Published : 29 May 2015 08:04 PM
Last Updated : 29 May 2015 08:04 PM
“இசை என்பது தெய்வீகமானது. கண்ணை மூடிக்கொண்டு வாசிக்கையில் இறைவனை நேரில் பார்ப்பது போல் உணர்கிறேன்” நெக்குருகிச் சொல்கிறார் 13 வயதிலிருந்து சாக்ஸபோன் இசைக்கும் பாண்டிச்செல்வி.
கோவை மாவட்டம் பேரூரைச் சேர்ந்த தவில் வித்வான் கருப்பையாவுடைய மகள் பாண்டிச்செல்வி. சாக்ஸபோன் கச்சேரி மேடைகளுக்கு தவில் வாசிக்கப் போகும் கருப்பையா, தன் பிள்ளைகளும் இப்படி சாக்ஸபோன் வாசித்துப் புகழ்பெற வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொண்டார். அதை நிறைவேற்ற தன் மூத்த மகள் சண்முகப்பிரியாவுக்கு சாக்ஸபோன் கற்றுக் கொடுத்தார். ஆனால், அப்பாவின் விருப்பத்துக்காக சாக்ஸபோனைக் கையிலெடுத்த சண்முகப்பிரியாவால் இரண்டு வருடங்கள்கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
சாக்ஸபோன் வாசிப்பில் சண்முகப்பிரியாவுக்கு நாட்டமில்லை என்றதும் கருப்பையா நிலைகுலைந்துபோய்விட்டார். தனக்குப் பிறகு தனது குடும்பத்தில் இசை வாரிசு இல்லாமல் போய்விடுமோ எனும் ஏக்கம் அவருக்குள் எழுந்துள்ளது. இதைப் புரிந்துகொண்டார் கருப்பையாவின் இளைய மகள் பாண்டிச்செல்வி.
அப்போது இவர் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தார். நர்ஸிங் அல்லது இன்ஜினீயரிங் படித்துக் குடும்பச் சுமையைத் தாங்க வேண்டும் என்பது பாண்டிச்செல்விக்கு லட்சியமாக இருந்தது. அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காகத் தனது லட்சியத்தைத் தகனம் செய்துவிட்டார் இவர். ‘நான் வேணும்னா சாக்ஸ் வாசிச்சுப் பாக்கட்டுமாப்பா?’னு கேட்டுள்ளார்.
இப்படிக் கேட்டதும் கருப்பையாவின் முகத்தில் ஒரு பிரகாசம் தென்பட்டுள்ளது. இருந்தாலும், ‘எல்லாரும் சாக்ஸ் வாசிச்சிட முடியாதும்மா... அது அவ்வளவு ஈஸியில்லை’என்று கூறியுள்ளார். ‘முயற்சி பண்ணிப் பார்க்கலாம்பா’என்று பாண்டிச்செல்வி சொன்னதும் உறவினர் ரவிச்சந்திரனிடம் முறைப்படி சாக்ஸபோன் கற்றுக்கொள்ள அவரை அழைத்துச் சென்றுள்ளார் கருப்பையா.
பாண்டிச்செல்வியின் மாமாவான ரவிச்சந்திரனிடம் கற்றுக்கொண்டு, கிளார்நெட் வேணு கோபாலிடமும் ஆறு மாசம் படித்துள்ளார் பாண்டிச்செல்வி. பின்னர், தந்தையுடன் சேர்ந்து தானும் கச்சேரிகளுக்குப் போக ஆரம்பித்துள்ளார். “ஆண்களுக்கு நிகரா நான் சாக்ஸபோன் வாசிக்கிற பார்த்ததும் அப்பாவுக்கு என்மேல நம்பிக்கை வந்துருச்சு” தான் சாக்ஸபோன் கலைஞரான பெருமிதத்துடன் சொல்கிறார் பாண்டிச்செல்வி.
தற்போது கோவையிலுள்ள அரசு இசைக் கல்லூரியில் இசைக் கலைமணி படிப்பில் பி.ஏ., நிறைவு ஆண்டு படிக்கிறார் பாண்டிச்செல்வி. படித்துக்கொண்டே சாக்ஸபோன் இசைக் கச்சேரிகளிலும் தனி முத்திரை பதித்துக்கொண்டிருக்கிறார். கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் சுமார் ஆயிரம் மேடைகளில் இவரது சாக்ஸபோன் முழங்கி இருக்கிறது. பொதுவாக சாக்ஸபோன் கருவியை மூச்சடக்கி ஊதுவதற்கு ஆண்களே சிரமப்படுவார்கள். ஆனால், மூன்று மணி நேரம் இருந்த இடத்தை விட்டு நகராமல் அநாயாசமாக சாக்ஸில் அசத்துகிறார் பாண்டிச்செல்வி. சினிமா, நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமின்றி கர்னாடக இசையிலும் இவரது நேர்த்தி வெளிப்படுகிறது.
“சாதாரணமா பயிற்சி எடுக்கும்போதுகூடச் சிரமப்படுவேன். ஆனால், மேடையில் போய் உக்காந்துட்டேன்னா அந்த மூணு மணி நேரமும் எந்தச் சிரமமும் இல்லாமல் வாசிச்சிருவேன். இதை கடவுள் அருள்னு தான் சொல்லணும்” என்கிறார் இவர். மூன்று வருடங்களுக்கு முன்னர் கருப்பையா காலமாகிவிட்டார். இப்போது இவரது கச்சேரி வருமானத்தில்தான் இவருடைய குடும்பம் வாழ்கிறது. இப்போது இவருக்கு வரன் பார்க்கிறார்கள். ஆனால் மணமுடித்த பின்னர் கச்சேரிக்குப் போகக் கூடாது; வீட்டில் இருந்தால் போதும் எனப் பலரும் சொல்லிவருகிறார்கள். ஆனால் திருமணம் தனது இசையை முடக்குவதைப் பாண்டிச்செல்வி விரும்பவில்லை. தனது இசைப் பயணத்தில் துணையாக வரச் சம்மதிப்பவருக்குத்தான் கழுத்தை நீட்டுவது என்ற முடிவுடன் உள்ளார் இவர்.
சாக்ஸ் இசையில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடிக்க வேண்டும், தந்தையின் கனவை நனவாக்க வேண்டும் என்பதே இவரது லட்சியம். “பிரபல சாக்ஸபோன் வித்வான் கத்ரி கோபால்நாத் மாதிரியான ஆசானிடம் ஒரு ஆறு மாதமாவது சாக்ஸ் பயிற்சி எடுத்துக்கொண்டு எனது லட்சியத்தை நிறைவேற்றணும்’’ பளிச்செனப் பேசுகிறார் பாண்டிச்செல்வி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT