Published : 05 Jun 2015 04:23 PM
Last Updated : 05 Jun 2015 04:23 PM
கல்லூரி மாணவர்கள் வெளி உலகில் ஜொலிக்க படித்தால் மட்டும்போதாது நடிப்புக் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நிரூபிக்கிறது திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி.
தமிழில் நவீன நாடகங்களுக்கான வளாக அரங்கை உருவாக்கி மாணவர்களின் தன்னம்பிக்கையை வென்றெடுத்துள்ளது இக்கல்லூரி. “இன்று மேடையில் நின்று உங்கள் முன் துணிச்சலுடன் பேச முடிகிறது என்றால் அதற்குக் காரணம் நாடகக் குழுவில் நான் இணைந்துகொண்டதுதான். ஆரம்பத்தில் கூச்ச சுபாவம் கொண்டவனாக இருந்தவன் நான். காரணம் எனது திக்குவாய்!” என முன்னாள் மாணவர் கல்லூரி விழாவில் உரை நிகழ்தத் தொடங்கினார் அக்கல்லூரியின் முன்னாள் மாணவரான சரவணன்.
பாத்திரமாக மாறினால் திக்காது
திக்குவாய் காரணமாக எதிலும் கலந்துகொள்ளாமலும், மறைந்தும், ஓடி ஒளிந்தும் கொண்டிருந்த அவரை முன்வரிசைக்குக் கொண்டு வந்தது நாடகக் கலைதான் என மெய்சிலிர்க்கப் பேசினார். இடையிடையே திக்குவாய் லேசாகத் தலையிட்டாலும் அதைப் பற்றிக் கவலையில்லாமல் பேசிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் எந்தவிதமான திக்கல், திணறல் இல்லாமல் சீராகப் பேசினார் சரவணன். “சாதாரணமாகப் பேசும் போது திக்குவேன். ஆனால் மேடை ஏறிவிட்டால் எத்தனை பக்க வசனமாக இருந்தாலும் ஒரு திக்கல்கூட இல்லாமல் பேசுவேன். அந்த நேரத்தில் பாத்திரமாகவே மாறிவிடுவேன். நான் யார், எனது பாத்திரம் என்ன என்பதை உணர்ந்துகொண்டால் போதும். வார்த்தைகள் சரளமாக வந்து விழுந்துகொண்டே இருக்கும்” என்கிறார்.
30 வயதைக்கூடத் தொடாத இளைஞருக்கு இத்தகைய தன்னம்பிக்கையை அளித்தது எது? அரங்கச் செயல்பாடுகள்தான் என்கிறார் சரவணன். அவர் மட்டுமல்ல அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பத்துக்கும் அதிகமான இளைஞர்கள் இவ்வாறே கூறுகிறார்கள்.
சவாலான முயற்சி
தமிழகத்தின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் கல்வியிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் கல்லூரிக் கல்வியை வழங்குவது மிகவும் சவாலான காரியமாகும். சாலை வசதியே இல்லாத கிராமங்களிலிருந்தும் மூன்றாவது வேளை உணவுக்கு வழியில்லாத குடும்பங்களிலிருந்தும் மாணவர்களைக் கல்லூரிக் கல்வியை நோக்கி இழுக்க வேண்டும் என்றால் அக் கல்லூரி வழக்கமான வசூல் ராஜாவாக இருந்தால் வேலைக்காகாது. ஏழை மாணவர்களுக்கு உதவிக் கரமும் சலுகைகளும் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
“நகர்ப்ப்புற மாணவர்களோடு போட்டியிடும் கிராமப்புற மாணவர் தகுதியற்ற பட்டதாரி என ஒதுக்கப்படுகின்றனர். மதிப்பெண்களோடு தலைமைப்பன்பு, தொடர்புத் திறன் ஆகியவையும் தேவைப்படுகிறது. அதை நாடக ஈடுபாடு வளர்த்தெடுக்கிறது. வகுப்பறையில் கேள்வி கேட்க ஒருவர் பதில் சொல்லப் பலர் என்ற படிநிலை நாடகக் குழுவில் கிடையாது” என்கிறார் நாடக இயக்கத்தின் பொறுப்பேற்று நடத்திவரும் தமிழ்த் துறைப் பேராசிரியரும் நவீன நாடகச் செயல்பாட்டாளருமான பார்த்திபராஜா.
தன்னம்பிக்கை ஊட்டும் நடிப்பு
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் மாணவர்களுக்கு நாடகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. நடிப்பு, நடனம், இசை, மேடையமைப்பு, ஒளியமைப்பு அம்சங்களில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. தமிழகத்தில் தலைசிறந்த நவீன நாடக ஆசிரியர்களும் இயக்குனர்களும் பயிற்சியாளர்களும் பயிற்சியளித்துள்ளனர். பறையாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், துடும்பாட்டம், செண்டை மேளம் என ஏதேனும் ஒரு நாட்டார் கலையைத் தேர்வு செய்து அதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுவது சிறப்பு அம்சமாகும். நாடகப் பட்டறையோடு இணைந்து ஏற்பாடு செய்யப்படும் இந்த நாடக விழாவில் தமிழ்நாட்டின் முக்கிய நாடகக் குழுக்கள் அழைக்கப்பட்டு அவர்களின் படைப்புகள் மாணவர்களுக்கு நிகழ்த்திக்காட்டப்படுகின்றன.
பாடத்திட்டத்துக்கு வெளியிலும் மாணவர்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் போதுதான் மாணவனின் வாழ்க்கைத் திறனையும் மேம்படுத்த முடிகிறது. இதைவிட்டால் அந்த மாணவன் தனது வாழ்க்கைத் திறனை மேம்படுத்த வேறு சாத்தியங்கள் இல்லை. இந்த வகையில் இக்கல்லூரியும் மாற்று நாடக இயக்கமும் முன்னுதாரணமாக இருக்கிறது.
நாடகத்தில் எல்லாம் சேர்ந்தா படிப்பு போயிரும் என்று சொன்ன காலம் போயாச்சு!
அப்பணசாமி - தொடர்புக்கு jeon08@gmail.com | கட்டுரையாளர் எழுத்தாளர், ஊடகவியலாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT