Published : 01 May 2015 05:11 PM
Last Updated : 01 May 2015 05:11 PM
கோடை விடுமுறை ஆரம் பிக்க இருக்கிறது. செமஸ்டர் முடிச்சதும் எப்படியெல்லாம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று இப்போதே நிறைய யோசித்து வைத்திருப்பீர்கள். ஆனால், கிட்டத்தட்ட ஒரு மாத விடுமுறையை ரெஸ்டிலேயே கழிப்பது அவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்காது இல்லையா? அதனால், இந்த விடுமுறையில் உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு ஹாபியைத் தொடர்வது பற்றித் திட்டமிடலாம். அது விடுமுறையை ஜாலியாக மட்டுமல்லாமல் அர்த்தமுள்ளதாகவும் கழிப்பதற்கு வழிவகுக்கும்.
விதவிதமான வகுப்புகள்
பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் இப்போது கல்லூரி மாணவர்களுக்கும் கோடை வகுப்புகள் நடைபெறுகின்றன. உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் அந்த மாதிரி ஏதாவது ஒரு வகுப்பில் சேரலாம். நீங்கள் கலைத் துறையில் ஆர்வமுள்ளவராக இருந்தால் இசை, நடனம், ஓவியம், போட்டோகிராபி என ஏதாவது ஒரு வகுப்பில் சேரலாம். உடலை ஆரோக்கியமாக மாற்ற நினைப்பவர்கள் இந்தக் கோடை விடுமுறையை அதற்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.விளையாட்டு வகுப்புகள், யோகா, நீச்சல், ஃபிட்னஸ் ஜிம் போன்ற வகுப்புகளுக்குச் செல்லலாம்.
என்னடா, இந்த வெயில்ல கிளாஸ்க்குப் போகச் சொல்றாங்களே, அப்படின்னு நீங்க யோசிக்கிறது புரியுது. உங்கள் வகுப்புக்கான நேரத்தைச் சரியாகத் தேர்ந்தெடுத்தாலே கோடை வெயிலிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம். கூடுமானவரை, காலை பத்து மணிக்குள் வகுப்பை முடித்துவிடும்படியும், மாலை நான்கு மணிக்குமேல் வகுப்புக்குச் செல்லும்படியும் உங்கள் நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இதனால், கோடை வெயிலால் பாதிக்கப்படாமல் விடுமுறையை அர்த்தமுள்ளதாக மாற்றலாம்.
திறமைகளை விரிவாக்கலாம்
உங்களுக்குப் பிடித்த துறையில் உங்களை மேம்படுத்திக்கொள்ளவும் இந்த ஒரு மாத விடுமுறையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். “எனக்குத் திரைப்படத் துறையில் ஆர்வம் அதிகம். அதனாலேயே விஸ்காம் தேர்ந்தெடுத்துப் படித்துக்கொண்டிருக்கிறேன். இந்த விடுமுறையில் திரைப்படங்கள் சார்ந்து என் பார்வையை விரிவுப்படுத்தலாம் என்று இருக்கிறேன். அதனால், இந்த ஒரு மாத இடைவெளியில் ஒரு குறும்படம் எடுக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.
‘கலர் பிளைண்ட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்தக் குறும்படத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். படப்பிடிப்பு வேலைகளை விடுமுறையில் தொடங்க இருக்கிறேன். அத்துடன், நண்பர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து இந்த விடுமுறையில் ஹாலிவுட்டின் சிறந்த இயக்குநர்களின் படங்களைப் பார்க்கத் திட்டமிட்டிருக்கிறோம். அந்தப் படங்களைப் பார்த்து அவர்களுடைய பட உருவாக்க ஸ்டைலை விவாதிக்க இருக்கிறோம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த கெவின்.
துறை சார்ந்து மட்டுமல்லாமல் அன்றாட வாழ்வில் நமக்கு அடிப்படையாகத் தேவையாக இருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தையும் இந்த விடுமுறையில் கற்றுக்கொள்ளலாம். “நான் இந்த விடுமுறையில் கார் டிரைவிங் கற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
எனக்கு வண்டி ஓட்டுவது ரொம்பப் பிடிக்கும். அதனால், டிரைவிங் கிளாஸ் சேர்ந்து இந்த ஒரு மாதத்தில் வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளப்போகிறேன். அத்துடன், எனக்குப் போட்டோகிராபி மீது ஆர்வம் இருக்கிறது. அதனால், நண்பர்களுடன் சேர்ந்து ‘போட்டோகிராபி வாக்’ செல்லலாம் என்றும் திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார் பிஏ ஜர்னலிசம் படிக்கும் ரோட்ரிக் ஆலென்.
எனக்கு வகுப்புகளுக்கு எல்லாம் செல்லப் பிடிக்கவில்லை என்று சொல்பவர்கள், புதுமையான பயணங்களுக்குத் திட்டமிடலாம். ஆனால், ஏதாவது ஒருவகையில் இந்தக் கோடை விடுமுறையை அர்த்தமுள்ள வகையில் கழித்தால், அது புதுமையான அனுபவமாகவே இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT