Published : 22 May 2015 02:47 PM
Last Updated : 22 May 2015 02:47 PM

இப்படியும் டாட்டூ போடலாமா?

இளைஞர்கள் உலகில் பேஷன்களுக்குத் தனி இடம் உண்டு. அப்படியானதொரு பேஷனாக ஒருவரது உடம்பில் பாம்பு, பறவை, டாலர், இதயம், எட்டு, பகடை, நட்சத்திரம் போன்றவை உள்ளன. இப்போது அந்த பேஷன் என்னவென்பதை ஊகித்திருப்பீர்கள். உங்கள் ஊகம் சரிதான் இவை எல்லாம் ஒருவரின் கையில் உள்ள டாட்டூ.

தாந்திராவில் பணிபுரியும் நெல்சன் தன் வாழ்க்கையை அதாவது, தன் தாயின் பெயரில் தொடங்கி தன் தந்தை இறந்த தேதி மற்றும் வாழ்க்கையே ஒரு சூதாட்டம் என்பதைக் குறிக்கும் வகையில் பகடைக் காயையும், தனித்துவத்தைக் குறிக்கும் வகையில் புறாக்களையும், அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் நட்சத்திரத்தையும் சேர்த்து ஒரு வித டிசைனாக உருவாக்கித் தன் இடது கையில் டாட்டூ போட்டிருக்கிறார். மணிப்பூரைச் சேர்ந்தவராக இவர் இருந்தாலும் தன் தாயின் பெயரைத் தமிழில் முன் கழுத்தில் டாட்டூ போட்டிருக்கிறார்.

சுதந்திரத்தைக் குறிப்பது டாட்டூ

டாட்டூ போட்டுக்கொள்ள ஆண்களைவிடப் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும், தங்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு டிசைன்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகைகள் போட்டுள்ள அதே டிசைன்களைத் தாங்களும் போட்டுக்கொள்கிறார்கள். பறவைகள், பழங்குடியின வடிவமைப்புகள், காதலன்/காதலியின் பெயர், அல்லது தன் அம்மாவின் பெயர், கடவுள் உருவம் போல பல்வேறு டிசைன்களை டாட்டூக்களாகப் போட்டுக்கொள்கிறார்கள்.

போடும்போது மெல்லிய வலி இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் மிக ஆர்வத்துடன் போட்டுக்கொள்ள வருகிறார்கள். எம்.ஓ.பி. வைணவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி அனு, “நான் இரண்டு விஷயங்களை எனது வாழ்க்கையில் நம்புகிறேன் ஒன்று, நம்பிக்கை, இன்னொன்று சுதந்திரம். அதனால்தான் சுதந்திரத்தைக் குறிக்கும் பறவைகளை எனது கைகளில் பச்சை குத்தி இருக்கிறேன்” என்று டாட்டூக்கள் மீது இருக்கும் ஆர்வத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

அம்மாவிடம் பாசத்தைக் காட்ட

டாட்டூக்கள் போடுவதற்கு வயது வரம்பு கிடையாது. கடந்த நான்கு வருடங்களில் இதன் வளர்ச்சி அதிகமாகியுள்ளது. உடம்பில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இதைப் போட்டுக்கொள்ளாம் ஆனால் பெரும்பாலான மக்கள் கழுத்து மற்றும் கையில் போட்டுக்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

‘லவ் யூ மாம்’ என்று சீன மொழியில் டாட்டூ போட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஃபிரான்சிஸ் சேவியர், “எனக்கு டாட்டூக்கள் மீது அதீத ஆர்வம் இருந்தது, அது மட்டுமில்லாமல் அதில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆசையும் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்தவர் என்னுடைய அம்மா என்பதால் லவ் யூ மாம் என்று சீனச் சொற்களில் டாட்டூ போட்டேன்” என்கிறார்.

டாட்டூ போடுவதற்கான ஆரம்ப விலை 1,500 லிருந்து 20,000 வரை. ஒரு முழுக் கை டாட்டூ போட 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை செலவாகலாம் ஆனால் அதே டாட்டூவை எடுப்பதற்கு மூன்று முதல் நான்கு மடங்கு பணம் செலவாகும். (லேசர் சிகிச்சை மூலம் இந்த டாட்டுவை அழிக்க முடியும்) . ஒரு மாதத்துக்கு ஏறக்குறைய 300 நபர்கள் தங்கள் கடைக்கு வருகிறார்கள் என்கிறார் தாந்த்ரா கடையை இயக்கி வரும் ராஒன் என்கிற ஷன்.

யாருக்கும் புரியாதபடி

ஒரு முறை டாட்டூ போட்டுச் சென்றவர்கள் அதீத ஆர்வம் கொண்டு மீண்டும் வந்து போட்டுக்கொள்கிறார்கள். இதைத் தவிர தங்கள் காதலர்களின் பெயரை எழுதி அதை ஒரு டிசைன் கொண்டு மாற்றி, யாருக்கும் புரியாத வகையில் டாட்டூ போட்டுக்கொள்கிறார்கள். “டாட்டூ மேல் ஆர்வம் இல்லாமல் இருந்த நான் மற்றவர்களைப் பார்த்து முதலில் சிலுவை டாட்டூ போட்டுக்கொண்டேன், ஆனால் அது என் கைக்கு எடுப்பாக இல்லாததால் அதையே மாதாவின் உருவமாக மாற்றிக்கொண்டேன்” என்கிறார் ரூடி.

டாட்டூ போட்டுக்கொள்ளுவது பண்டைய காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்துவருகிறது என்றாலும், அது கடந்த சில ஆண்டுகளாகப் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வடிவமைப்புகளின் வழியே முக்கியத்துவம் பெற்றுவருகிறது. தற்காலிக அல்லது நிரந்தர டாட்டூ, ஸ்டைலாக மாறிவிட்டது. இந்த டாட்டூக்கள் பிரபலமாகிவருவதால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் டாட்டூ ஸ்டூடியோக்கள் அறிமுகம் அதிகரித்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x