Last Updated : 29 May, 2015 01:25 PM

 

Published : 29 May 2015 01:25 PM
Last Updated : 29 May 2015 01:25 PM

மதிப்பெண் பட்டியலைத் தூக்கி எறியுங்கள்

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் தமிழகத்தின் பெரும்பாலான மாணவ, மாணவிகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. பெற்றோர்கள், மாணவர்கள் இரு தரப்பினருக்குமே இந்த முடிவுகள் அவர்களின் எதிர்காலத்தையே மாற்றும் வல்லமை கொண்டவை என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

மாணவர்கள் சிலர் மிகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்று, பெற்றோரை உச்சிமுகரச் செய்வார்கள். சிலர் நன்கு படித்தும் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லையே என்ற வருத்தத்துடன், இடம் கிடைக்கும் படிப்பிலோ கல்லூரியிலோ சேர்வார்கள். சிலர் படிக்க ஆசைப்பட்டும் ஒழுங்காகப் படிக்க முடியாமல் தோல்வியுற்று வீட்டிலிருந்தே வெளியே வரமுடியாமல், குடும்பத்தினர் நண்பர்களின் பார்வைகளைத் தவிர்க்க முடங்கிக் கிடப்பார்கள்.

வாழ்க்கையில் ஜெயிக்கலாம் பாஸ்!

பத்தாவதிலோ, ப்ளஸ் டூ வகுப்பிலோ வெற்றிபெறுவதும் அதிக மதிப்பெண் எடுப்பதும் சந்தோஷத்துக்குரிய காரியம்தான். ஆனால் குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டாலோ, பெயிலாகிவிட்டாலோ குடிமுழுகிப் போய்விடாது என்கிறார் என்கிறார் பாலிவுட் நகைச்சுவை நடிகர் வீர் தாஸ். பாஸான மாணவர்கள், பெயிலான மாணவர்கள் இருவரையுமே எதிர்காலம் ஒரே புன்னகையுடன் தான் வரவேற்கக் காத்திருக்கிறது. மதிப்பெண் பட்டியல் எல்லாம் இரண்டாம்பட்சம்தான் என்கிறார் அவர். பள்ளியில் அடிப்படைப் பாடங்களில்கூட ஒழுங்காகத் தேறாதவர்கள்தான் உலகின் மதிக்கப் படும் சாதனையாளர்கள் என்பதைத் தனது ‘ஆன் யுவர் மார்க்ஸ்’ என்ற மூன்று நிமிட வீடியோவில் பேசுகிறார்.

காதல்…முறிவு…நட்பு…

ப்ளஸ் டூவிலோ, பத்தாம் வகுப்பிலோ குறைவாக மதிப்பெண் எடுத்து சோகம் கவிய உட்கார்ந்திருக்கும் இளைஞரா நீங்கள்? இந்த வீடியோவைப் பாருங்கள்…சந்தோஷமாக மாறிவிடுவீர்கள். ஒரு இளைஞரின் வாழ்வில் 17 வயது என்பது எத்தனை சவால்களை, போராட்டங்களை, பாடங்களை, வெற்றிகளை, காதல்களை, முறிவுகளை, நட்புகளைக் கொடுக்க காத்திருக்கிறது. இந்த வயதில் மதிப்பெண் பட்டியல் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு ஏன் கவலைப்பட வேண்டும் என்று கேட்கிறார் வீர் தாஸ்.

குறும்படத்தைக் காண: http://goo.gl/ThN0gd

வீர் தாஸ், ஒரு இளைஞரின், ஒரு யுவதியின் வாழ்வில் நடக்கப்போகும் எத்தனையோ சாத்தியங்களை நம் முன் இந்த வீடியோவில் வைக்கிறார். மேற்கண்ட எதைச் செய்வதற்காவது நமது மதிப்பெண் பட்டியல் உதவுமா? சோ…மதிப்பெண்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x