Last Updated : 08 May, 2015 02:14 PM

 

Published : 08 May 2015 02:14 PM
Last Updated : 08 May 2015 02:14 PM

உறவுகள்: இணைந்து வாழலாம், ஆனால்…

கல்யாணம் என்றாலே கெட்ட வார்த்தை என முடிவு செய்தவள் தாரா. தன் பெற்றோரின் கசப்பான திருமண வாழ்வைப் பார்த்துப் பார்த்து அவள் எடுத்த முடிவு அது. கட்டிடக் கலை நிபுணராகத் தன் வாழ்வைத் தானே வடிவமைக்கும் தாகம் அவளுக்கு. இண்டு இடுக்கில் முக்கி முனகி வாழ்வை நகர்த்தும் நடுத்தர வர்க்க வாழ்க்கையை ஒரே பாய்ச்சலில் தாண்டி அமெரிக்கா எனும் சொர்க்க பூமியில் குதித்துவிட வேண்டும் எனக் கனவு காண்பவன் ஆதி.

அந்தக் கனவின் வெளிப்பாடுதான் அவன் வடிவமைக்கும் கணினி விளையாட்டு. “பறந்து செல்லவா...” என அழைக்கும் தாராவையும் ‘காரா… ஆட்டக்கார’னான ஆதியையும் காதலர்களாக இணைத்துவைக்கிறது ஹைடெக் பறவைகளின் பெருநகரமான மும்பை. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழத் தொடங்குகிறார்கள். இது ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் கதை மட்டுமல்ல. நகரமயமாதலின் இன்றைய முகம் இது எனலாம்.

விரும்பியபடி வாழலாம்

இன்றைய சூழலில் படிப்பு, வேலை காரணமாகத் தங்கள் சொந்த ஊரைவிட்டு இடம்பெயர்ந்து செல்லும் இளைஞர்கள் ஏராளம். ஒரு புறம் இவர்கள் பாதங்கள் மண் வாசனையை இழக்கின்றன. மறுபுறம் புதிய வாழ்க்கை முறையைச் சுவாசிக்கத் தொடங்குகிறார்கள். திருமணம் வழியாகக் கட்டமைக்கப்படும் குடும்பம் பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட ஸ்தாபனம் என்பதால் அதிலிருந்து தப்பிக்க மனம் ஏங்குகிறது.

திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழலாம் எனும்போது விருப்பமுள்ளவரோடு விரும்பியபடி வாழலாம். “கமிட்டட்” என்ற சொல்லுக்கு இங்கு இடம் கிடையாது. நிர்பந்தங்களுக்கும், நிபந்தனை களுக்கும் உட்பட்ட வாழ்வல்ல இது. “ஒரு சர்டிஃபிகேட் இருந்தால் எல்லாம் சரியாயிடுமா?” எனத் தாரா கேட்பதைப் போல இருவரின் வாழ்வைக் காகிதங்கள் தீர்மானிக்கக் கூடாது, காதல்தான் தீர்மானிக்க வேண்டும் என நம்பும் உறவு நிலை. இத்தகைய போக்கைப் பற்றி நம் இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள்?

“சமூகத்துக்குக் கட்டுப்பட்டுப் பிடிக்காத பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, ஊர் வாய்க்குப் பயந்து பிடிக்காமலேயே குழந்தை பெற்றுக்கொண்டு யாருக்காகவோ வாழ்வதற்குப் பதிலாக நமக்காக வாழலாமே!” எனப் பளிச் பதில் சொல்கிறார் சென்னை தனியார் நிறுவனத்தில் மனிதவள மேலாளராகப் பணிபுரியும் கிருஷ்ண வேணி.

“நிர்ப்பந்திக்கப்பட்ட திருமண உறவுகள்தான் திருமணத்துக்கு வெளியே உறவுகள் உருவாகக் காரணம். அதற்குப் பதிலாக நமக்குப் பிடித்த ஆணுடன் கட்டுப்பாடின்றி உண்மையான அன்போடும், காதலோடும் சுதந்திரமாக வாழ வேண்டும்” என ஆணித்தரமாகச் சொல்கிறார் இவர்.

மதுரையைச் சேர்ந்த அர்ச்சனாவின் பார்வையில் காதல் ஒரு அற்புத உணர்வுதான். ஆனால் ஆணும் பெண்ணும் இணைந்து வாழக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளலாம் அல்லது பெற்றோரால் நிச்சயிக்கப் பட்டவரைத் திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டும். “கல்யாணம் செய்துகொள்ளாமல், நான் எந்தக் கமிட்மெண்ட்டுக்குள்ளும் சிக்கிக்கொள்ள மாட்டேன் என்பது பொறுப்பற்றதனம்” எனக் கண்டிப்பாகப் பேசுகிறார் அர்ச்சனா.

இது சுயநலம்!

சமூகத்தை எதிர்கொள்ளும் மன தைரியம் இருந்தால் இணைந்து வாழலாம் என்கிறார் ஈரோட்டில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் தமிழ். “காதலிப்பதும் வாகனம் ஓட்டுவதும் என்னைப் பொறுத்தவரை ஒன்றுதான். நாம் அதி வேகமாக ஓட்டினால் விபத்தில் சிக்கிக் கொள்வோம்” என்று எச்சரிக்கிறார். “அதற்காகக் காதல் கல்யாணத்தில் தான் முடிய வேண்டும் என்று சொல்ல மாட்டேன். அது ஒவ்வொருவரைப் பொறுத்தது” என்று தத்துவமாகப் பேசுகிறார்.

இணைந்து வாழும்வரை வாழலாம் அதன் பின் அவரவர் வழியில் பிரிந்து செல்லலாம் என்பது கேட்பதற்கு லேசாகவும், சுவாரசியமாகவும் தோன்றலாம். ஆனால் இதனால் ஒவ்வொரு மனிதனும் தனித் தீவாகத் துணையற்றுத் தத்தளிக்கும் நிலை உண்டாகும் எனக் கவலை கொள்கிறார் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் மேலாளராக பணிபுரியும் பாலசுப்ரமணியம்.

“சமூகத்தைச் சார்ந்துதான் நாம் இருக்கிறோம். அப்படியிருக்கையில் நான் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு இணங்காமல் சுதந்திரம் என்ற பெயரில் இணைந்து வாழ்வேன். பிடிக்கவில்லை எனில் பிரிந்து செல்வேன் என்பது சுயநலம். தனக்கென்று எந்த விதமான பொறுப்புகளும் ஏற்றுக் கொள்ளாமல் தவறு செய்வது” என்பது காரைக்குடியைச் சேர்ந்த அன்சிலின் குரல்.

காலத்தின் கட்டாயம்

திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழும் போக்கைக் கலாசார அழிவாகப் பார்த்து அதிர்ச்சியடையும் இளைஞர்கள் மத்தியில், இது காலத்தின் கட்டாயம். மணமக்கள் ஒருவரை ஒருவர் முகம்கூடப் பார்க்காமல் திருமணம் நடந்தது ஒரு காலம். அடுத்துப் பெற்றோர் நிச்சயித்துத் திருமணத்துக்கு முன்பு இருவரும் பேசி, பழகும் காலம் வந்தது. அதன் அடுத்த நிலை இணைந்து வாழ்வதுதான் எனச் சிந்திக்கும் இளைஞர்களில் ஒருவர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான காயத்ரி.

“நம்முடைய பாதி வாழ்வைப் படிப்பு, வேலை எனக் கழித்து விடுகிறோம். மீதமிருக்கும் வாழ்வை யாரிடமோ ஒப்படைக்கிறோம். அப்போது சிக்கல் ஏற்பட்டால், இது பிரிந்து செல்வதற்கான சிறப்பான வழி. அதற்காக ஒரு காதல் போனால் வேறொரு காதல் என சொல்ல மாட்டேன். வேறு வழியின்றி யாரோடும் யாரும் வாழத் தேவை இல்லை. அவ்வளவுதான்” என்கிறார் காயத்ரி.

திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது கலாச்சாரச் சீர்கேடு எனும் கோஷம் எழுப்புபவர்களை வன்மையாகக் கண்டிக்கிறார் விருதுநகரில் தனியார் நிறுவன பொறியாளர் பாலாஜி. “இது கலாசாரத்துக்கு எதிர் என்றால் திருமணத்திற்குப் பிறகு விவாகரத்துகூடச் செய்ய முடியாது. அதுவும் தவறுதான். விவாகரத்தைச் சட்டம் ஏற்றுக்கொள்ளும்போது ஏன் ஒருவர் தன் சுயவிருப்பத்தின் அடிப்படையில் காதலிப்பவரோடு இணைந்து வாழக் கூடாது?” என்கிறார் பாலாஜி.

குற்றம் அல்ல

காதலைக் கொண்டாடும் ஆசை எல்லோருக்கும் உள்ளது. ஆனால் அந்தக் காதல் ஒரு முறைதான் வர வேண்டும், குடும்ப அமைப்புக்குள் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என பல்வேறு வரையறைகளுக்குள் பார்க்கப்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் இப்படி இணைந்து வாழ்தலைச் சுதந்திரத்துக்கான வெளியாகப் பார்க்கிறார்கள்.

இருந்தும் ஏதோ விதத்தில் கலாசாரத்தின் பிடியிலிருந்து வெளிவர முடியவில்லை. “நான் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் ஒருவரோடு வாழ்ந்து பார்ப்பேன். சரி வரவில்லை என்றால் வேறொருவரைத் தேர்ந்தெடுப்பேன் என்பது தவறான போக்கு” எனும் வாக்கியத்தைக் கிட்டத்தட்ட இணைந்து வாழ்தலை ஆதரித்துப் பேசிய எல்லாப் பெண்களும் உதிர்த்துவிட்டார்கள்.

திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்தல் குறித்து உச்ச நீதிமன்றம் நவம்பர் 28, 2013-ல் அளித்த தீர்ப்பு இந்தப் பின்னணியில் முக்கியமாக நினைவுகூரத்தக்கது. “இணைந்து வாழ்வது என்பது குற்றமும் அல்ல பாவமும் அல்ல” என்பதே அந்த அறிவிப்பு.

ஆனால், நினைத்தபோது வெட்டிக்கொண்டு போகலாம் என்னும் எண்ணமும் தவறானது என்பதே பெரும்பாலான இளைஞர்கள் இதில் சேர்க்க விரும்பும் வாசகம் என்றே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x