Last Updated : 15 May, 2015 02:28 PM

 

Published : 15 May 2015 02:28 PM
Last Updated : 15 May 2015 02:28 PM

காதலைச் சொல்லும் ஓவியம்

கசிந்துருகும் காதல் எனச் சொன்னதும் கொட்டும் மழையில் காதலர்கள் இணையலாமா அல்லது பிரிந்து செல்லலாமா எனப் பரிதவிக்கும் சினிமாக் காட்சி மனதில் ஓடும். ஆனால் நிஜ வாழ்வில் காதல் ஒரு யதார்த்த உணர்வாகவே வெளிப்படுகிறது. அதிலும் அழகும், பரவசமும் இருக்கவே செய்கின்றன. அப்படிப்பட்ட யதார்த்தக் காதல் காட்சிகளைத் தொடர் ஓவியங்களாக வரைந்து வருகிறார் கொரியாவைச் சேர்ந்த பியூங்க் எனும் பெண் ஓவியக் கலைஞர்.

பியூங்கினுடைய ஓவியத் தொடரின் நாயகனும் நாயகியும் மிகச் சாதாரணத் தோற்றம் கொண்டவர்கள். அவர்கள் காதலைப் பரிமாறிக்கொள்ளும் இடம் அவர்கள் குடியிருக்கும் அபார்ட்மெண்ட் வீடுதான். நெரிசலான நகர்ப்புறச் சூழலுக்கு நடுவே ஓர் அமைதியான வீடு அது.

தினந்தோறும் காதல்

ஒரு படத்தில், காதலன் களைப்பாக வீடு திரும்புகிறான். அப்போது காதலி கையில் பிறந்தநாள் கேக்கை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் மறைந்து நிற்கிறாள். மற்றொரு படத்தில், காதலி சமையலறையில் தக்காளி நறுக்கும்போது காதலன் பின் நின்று அவளைக் கட்டி அணைக்கிறான்.

இவர்களுடைய செல்லப் பிராணி ஒரு குட்டிப் பூனை. இவர்கள் டிவி பார்க்கும்போது அதே சோபாவில் அந்தப் பூனையும் தூங்குகிறது. காதலன் வருகைக்காக கேக்கை வைத்துக்கொண்டு காதலி காத்திருக்கும்போது பூனையும் அவள் கால் அருகில் மறைந்து நிற்கிறது. இப்படிப் பூனையும் இவர்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது.

தினந்தோறும் காதலை எப்படியெல்லாம் பரிமாறிக்கொள்ளலாம் என்பதைக் காட்சி வடிவில் காட்டுகின்றன பியூங்கின் ஓவியங்கள். ஒவ்வொரு படமும் வெவ்வேறு கோணங்களில் வரையப்பட்டுள்ளன.

காதலி தூங்கும்போது காதலன் அவளுக்குப் போர்வை போர்த்தும் ஓவியம் அறையின் கூரையிலிருந்து பார்வையாளர் பார்ப்பதுபோல வரையப்பட்டுள்ளது. படிக்கட்டில் இருவரும் உட்கார்ந்திருக்கும் படத்தில் படிக்கட்டுக்குப் பின்னால் உள்ள ஜன்னல் அத்தனை நுணுக்கங்களுடன் நகரின் கட்டிடங்களைக் காட்டுகிறது. இருவரும் தொலைக்காட்சி பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் மேல் விழும் பச்சை ஒளி சொல்கிறது.

ஒவ்வொரு ஓவியமும் ஒரு நிகழ்வை மட்டுமே காட்சிப்படுத்தினாலும் பார்வையாளரின் மனம் அத்தனை படங்களையும் ஒருங்கிணைத்து ஒரு திரைப்படம் போலக் காணத் தொடங்குகிறது.

காதல் என்பது

கிராஃபோலியோ (Grafolio) எனும் இணைய நிறுவனத்தில் ஓவியர் பியூங்க் பணிபுரிகிறார். 2014 முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் “காதல் என்பது” என்ற தலைப்பில் தன்னுடைய ஓவியக் கதைகளைப் பதிவேற்றுகிறார். நூற்றுக்கும் அதிகமான இவ்வகைச் சித்திரங்கள் கிராஃபோலியோ இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளன. சாதாரண பென்சில் கொண்டு பல நுணுக்கங்களுடன்கூடிய காதல் சித்திரம் ஒன்றை பியூங்க் வரையும் வீடியோ பதிவு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

“எல்லோரும் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடிய உணர்வு காதல். தினந்தோறும் காதலை அனுபவித்துவருகிறோம். ஆகையால் காதலின் அர்த்தத்தை நான் தினசரி வாழ்க்கையில் தேடுகிறேன். அந்தத் தேடலைக் கலைப் படைப்பாக மாற்றி வருகிறேன்” எனத் தன்னுடைய ஓவியங்கள் குறித்த சுருக்கமான விளக்கத்தைத் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பியூங்க்.

பியூங்கின் காதல் சித்திரங்களைக் காண: >http://www.grafolio.com/puuung1 மற்றும் >http://www.facebook.com/puuung1

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x