Published : 22 May 2015 02:45 PM
Last Updated : 22 May 2015 02:45 PM
என் பெயர் வினோத் ராஜ். சென்னை கிறித்துவக் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். சிறுகதைகள், நாவல்கள் எழுதும் முயற்சிகளில் இருக்கிறேன்.
திங்கள் முதல் வெள்ளி வரையிலான என்னுடைய கல்லூரி நெருக்கடிகளுக்கு மத்தியில், நான் ‘எப்போதடா வீக்எண்ட் வரும்?’ என்பதையே யோசித்துக்கொண்டிருப்பேன். நாட்களைக் கவனமாக எண்ணிக்கொண்டிருப்பேன். வெள்ளிக்கிழமையின் கடைசி வகுப்பு முடியும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு என்னளவில் உலகில் இணையே கிடையாது. ‘அய்யா... ஜாலி’ என்று மனது துள்ளிக் குதிக்கும். அந்த நிமிடமே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டிய காரியங்களை மனம் திட்டமிடத் தொடங்கும்.
எனக்குக் கொஞ்சம் இலக்கிய ஆர்வம் ஜாஸ்தி. அதனால், என்னுடைய திட்டங்கள் யாவும் பெரும்பாலும் ‘எழுத்து’ சார்ந்ததாகவே இருக்கும். சனிக்கிழமை முழுவதும் வீட்டிலேயே முடங்கிவிடுவேன். நிச்சயமாக அந்த ஒரு நாளில், ஒரு நாவலையோ அல்லது ஏதேனுமொரு நூலையோ படித்து முடித்துவிடுவேன்.
ஒரு சனிக்கிழமையில் ‘திருடன் மணியன்பிள்ளை’ எனும் நூலை வெறி பிடித்தவன் போலப் படித்து முடித்தேன். அது 500 பக்கங்களுடைய நூல். அந்தச் சனிக்கிழமையை என்னால் மறக்கவே முடியாது.
இப்படியான வாசிப்பு ஒரு பக்கம் இருக்க, நான் சொந்தமாகச் சிறுகதைகளும், அனுபவக் குறிப்புகளும் எழுதுவதுண்டு. பெரும்பாலான என்னுடைய நண்பர்கள் பொறியியல் கல்லூரிகளில் படிப்பவர்கள். அவர்களுக்கு எல்லாச் சனிக்கிழமைகளும் கல்லூரி இருக்கும். அதனால், சனிக்கிழமைகளில் நண்பர்களுடன் நான் நினைத்தாலும் நேரத்தைச் செலவிட முடியாது. சனிக்கிழமை இரவுகளில் நிச்சயமாக ஏதாவது ஒரு திரைப்படம் பார்த்துவிடுவேன்.
ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது-பத்து மணி வாக்கில்தான் எழுவேன். பதினோரு மணிக்கெல்லாம் வீட்டைவிட்டு வெளியேறிவிடுவேன். அவ்வளவுதான்! ஞாயிற்றுக்கிழமை முழுவதும் நண்பர்களுடன்தான். ஞாயிற்றுக்கிழமை பல்வேறு சாத்தியக்கூறுகளையுடையது. அவற்றுள் ஒன்று, நண்பர்கள் ஒன்று சேர்ந்து தொடர்ந்த விவாதங்களில் ஈடுபடுவது. விவாதம் எல்லாத் திசைகளிலும் பயணிக்கும்.
எல்லாவற்றைப் பற்றியும் பேசுவோம். பெரும்பாலும் சினிமா பற்றிய பேச்சுகளே நீளும். இரண்டு, தியேட்டருக்குச் சென்று புதிதாக வந்த ஏதாவது ஒரு படத்தைப் பார்ப்பது. மூன்று, பைக் எடுத்துக்கொண்டு உலா செல்வது. நான்கு கேமரா எடுத்துக்கொண்டு போட்டோ ஷூட் என்று கிளம்பிவிடுவது. இந்த நான்கில் ஏதாவது ஒன்றை நிச்சயமாகச் செயல்படுத்திவிடுவோம்.
கடைசியாக நண்பர்களுடன் ஹோட்டலுக்குச் செல்வது. பழக்கமான ஹோட்டல் என்பதால் ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் வழக்கமாக அங்கே செல்வேன். அங்குச் சென்று இரண்டு பரோட்டா, ஒரு கல் தோசை, ஒரு கலக்கி எனும் விதமாக எல்லோரும் சாப்பிடுவோம். பொருளாதாரம் இடம்கொடுத்தால் அதற்கு அதிகமாகவும் சாப்பிடுவதுண்டு. சாப்பிட்டு முடித்தவுடன் வீட்டுக்கு நடையைக் கட்டிவிடுவோம்.
இரவு தூங்கும் சமயத்தில் ‘நாளைக்குக் கல்லூரிக்குச் செல்ல வேண்டுமே....’ என்ற வெறுப்பு மறைய இளையராஜா பாடல் கேட்டுக்கொண்டே என் ஞாயிற்றுக்கிழமையை முடித்துவைப்பேன்.
‘இது என் வீக்எண்ட்’ பகுதியில் நீங்களும் உங்கள் வீக்எண்ட் அனுபவங்களை ஜாலியாகப் பகிர்ந்துகொள்ளலாம். உங்கள் வீக்எண்ட் கொண்டாட்டங்களை ‘இளமை புதுமை’ வரவேற்கிறது. உங்களைப் பற்றிய விவரங்களுடன் புகைப்படத்தையும் இணைத்து அனுப்புங்கள். வயது வரம்பு: 16 - 30.
தொடர்புக்கு: ilamaiputhumai@thehindutamil.co.in
கடிதத் தொடர்புக்கு: இளமை புதுமை,
தி இந்து, கஸ்தூரி மையம், 124,
வாலாஜா சாலை, சென்னை - 600002.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT