Published : 26 Jun 2015 01:09 PM
Last Updated : 26 Jun 2015 01:09 PM

ஐ.டி.உலகம்- 3: திறமையை மழுங்கடிக்கும் ஐ.டி. வேலை

எல்லாத் துறைகளிலும் புதுமுகங்களுக்குத் தொடக்கத்தில் சிக்கல் இருக்கும். ஆனால் ஐ.டி. துறையில் புதியவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ‘எக்ஸ்ட்ரா லார்ஜ்’ஆகவே இருக்கின்றன.

புது மாப்பிள்ளை மவுசாவது 15 நாட்கள் வரையில் தாங்கும், ஆனால் ஐ.டி.யிலோ வேலைக்குச் சேரும்வரைதான், அதுபற்றிய பிரமையெல்லாம். வணக்கம் சொல்லி வரவேற்கும்போது சிநேகமாகச் சிரிக்கும் ‘டீம் லீடர்’- அடுத்த நிமிடத்திலிருந்தே ஆர்டர்களால் சித்தம் கலங்கவைப்பார். தேர்ந்த திரைப்படங்களில்கூடக் காணக் கிடைக்காத இன்ஸ்டண்ட் ட்விஸ்டுகள் ஐ.டி. துறையில் சாதாரணம்.

ஒவ்வொரு அலுவலகத்திலும் தனியாகப் பயிற்சித் துறைகளைச் செயல்படுத்துகிறார்கள். “புதுசா வர்றவங்க எல்லாருக்கும் பயிற்சி வகுப்புகள கட்டாயம் நடத்துவாங்க. ‘காலேஜில் நீங்க, கறுப்பா பயங்கரமான விசயங்களப் பத்தி படிச்சிருப்பீங்க, ஆனா நாங்க சொல்லித்தரது பயங்கர கறுப்பு பத்தி’ங்கிற மாதிரி 2 மாதங்களுக்கு வகுப்பு நடத்துவார்கள்” என்று கிண்டலாக விளக்குகிறார் விஷ்ணு கார்த்தி. ஜாவா, டாட் நெட், விபி, ஒபன் சோர்ஸ் போன்றவை கல்லூரியில் படித்தவைதான். ஆனால், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனிப்பட்ட பேட்டர்ன் கடைப்பிடிக்கப்படும்.

தனியாக வகுப்புகள் எடுப்பது ஐ.டி. துறையின் சிறப்பம்சம். ஏன் இப்படிச் செய்கிறார்கள் ?

“ வேலை பார்க்கும்போது அப்பப்ப தெரிஞ்சுக்கிற பல விஷயங்கள ஒரு கிளாஸ்ல சொல்லித்தர்றதுக்குக் காரணம் இருக்கு. டிகிரி வாங்கிய அறிவெல்லாம் இதுக்குப் பத்தாதுங்கிறத ரொம்ப சைலண்டா சொல்றதுக்கும், ஐ.டி. ஃபீல்டுக்கு ஏத்தபடி புதுசா வந்தவங்களோட மனநிலையைப் பழக்குவதற்காவும் தான் கிளாஸ் நடக்குதுன்னு நினைக்கிறேன்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்.

தொழில் நிறுவனங்களின் தேவைக்கும் மாணவருடைய திறனுக்கும் அதிக இடைவெளி இருக்கிறது என்ற வாதத்தை நாஸ்காம் என்ற ஐ.டி. நிறுவன உரிமையாளர்களின் அமைப்பு முன்வைக்கிறது. நாஸ்காம் அமைப்பின் தமிழ்நாடு, கேரள மண்டல இயக்குநர் கே. புருஷோத்தமன், “தமிழ்நாட்டுல வருஷத்துக்கு 30 ஆயிரம் பேர் ஐ.டி. ஐ.டி.லயும் சர்வீஸ் செக்டார்லயும் புதுசா வேலைக்கு வாறாங்க.

இதுல பாதிக்கும் மேற்பட்டவங்க கம்ப்யூட்டர், லேப் டாப்பெல்லாம் யூஸ்ஃபுல்லா பயன்படுத்துறாங்க. ஆனால், 30 சதவீதம் பேர்தான் தொழில் நிறுவனங்களின் இன்றைய தொழில்நுட்பத் தேவையை பூர்த்தி பண்றாங்க. பி.எச்.பி. உள்ளிட்ட புதிய கம்ப்யூட்டர் லாங்வேஜைப் படிச்சிருக்காங்க. லாங்க்வேஜ் ஸ்கில், வாடிக்கையாளர்களுடனான கம்யூனிகேஷன் இதுல எல்லாம் நம்மோட மாணவர்கள் ஆரம்ப நிலையில்தான் இருக்காங்க” என்கிறார்.

பயிற்சி முடிந்ததும் இதுதான் உங்கள் புராஜெக்ட், இதுதான் உங்கள் குழு என்று சொல்லும்போது ஒவ்வொரு புதிய ஊழியருக்கும் மனசுக்குள் பட்டாம்பூச்சி சிறகடிக்கத் தொடங்கும். ‘யு ஹாவ் பீன் அசைண்டு டு வொர்க் வித் மிஸ்டர் ரமேஷ் டீம், அஸ் எ ஜுனியர் சாஃப்ட்வேர் டெவலப்பர்’ என்று மின்னஞ்சலில் தேவ செய்தி வரும்போது, கால்கள் தரையில் இருக்காது.

அந்த டீமில் ஏற்கெனவே இருந்த சீனியர் ஒருவரை வீட்டுக்கு அனுப்பியதன் விளைவாக, அவருக்குக் கீழே இருந்தவர்களுக்குச் சங்கிலித் தொடராக புரமோஷன் கிடைத்தது. அங்கே பிடிக்கிற நெருப்பு அனுமார் வாலில் எரிந்ததைப் போல் நீண்டுகொண்டே போகும்.

ஆனால், இவ்வாறு குழுக்களில் அமர்த்தப்பட்ட பின்னர், ஒருவர் புதிய விஷயங்களை அறிந்துகொள்வதற்கும், கல்வியை மேம்படுத்திக்கொள்வதற்குமான வாய்ப்பு குறைவு. “நிறுவனம் எவ்வளவு பெருசோ அந்த அளவுக்கு நம்மோட திறமை கொறஞ்சுபோயிரும். ஒரு புராஜெக்ட்டோட ஒரு பகுதியை மட்டும் திறமையா செஞ்சு முடிக்கும் ஒருத்தரால முழுத் திட்டத்தையும் பத்திப் பெருசா தெரிஞ்சுக்க முடியாது. அதற்கான நேரமும் இருக்காது” என்கிறார் ஐ.டி. பணியாளர் செந்தில்.

ஐ.டி. பணியாளர்கள் வேலை, ரயில் முன்பதிவு இணையதளத்தில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்ய வேண்டியதாக இருக்கலாம். அல்லது ஒரு மென்பொருளைப் பற்றித் தகவல்கள் கூறி அதை மற்ற நிறுவனத்துக்கோ, தங்கள் நிறுவனத்துக்குள்ளேயோ விற்க வேண்டியிருக்கும். “இந்த வேலையைச் செய்வதற்கு பி.இ. முடிச்சிருக்க வேண்டியதில்ல. பேஸிக்கா கம்ப்யூட்டரப் பத்தி தெரிஞ்சிருக்கிற யாரு வேணும்னாலும் இதைச் செய்யலாம்.

அதனால்தான் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸோ ஐ.டி.யோ படிக்காதவங்களையும், பி.இ.மெக்கானிக்கல், எலக்டிரிக்கல்ன்னு ஐ.டி.க்குச் சம்பந்தமே இல்லாத படிப்பு படிச்சவங்களையும் வேலைக்கு எடுத்துக்கிறாங்க. இங்கே நம்மோட ஜாப்புக்குத் தேவையான டெக்னாலஜிய வேணும்னா கத்துக்கிடலாம். வேற பெரிய டெக்னாலஜி எதையும் கத்துக்கிட முடியாது” என்கிறார் ஐ.டி. பணியாளர்களின் அமைப்பான நாலேஜ் புரொபெஷனல் ஃபாரத்தைச் சேர்ந்த அருண்.

திறமையான மாணவர்கள் வேண்டுமென நிறுவனங்கள் கோரும், அதே நேரத்தில் வேலைச் சூழலோ மாணவர்களின் திறமையை மழுங்கடித்துவிடும். இந்த முரண்நகைதான் ஐ.டி.துறையின் உண்மை நிலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x