Published : 26 Jun 2015 02:04 PM
Last Updated : 26 Jun 2015 02:04 PM
நான் இப்போது கல்லூரி இறுதியாண்டில் படித்துக்கொண்டிருக்கிறேன். சிறு வயதிலிருந்தே மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை ஆகியவை என்னிடம் காணப்பட்டன. ஏதேதோ கற்பனை செய்துகொள்வேன். ஆனால் நடவடிக்கைகளில் எந்த வித்தியாசமும் தெரியாது. இயல்பாகத்தான் இருப்பேன். எனது 15 வயதில் எனது உறவுப் பையனுடன் எனக்குக் காதல் ஏற்பட்டது.
அவருடன் நெருக்கமாக இருந்தேன். ஆனால் ஐந்தே மாதங்களில் ஒருவருக்கொருவர் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் பிரிந்துவிட்டோம். அது ஒருவகையான இனக்கவர்ச்சி என்று தோன்றியது. அப்புறம் எனது வாழ்க்கை மாற வேண்டுமென முடிவு செய்துகொண்டேன். கல்லூரி வாழ்க்கை நல்லபடியாக ஆரம்பித்தது.
ஃபேஸ்புக்கில் எனது புரொஃபைல் போட்டோவைப் பார்த்துவிட்டு ஒருவர் என்னைக் காதலிப்பதாகத் தெரிவித்தார். ஆனால், எனது சூழலை அவரிடம் சொல்லிப் புரியவைக்க முயன்றேன். அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்தார். என்னால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. தொடர்புகொள்வதை விட்டுவிட்டேன். ஆனால், எனது மனதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. என் மனம் இளகிவிடுகிறது. அடிக்கடி ஏதேதோ கற்பனை வந்துவிடுகிறது.
ஆனாலும், எனது வேலைகளில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன். சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அவர் தனது காதலைத் தெரிவித்து எனக்கு ஆதரவாக இருப்பதாகச் சொன்னார். ஒருநாள் நேரில் சந்தித்தோம். நேரில் சந்தித்தபோது என்னை அவருக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு என்னைத் தொடர்புகொள்ளவும் இல்லை.
அப்புறம்தான் எனக்கு காதல் என்றால் என்ன என்பதும் எனது உறவுப் பையன்மீதுதான் எனக்குக் காதல் இருக்கிறது என்பதும் புரிந்தது. மறுபடியும் நான் கற்பனை உலகத்துக்குள் போய்விட்டேன். அவன் என்னை இப்போது காதலிக்கிறானா என்று தெரியாது. என்னை விட்டுவிட்டுப் போய்விட்டானே என்ற எண்ணமும் இருக்கிறது. அவன் மீது பிரியமும் வெறுப்பும் மாறி மாறி வருகிறது. நான் என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை. வெறும் கற்பனையிலேயே என்னோட வாழ்நாள் முடிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.
எனது எதிர்காலம் சரியாக அமைய வேண்டும் என்ற எண்ணமும் எனக்காக ஒரு அடையாளம் வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கிறது. இறுதி ஆண்டு என்பதால் எனது படிப்பும் எனக்கு முக்கியம். இந்நிலையில் ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி நேரில் என்னைப் பிடிக்கவில்லை என்றவன் மீண்டும் சாட்டிங்கில் வருகிறான். நான் எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும் எனக் கூறுங்களேன்…
கனவு வாழ்வில் நிஜத்தைப் புதைக்க முயலும் தோழியே, உங்களுக்கு ஒரு ‘ரொமாண்டிக் ஹீரோ’ வேண்டுமா அல்லது உங்களைப் புரிந்துகொண்டு ஆதரவாக இருக்கும் கணவர் வேண்டுமா? விடலைப் பருவத்தில் ஏற்படும் காதலில் ‘ரொமான்ஸ்’ அதிகமாக இருப்பதால் கிளுகிளுப்பாக இருக்கும். ஆனால் உங்கள் உறவினர் திரும்ப வரவேயில்லையே!
ஃபேஸ்புக் நண்பருடன் ஆரம்பமே சரியில்லையே; எப்போது தோன்றுவார், எப்போது மறைவார் என்று ஊகிக்கவே முடியாத ஒரு நபரை நம்பி வாழ்வை ஒப்படைப்பீர்களா? உங்கள் பட்டியலில் இருவரும் காணாமல் போகட்டும்! உங்கள் இளவரசர் எங்கோ காத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த வயதில் தெளிவாக யோசித்து தீர்மானம் எடுக்கும் பக்குவம் வந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கு ஏற்ற துணைவரைப் பொறுமையாகத் தேடிக் கண்டுபிடியுங்கள். ‘டெய்லர் மேடா’க யாருக்கும் துணை அமையாது.
காதலித்து, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டதாக நம்பிக் கல்யாணம் செய்துகொள்ளும் சிலரும்கூட ‘என் கணவன்/ மனைவி காதலித்தபோது இருந்ததைவிட மாறிவிட்டாரே!’ என்று ஏமாற்றப் பெருமூச்சு விடுகிறார்கள்! ‘ரொமான்ஸ்’ வாழ்க்கையாகாது. மணம் செய்துகொள்ளும் இருவரும் தனது துணையை அவரது நல்லது, நல்லதல்லாத குணங்களுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டால் மணவாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்; விட்டுக்கொடுப்பதும் இயல்பாக வரும்.
நிதிப் பத்திரங்கள் முதிர்வடைய வருடங்கள் ஆகாதா? அதுபோல் கணவன் மனைவி உறவும் முதிர்ச்சியடைந்து ஆழமான காதலாக மாற சில வருடங்கள் தேவை. உங்கள் இளம் பிராயத்தைப் பற்றி மேலும் தகவல்கள் கிடைத்தால்தான் ஏன் மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை என்று சொல்ல முடியும். ஒரு உளவியல் ஆலோசகரைச் சந்தித்தால் இவற்றைச் சரிசெய்துகொள்ள முடியும்.
எனக்கு வயது 27. கோவையில் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்துவருகிறேன். சுமார் ஐந்து வருடங்களாகச் சென்னையில் இருக்கிறேன். நான் சென்னைக்கு வந்த புதிதில் பேருந்தில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்திலேயே அந்தப் பெண்ணை எனக்குப் பிடித்துவிட்டது. நான் பணிபுரியும் அலுவலகம் இருந்த வளாகத்திலேயே மற்றொரு அலுவலகத்தில் பணியாற்றுகிறாள் என்பது எனக்குப் பின்னர் தெரிந்தது. ஒரே வளாகம் என்பதால் அவளை அடிக்கடி பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
மணந்தால் அவளைத்தான் மணக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டேன். எனது குடும்பத்தினரிடம் தெரிவித்தேன். ஆரம்பத்தில் அவர்கள் அதை எதிர்த்தாலும் எனது உறுதியைக் கண்டு எனது எண்ணத்துக்கு ஒத்துக்கொண்டார்கள். அதன் பின்னர் அந்தப் பெண்ணிடம் என்னுடைய எண்ணத்தைத் தெரிவித்தேன். அவளோ அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. சிரித்துவிட்டுப் போய்விட்டாள். அவள் என்னை விரும்புகிறாளா இல்லையா என்பதே தெரியவில்லை. என்னால் வேறு பெண்ணை நினைக்கவும் முடியவில்லை. அவள் மீது கொண்ட காதலால் அவள் குடியிருக்கும் தெருவிலேயே வீடு பார்த்துக் குடிபோய்விட்டேன். அவள் என்னை விரும்புவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனாலும் இதுவரை அவளிடமிருந்து ஒரு பதிலும் கிடைக்கவில்லை.
என் காதலுக்கு முதலில் ஆதரவு தந்த நண்பர்களும் என்னை இப்போது எச்சரிக்கிறார்கள். வீட்டில் என் தங்கைக்கும் மாப்பிள்ளை பார்த்துவருகிறார்கள். இரு திருமணங்களையும் ஒன்றுபோல் முடிக்க விரும்புகிறார்கள். இந்தப் பெண் இல்லாவிட்டால் நாங்கள் பார்க்கும் பெண்ணையாவது திருமணம் செய்துகொள் என வற்புறுத்துகிறார்கள். எனக்கு என்ன பண்ணுவதெனத் தெரியவில்லை. குடும்பச் சூழலுக்காக என்னை மாற்றிக்கொள்ளவா அல்லது நான் விரும்பும் பெண் என்னை விரும்பும்வரை காத்திருக்கவா?
‘அண்ணலும் நோக்கினார்; அவளும் நோக்கினாள்’ எனும் ரீதியில் இது தெய்வீகக் காதலாவது சாத்தியமில்லை; ஏனெனில் ஒரு பாதிதான் நடந்திருக்கிறது. மறு பாதி நடக்கும், நடக்கும் என்று இலவுகாத்த கிளியாகக் காத்திருப்பது முட்டாள்தனம் (மன்னிக்கவும்)! கண்டதும் காதல், ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிப்பது இதெல்லாம் திரைப்படங்களில் நடக்கலாம்.
காதல் ஜெயித்த பின் அவர்கள் வாழ்க்கை எப்படியிருந்தது என்று காட்ட மாட்டார்கள்!! ஒரு பகுத்தறிவாளராகச் (rational) சிந்தியுங்கள். வெளித் தோற்றத்தைத் தவிர வேறு என்ன தெரியும் அந்தப் பெண்ணைப் பற்றி? ஒருவேளை திருமணம் நடந்து, ஒத்துவரவில்லையென்றால், வாழ்க்கையே நரகமாகாதா?
உங்களை அவர் விரும்புவார் என்று எந்த நம்பிக்கையில் காத்திருப்பீர்கள்? ஆதாரமே இல்லாமல், திருமணம்வரை யோசித்து வைத்திருப்பது மணல் வீடு கட்டிய மாதிரி! உங்களை அவர் விரும்பியிருந்தால் கிடைத்த சந்தர்ப்பத்தில் அதைச் சொல்லியிருக்க மாட்டாரா?
செல்லப்பிள்ளையின் பேச்சுக்குப் பெற்றோரும் ஆடுகிறார்களே! வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று அப்பெண்ணிடம் பேசித் தீர்த்துக்கொள்வதைவிட்டு, அவள் தெருவிலேயே குடிபோவதற்கு நேரத்தையும், பணத்தையும் உழைப்பையும் செலவழித்த உங்களையும், உங்கள் பெற்றோரையும் என்னவென்று சொல்வது? அப்பாடா, உங்கள் பெற்றொர் வேறொரு பெண்ணை உங்களுக்குப் பார்ப்பதைப் பற்றிப் பேசுகிறார்கள்.
ஒரு பெண்ணைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்துகொண்டு திருமணம் செய்துகொள்வதுதான் புத்திசாலித்தனம். அநாவசியமான பிடிவாதத்தை நிறுத்திவிட்டுப் பெற்றோருக்குப் பச்சைக்கொடி காட்டுங்கள், பெண் பார்க்க!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT