Last Updated : 08 May, 2015 12:32 PM

 

Published : 08 May 2015 12:32 PM
Last Updated : 08 May 2015 12:32 PM

புது வைரல்: ரஜினிக்கு வயது 77, கமலுக்கு 37

நம்முடைய வயதை யாராவது கேட்டு, அதைச் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டாலும் சரி, சரியாகச் சொல்லாமல் கூடுதலாகச் சொன்னாலும் நமக்குக் கோபம் வரும். ஆனால், இந்த வயதைக் கண்டுபிடித்துச் சொல்லும் தைரியமான காரியத்தை ஜாலியாகச் செய்யத் துணிந்திருக்கிறது மைக்ரோசாப்ட்.

இதற்காகக் கடந்த வாரத்தில், ஹவ் ஓல்டு.நெட் ( >How-old.net) என்னும் இணையதளத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த இணையதளம் ஒளிப்படத்தை வைத்து வயதைக் கணித்துச் சொல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் அறிமுகமானவுடன், அதைப் படுவேகமாக நெட்டிசன்கள் சோதித்துப் பார்த்ததால், சமூக வலைத்தளங்களில் வயதைக் கணிக்கும் டிரெண்டு வைரலாகப் பரவத் தொடங்கியது.

மைக்ரோசாப்டின் தகவல் மேலாண்மை மற்றும் மெஷின் லேர்னிங் பிரிவைச் சேர்ந்த பொறியாளர்கள் சந்தோஷ் பாலசுப்பிரமணியன், கோரோம் தாம்ஸன் என்ற இருவரும்தான் இந்தத் தளத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

ஒரு படத்தை அப்லோட் செய்தவுடன் இந்த இணையதளம் வயதைக் கணித்து உடனடியாகச் சொல்லிவிடுகிறது. ஆனால், ஹவ் ஓல்டு.நெட் கணித்துச் சொல்லும் வயது, நூறு சதவீதம் சரியாக இருக்கும் என்று சின்னப்பிள்ளைத்தனமாக எதிர்பார்க்கக் கூடாது. வயதைச் சரியாகக் கணிக்கவில்லையென்றால் வேறொரு படத்தை அப்லோட் செய்யலாம் என்ற குறிப்புடன்தான் இந்த இணையதளத்தை அறிமுகம் செய்திருக்கிறது மைக்ரோசாப்ட்.

இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகச் சொல்கிறது மைக்ரோசாப்ட். ஆனால், வயதைத் தவறாகக் கணிப்பதும் ஜாலியான விஷயம்தானே? அதை வைத்து நண்பர்களை, உறவினர்களை, பிரபலங்களைக் கிண்டல் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறதல்லவா? இந்த இணையதளம் இவ்வளவு பிரபலமாவதற்கு அதுவும் காரணம்.

இந்த இணையதளத்தை உங்கள் படத்தை அப்லோட் செய்துதான் சோதித்துப் பார்க்கவேண்டுமென்ற அவசியம் இல்லை. உங்களுக்குப் பிடித்த பிரபலங்களின் படங்களை வைத்தும் சோதித்துப் பார்க்கலாம். அப்படிச் சோதித்ததில், நம்ம சூப்பர் ஸ்டாருக்கு 77 வயது என்றும், உலக நாயகனுக்கு 37 வயது என்றும், இளைய தளபதிக்கு 37, தல அஜித்துக்கு 40 என்றும் கணித்திருக்கிறது இந்த மைக்ரோசாப்ட் இணையதளம்.

அதே நேரம், உங்களுடைய படத்தை அப்லோட் செய்யும்போது அதை இந்த இணையதளம் சேமித்து வைத்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கவே செய்கிறது. ஆனால், அப்படி அப்லோட் செய்யப்படும் படங்களைச் சேமித்து வைப்பதில்லை என்று தெரிவித்திருக்கிறது மைக்ரோசாப்ட். அது எந்த அளவுக்கு உண்மையென்று இப்போது சொல்ல முடியாது.

எப்படியிருந்தாலும் வயதைக் கணித்துச் சொல்வதை ஜாலியான ஒரு அனுபவமாக மாற்றியிருக்கிறது இந்த இணையதளம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x