Published : 29 May 2015 12:57 PM
Last Updated : 29 May 2015 12:57 PM

இனிமேல் பிடுங்கிச் சாப்பிட வேண்டாம்

பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் எப்படா லஞ்ச் டைம் வரும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். லெக்சரும் போரடிக்க, பசியும் வயித்தைக் கிள்ள கலர் கலரான உணவு வகைகள் கண்முன்னே ஓடும். அம்மா இன்னிக்கு என்ன கட்டியிருப்பாங்க என்று நாக்கு ஊறும். ஆனா இந்தச் சிந்தனை எல்லாருக்கும் இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை. சிலர் யாரோட டிபன் பாக்ஸைப் பிடுங்கி சாப்பிடலாம்னு யோசிச்சிட்டு இருப்பாங்க. வீட்டில் தங்காமல் விடுதியில் இருக்கும் மாணவர்கள்தான் இவர்கள். மெஸ், கேண்டீன், ஹாஸ்டல்களில் சாப்பிட்டு வெறுத்துப் போனவர்கள் இவர்கள். வேறு வழியில்லாமல் எல்லோரும் ஷேர் பண்ணிச் சாப்பிடுவார்கள்.

வீட்டிலிருந்து கொண்டுவந்தவர்கள் பெருந்தன்மையாக ஷேர் பண்ணிக் கொண்டாலும் சில சமயம் பகிர்ந்துகொள்வதில் சங்கடமும் இருக்கும் இல்லையா? ஆனால் இப்போது அப்படியெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை. இனி உங்களுக்குப் பிடித்த உணவு வகைகளை ‘மம்ஸ் மெனு’ இணையதளம் மூலம் ஆர்டர் செய்து அம்மாவின் கைகளால் செய்யப்பட்ட உணவைத் தினமும் சாப்பிட்டு மகிழலாம்.

நண்பர்களுக்கும் வீட்டுச் சாப்பாடு

‘மம்ஸ் மெனு’வை நடத்தும் தமீம் அன்சாரி இதைத் தொடங்கிய கதையைக் கேளுங்கள். படித்துக்கொண்டிருந்தபோது, தமீமின் கல்லூரி விடுதி நண்பர்கள் தினமும் கேண்டீன் உணவைச் சாப்பிட்டதால் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. ஆனாலும் வேறு வழியில்லாமல் அதையே தினமும் சாப்பிட்டுவந்தார்கள். இது தமீமுக்கு ஆழமான கவலையை ஏற்படுத்தியது.

அந்தக் கவலைக்கான தீர்வு பல ஆண்டுகள் கழித்துத்தான் கிடைத்தது. அவரும் அவருடைய நண்பர் அப்துல்லும் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது இந்த யோசனை தோன்றியது. தன் அம்மா சுவைபடச் சமைக்கும் உணவைத் தான் மட்டுமல்லாமல் பலரும் சாப்பிட அளிக்கலாமே என தமீமும் அப்துல்லும் நினைத்தார்கள்.

அம்மா கை மணம்

தமீமின் அம்மா முதலில் ஒப்புதல் தெரிவித்தார். பின்னர் நண்பர்களுடைய அம்மாக்களும், அக்கம் பக்கம் சமையலில் ஆர்வமுள்ள தாய்மார்களும் கைகோத்தார்கள். இப்படிக் கூட்டு முயற்சியால் அவரவருக்குப் பிடித்த உணவு வகைகளை நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு முதலில் சமைத்துக் கொடுத்தார்கள். சாப்பிட்ட அனைவருக்கும் ரொம்பவே பிடித்துப்போக ‘மம்ஸ் மெனு’ விடுதி, மேன்ஷன்களில் தங்கும் இளைஞர்களுக்கு ருசியோடு பசியாற்றிவருகிறது.

‘மம்ஸ் மெனு’வில் பணியாற்றும் பல தாய்மார்களில் முபினும் ஒருவர். 28 ஆண்டுகளாக இல்லத்தரசியாய் இருக்கும் முபினுக்குக் குழந்தைளைப் பார்த்துக்கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். இப்போது பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால், வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என்று நினைத்தபோது ‘மம்ஸ் மெனு’ விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பம் போட்டார். “முன்பு நான் என் கணவரைச் சார்ந்திருந்தேன். இப்போது சுதந்திரமாக உணர்கிறேன்” என ‘மம்ஸ் மெனு’ தந்த மகிழ்ச்சியை விவரிக்கிறார் முபின்.

ஆர்டர் செய்தால் கமகம சாப்பாடு!

‘மம்ஸ் மெனு’வில் சமையல் செய்யும் இல்லத்தரசிகள் ஒரு குழுவாக இணைந்து வாரந்தோறும் ஒரு உணவுப் பட்டியலைத் தயார் செய்கிறார்கள். இந்தப் பட்டியலின்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை உணவை வழங்குகிறார்கள். இது வேலைக்குச் செல்லும் எல்லோர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் சுவை மட்டுமில்லாமல் வட இந்திய, சைனீஸ் வகை உணவுகளையும் செய்து தரும் இவர்கள் இரவு மற்றும் மதிய உணவை விநியோகித்துவருகிறார்கள். மதிய உணவுக்குக் காலை பத்து மணிக்கு முன்பும் இரவு உணவுக்கு மாலை ஆறு மணிக்கு முன்பும், ஆர்டர் செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் ஆடர் செய்த பிறகே அம்மாக்கள் சுடச் சுட சமைக்கத் தொடங்குவார்கள். காம்போ சலுகைகளில் சேலட், அப்பளம், கலவை சாதம் போன்ற வகைகள் இருப்பதால் இதைப் பெரும்பாலானவர்கள் ஆர்டர் செய்கிறார்கள். இவ்வகை உணவுகளைப் பார்க்கும்போதே சாப்பிட ஆர்வம் தூண்டும்.

ஹாஸ்டல் / மேன்ஷன்வாசிகளே, இனிமேல் வீட்டிலிருந்து வரும் உங்கள் நண்பர்கள் உங்கள் டிபன் பாக்ஸைப் பிடுங்கித் தின்னப்போகிறார்கள்.

இதோ இணையதள முகவரி: >http://www.mumsmenu.com/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x