Published : 22 May 2015 02:33 PM
Last Updated : 22 May 2015 02:33 PM
கிரேட் இந்தியன் ஹார்ன் பில் பறவைக்காக ஒரு டாக்குமெண்ட்ரி. ப்ளஸ் 2 தேர்வுகளை எழுதி முடித்த மறுநாளே, தனக்குப் பிடித்தமான பறவைச் சொந்தங்களைத் தேடிப் பெரும்பாறைக்கு கேமராவைத் தோளோடு தோளாக இணைத்துக்கொண்டு பயணமாகிவிட்டான் பிரசன்னா.
காரைக்குடிப் பையன் பிரசன்னா. எட்டாம் வகுப்பு படிக்கும்போதே பறவை அவதானிப்பு (Bird Watching) எனும் பறவைகள் தேடலில் ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவன். இவனைப் பறவைகளின் பார்வைக்குத் திருப்பியவர் இவனுடைய அப்பா மருத்துவர் மணிவண்ணன்.
தன் நண்பர்களோடு சேர்ந்து அடிக்கடி மலைக் காடுகளுக்கு டிரக்கிங் போவார் மணிவண்ணன். பொடியனாக இருந்த பிரசன்னா, ஒருசமயம் நானும் காட்டுக்கு வருவேன் என்று அடம் பிடித்தான். மணிவண்ணனும் மகனைக் காட்டுக்கு அழைத்துச் செல்லத் தயாரானார்.
ஆனால், “காட்டுக்குப் போறது விலங்குகளைத் தேடுறது இதை எல்லாம் உங்களோட நிறுத்திக்கோங்க. என் பிள்ளையைக் காட்டுக்கெல்லாம் அனுப்ப மாட்டேன்” என்று தடை போட்டார் மருத்துவரான பிரசன்னாவின் அம்மா. அந்த ஏமாற்றத்தைப் போக்கத்தான் பறவைகளைத் தேடும் பயணத்தில் மகனோடு கைபிடித்து நடக்க ஆரம்பித்தார் மணிவண்ணன்.
“எங்க வீட்டுக்குள்ளேயே நிறைய மரம் செடிகள் இருக்கு. அதில் அமர்ந்து இளைப்பாறுவதற்காக விதவிதமான பறவைகள் இங்கு வரும். தொடக்கத்தில் அந்தப் பறவைகளைத்தான் பிரசன்னாவைக் கவனிக்கச் சொன்னேன். புல்புல், டெய்லர் பேர்டு, முனியா இது மாதிரியான பறவைகளை எங்கள் வீட்டு மரங்களில் அடிக்கடி பார்க்கலாம். இவற்றில் சில, மூன்று, நான்கு தலைமுறைகள் கண்டவை.
தினமும் பொறுமையாகக் காத்திருந்து அந்தப் பறவைகளைப் படம் பிடிப்பான். நான் வீட்டுக்கு வந்ததும் இணையத்தில் அந்தப் பறவைகளின் பெயர், அவற்றின் பழக்கவழக்கம் ஆகியவற்றைத் தேடிக் கொடுப்பேன். எங்களுக்கே பிடிபடாத விஷயங்களை, பறவைகளைப் பற்றி நன்கு அறிந்த என் நண்பர் ஆத்தூர் ராமேஸ்வரனிடம் தெளிவுபடுத்திக்கொள்வோம். லீவு விட்டாச்சுன்னா இவனை வீட்டுல பாக்குறதே அரிதுதான்’’ என்கிறார் மணிவண்ணன்.
வால்பாறை, திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, புதுச்சேரியிலுள்ள கழுவேலி பறவைகள் சரணாலயம், கோடியக்கரை, சிவகங்கை அருகிலுள்ள வேட்டங்குடிப் பட்டி சரணாலயம் இவைதான் பிரசன்னாவின் பறவைகள் தேடல் களங்கள். கடந்த ஐந்து வருடங்களில் இங்கெல்லாம் பல நாட்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து சுமார் 200 வகையான பறவைகளைத் தனது கேமராவுக்குள் படம்பிடித்திருக்கிறான் தேசிய அளவில் உள்ள ‘பேர்டு சொஸைட்டி ஆஃப் இந்தியா’ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் பிரசன்னா.
“பெரும்பாறை பகுதியில் மட்டுமே 130 வகையான பறவைகள் இருக்கு. இது அந்தப் பகுதி மக்களுக்கே தெரியாது. ‘கிரேட் இந்தியன் ஹார்ன் பில்’னு ஒரு பறவை. வால்பாறைக் காட்டுல தான் இதைப் பார்க்கலாம். விலங்குகளில் டைகர் மாதிரி பறவைகளில் கம்பீரமானது ஹார்ன் பில். மரத்துக்குள்ள பொந்து குடைந்து அதற்குள்தான் கூடு கட்டும். முட்டையிட்டு அடைகாக்க ஆரம்பித்துவிட்டால் பெண் பறவை கூட்டை விட்டு வெளியில் வராது.
ஆண் பறவையானது பெண் பறவையைக் கூண்டுக்குள் வைத்து மரப் பொந்தில் சின்னதாக ஒரு திறப்பை மட்டும் வைத்துவிட்டு எஞ்சிய பகுதியை மண்ணால் பூசி மூடிவிடும். பெண் பறவைக்குத் தேவையான உணவைத் தேடித் தருவதும் ஆண் பறவைதான். வால்பாறையில் ஒரு நாள் முழுக்கக் காத்துக் கிடந்து இந்தப் பறவைகளின் நடவடிக்கைகளைப் படம் பிடித்தேன்.
இதுவரை நான் எடுத்த பறவைகளின் போட்டோக்களை வைத்து காரைக்குடியில் ஒரு ஒளிப்படக் கண்காட்சி நடத்தினோம். அடுத்ததாக, ‘ஹார்ன் பில்’ பறவையைப் பற்றிய ஒரு டாக்குமெண்ட்ரி எடுக்கப் போகிறேன். அதேபோல், ‘பேர்ட்ஸ் ஆஃப் சவுத் இந்தியா’ என்ற தலைப்பில் அபூர்வப் பறவைகள் குறித்த முழுத் தகவல்களுடன் புத்தகம் ஒன்றை வெளியிடும் திட்டமும் இருக்கிறது. ஆனால், அதற்கு இன்னும் நான்கைந்து ஆண்டுகள் கடுமையாக உழைக்கணும்” என்று பிரமிக்க வைக்கிறான் பிரசன்னா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT