க இருந்துச்சு? கடல்ல என்ன என்ன மீன் கிடைக்கும் இப்படிப் பல கேள்விக்குத் தலைவர் பாட்டாலே பதில் சொல்லுவார்.

உதாரணமா, ‘கொத்தாவா சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி’ அப்படின்னு ஒரு பாட்டு. ‘கண்ணேதிரே தோன்றினாள்’ படத்தில் இடம்பெற்ற பாட்டு. முதல் வார்த்தையே ஒரு பெரிய விஷயம். சென்னையில முன்னாடி காய்கறி மார்கெட் கொத்தவால் சாவடியில இருந்துச்சு. இப்ப அது கோயம்பேட்டுக்கு வந்திருச்சு அப்படிங்கிறதுதான் விஷயம்.

சிரிக்கிற விஷயம் இல்லை இது. சீரியஸ்... சீரியஸ்... அதே பாட்டுல, ‘காஜா பீடி கரீம் பீடி கவர்னர் பீடிங்கோ... அத வலிச்சுப் பார்த்த பசங்க எல்லா ரொம்போ கேடிங்கோ’ அப்படின்னு ஒரு வரி. இதில ‘வலிக்கிறது’ன்னு ஒரு சென்னை பாஷையைச் சொல்லிக் கொடுக்கிறார். அப்படினா இழுக்குறதுன்னு அர்த்தம்.

‘அண்ணாநகரு ஆண்டாளு’ பாட்டிலும், சென்னையில் ஐசிஎஃப்ன்னு ஒரு இடம் இருக்கு. அங்குள்ள கிரவுண்ட்டில் அயனாவரம் பசங்க விளையாடுவாங்கன்னு ஒரு பெரிய லேண்ட்ஸ்கேப்பையே சொல்லிட்டாரு தேவா. அப்புறம் ‘ஒயிட் லெக்கான் கோழி ஒண்ணு கூவது’ என்னும் பாட்டில் ‘ரத்னா கபே’ அப்படின்னு ஒரு ஹோட்டல் இருக்கு, அங்க மசால் தோசை நல்லா இருக்கும் அப்படிங்கிற விஷயத்தைச் சொல்றார்.

இது மூலமாக சென்னை சிட்டியோட கைடாவே இந்த தேவாவின் கானாக்கள் ஆகுது. ‘ராயப்பேட்டை நர்ஸ் பேரு மேரி’ங்கிற பாட்ட வச்சு ராயப்பேட்டையில் ஒரு பெரிய ஹாஸ்பிடல் இருக்குன்னு நமக்குத் தெரியவருது. தேவாவைவிடப் பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் இருக்காங்க. ஆனா, தேவாதான் சினிமாவில கானாவை இன்ரடியூஸ் பண்ணது.

தேவாவுக்கு அப்புறமா ‘வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்’ அப்படின்னு கானா உலகநாதன் சென்னை பீச் ஏரியாவைப் பாடுனார். அப்புறம் ‘மாழ்பழ விக்கிற கண்ணம்மா’ பாட்டுல, ஓட்டேரி ஏரியா மக்களோட வாழ்க்கையைச் சென்னார் புளியந்தோப்பு பழநி. ‘டங்கா மாரி ஊதாரி’ அப்படிங்கிற மரண கானா விஜியோட பாட்டு இப்ப ஹிட்டாயிருக்கு.

ஆனால் தேவா அளவுக்குச் சென்னை பாஷையை, சென்னை கானாவை யாராலும் தொடர்ந்து சொல்ல முடியல. அதுல அவருதான் இப்பவும் கிங். மேட்டரு என்னனா, சென்னைக்கு வரணும்னா கொஞ்சமாவது சென்னை பாஷையைக் கத்துக்கணும். அதுக்கு தேவா பாட்ட கேட்டா போதும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x