Published : 22 May 2015 03:37 PM
Last Updated : 22 May 2015 03:37 PM
பேட்மேன் கதாபாத்திரம் சென்னையில் இருந்தால் எப்படி இருக்கும்? அவனது சாகசங்களைச் செய்வதற்குச் சென்னையில் எத்தனை விதமான தடங்கல்கள் ஏற்படும்? இவை தான், சமீபத்தில் யூடியூபில் வெளியாகி 24 மணிநேரங்களில் 2 லட்சம் பார்வையாளர்களைப் பெற்ற ‘வாட் இஃப் பேட்மேன் வாஸ் ப்ரம் சென்னை’ வீடியோவின் கருப்பொருள். சென்னை பேட்மேனின் ஒரு நாள் வாழ்க்கையை இந்த வீடியோ காண்பிக்கிறது. ஐ.டி வேலையை விட்டுவிட்டு வெட்டி சாகசத்தில் ஈடுபடுபவன்தான் நாயகன் பேட்மேன்.
ஆல்பிரட் என்ற அங்கிளாக டெல்லி கணேஷ் வருகிறார். அவர்கள் வசிக்கும் பகுதியின் பெயர் பேட்மேனாபபுரம். பேட்மேனின் வவ்வால் சிறகு உடையில் ஓட்டலில் சாப்பிட்டுக் கைகழுவும் ஒரு கதாபாத்திரம் கைதுடைத்துப் போவதிலிருந்து போக்குவரத்துக் காவலரிடம் மாட்டுவதுவரை சென்னை வாழ்க்கைப் பின்னணியில் சுருக்கமாகக் கதை சொல்லப்படுகிறது. கடைசியில் பேட்மேனை டெல்லிகணேஷ் பெண்பார்க்கக் கூட்டிப்போகிறார். அங்கே நெற்றியில் பொட்டுடன் கேட்வுமன் மணமகளாக வருகிறார்.
வீட்டு வேலை பார்க்கும் அவெஞ்சர்ஸ்
ஹாலிவுட்டின் அவெஞ்சர் கதாபாத்திரங்கள் அனைவரும் தென்னிந்தியா வந்தால் எப்படி இருக்கும்? அவர்களின் பாஸ் மனோபாலாவாக இருந்தால் என்ன ரகளைகள் எல்லாம் நடக்கும்? ஹல்க் கதாபாத்திரம் தெலுங்கு பேசும் ஹைதராபாத் பையன். அயர்ன் மேன் மலையாளி. அவர்களுக்குச் செய்வதற்குப் பெரிய சாகச வேலைகள் இல்லாததால் வீட்டுச் சேவைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களது முதலாளிதான் ஃபூரி ஜெகநாத்தாக வரும் மனோபாலா.
தென்னிந்தியக் கலாசாரம் சார்ந்து இணைய வீடியோக்களைத் தயாரிக்கும் புட் சட்னி (put chutney) நிறுவனத்தினர்தான் சமீபத்தில் யூடியூபில் நம் இளைஞர்களிடையே பிரபலமாக இருக்கும் பல வீடியோக்களைத் தயாரித்துவருகின்றனர். 2013-ல் ஆரம்பிக்கப்பட்ட மும்பையைச் சேர்ந்த மல்டி சேனல் நெட்வர்க் நிறுவனமான கல்சுரல் மெஷின் நிறுவனத்தின் தென்னிந்திய சேனல்தான் புட் சட்னி.
அந்தரங்கம் முதல் அரசியல்வரை அனைத்தும் விளையாட்டாக அரங்கேறும் யூடியூப் ராஜ்ஜியத்தில் நகைச்சுவை சார்ந்த பொழுதுபோக்கை சீரியசான வேலையாகவே செய்துவருகின்றனர் புட் சட்னியின் படைப்பாக்கக் குழுவினர்.
வாராவாரம் நகைச்சுவை வீடியோ
புட் சட்னியின் கிரியேட்டிவ் ஹெட் ராஜீவ் ராஜா ராம். அசோசியேட் கிரியேட்டிவ் ஹெட் அஸ்வின் ராவ். இவர்களுடன் எழுத்தாளராகப் பாலகுமாரன் என்ற இளைஞர் பணியாற்றுகிறார். இயக்குநர் துசார் ராமகிருஷ்ணன். அசோசியேட் கிரியேட்டிவ் ஹெட்டாக இருக்கும் அஸ்வின் ராவ்தான் பேட்மேன் சென்னையின் நாயகனும்கூட. யூடியூப் வீடியோக்களின் எதிர்காலம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் குறித்து அஸ்வினிடம் பேசியபோது,
“ முன்பு செய்திகள் மற்றும் கதைத் தொடர்களைப் பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குக் காத்திருக்க வேண்டும். இப்போது இளைஞர்கள் எதற்கும் பொறுமை காக்கத் தயாராக இல்லை. செய்திகள் முதல் கதை நிகழ்ச்சிகள்வரை உள்ளங்கையில் உள்ள மொபைல் வழியாகவே நேரம் கிடைக்கும்போது பார்ப்பதையே விரும்புகிறார்கள். எதிர்காலத்தை ஆதிக்கம் செய்யப்போகும் ஊடகம் இணைய ஊடகம்தான். புட் சட்னி வாயிலாகத் தென்னிந்தியாவின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் நகைச்சுவை வீடியோக்களை நாங்கள் வழங்கிவருகிறோம். வாரம் மூன்று முதல் நான்கு வீடியோக்கள் வரை ஒளிபரப்புகிறோம்” என்கிறார்.
புட் சட்னி சேனல் சார்பாக எட்டு வீடியோக்கள் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளன. பேட்மேன் போன்ற நகைச்சுவைக் கதைகள் போக, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் எச்.ஆரின் ஒரு நாள் வாழ்க்கை பற்றிய வீடியோ இன்றைய ஐ.டி இளைஞர்களிடையே மிகப் பிரபலமானது.
டாஸ்மாக்கின் விரிவாக்கம் என்ன?
வாய்ஸ் ஆஃப் தி பீப்பிள் என்ற பெயரில் ரோட் சைட் ஸ்டோரிஸ் தலைப்பிலான வீடியோக்களையும் இவர்கள் தயாரிக்கப்போகின்றனர். டாஸ்மாக்கின் விரிவாக்கம் என்ன? குவார்ட்டர் என்றால் அளவு என்ன? போன்ற கேள்விகளைச் சாலையில் செல்லும் குடிமகனிடம் கேட்டு அவர்கள் சொல்லும் பதில்களைச் சுவாரசியமான வீடியோவாகத் தயாரித்துள்ளனர்.
யூட்யூப் வீடியோ இவர்களைப் பொறுத்தவரைப் பொழுதுபோக்கு மட்டும் அல்ல, வாழ்க்கையும்கூட.
புட் சட்னி குழுவினர் உருவாக்கும் நகைச்சுவை வீடியோக்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன்?
“கடந்த நான்கு வருடமாக ஆங்கிலத்தில் ஸ்டாண்டப் அப் காமெடி ஷோக்களை நேரடியாகச் செய்துவந்த அனுபவத்தின் தொடர்ச்சிதான் இது. தென்னிந்தியர்கள் எல்லாரும் தங்கள் வாழ்க்கையுடன் அடையாளம் காணும்படி நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்குவதற்கு அந்த அனுபவம் கைகொடுக்கிறது. ஒரு குடும்பத்தில், ஒரு தெருவில், ஒரு அலுவலகத்தில், பேருந்து சந்திப்பில் நடக்கும் சுவாரசியங்கள்தான் எங்களது காட்சிகளுக்கான உந்துதல்” என்கிறார் அஸ்வின்.
நாம் பார்க்கும் யூடியூப் வீடியோக்களில் பெரும்பகுதி அசலானவை அல்ல. அந்த வகையில் தென் இந்தியக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் புட் சட்னி முன்னணியில் இருக்கிறது. புட் சட்னியின் படைப்பாக்கக் குழுவினருக்கு இது பகுதி நேரப் பொழுதுபோக்கும் அல்ல.
“எங்கள் சேனல் வழியாக வெளியாகும் வீடியோக்களுக்கு விளம்பரங்கள் மூலம் வருவாய் இருக்கிறது. அத்துடன் எங்களது நிகழ்ச்சிகளில் கண்களை உறுத்தாத வண்ணம் சில நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காண்பிப்பதற்காகவும் அந்த நிறுவனங்கள் மூலம் வருவாய் உண்டு.
எங்களை நெறிப்படுத்தும் நிறுவனமான கல்ச்சர் மெஷின், எங்களைச் சுதந்திரமாக நிகழ்ச்சிகளை உருவாக்க அனுமதித்துள்ளது. படைப்பாக்கத்தில் தலையிடுவதில்லை. ஒரு வீடியோ நிகழ்ச்சியை முழுமையாக முடித்தபிறகு, ஒளிபரப்புவதற்கு முன்னர் அவர்கள் அனுமதிக்கு அனுப்பினால் போதும்” என்கிறார் அஸ்வின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT