Last Updated : 15 May, 2015 03:56 PM

 

Published : 15 May 2015 03:56 PM
Last Updated : 15 May 2015 03:56 PM

சுயத்தை அலசும் ஓவியங்கள்

இன்றைய இளம் ஓவியர்களிடம் சுயம் பற்றிய தேடல் அதிகரித்து வருகிறதோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது சென்னை லலித் கலா அகாடமியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘மிராக்கி’ ஓவியக் கண்காட்சி. ஆன்மா, படைப்பாற்றல், அன்பு ஆகிய மூன்றையும் இணைத்து ஒருவர் செய்யும் செயலுக்குக் கிரேக்கத்தில் ‘மிராக்கி’ என்று அர்த்தமாம்.

இந்த ‘மிராக்கி’ கண்காட்சியில், ஐந்து ஓவியர்களின் முப்பத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இவர்கள் சென்னை அரசு கவின்கலை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள். ஓவியங்கள் மட்டுமல்லாமல் சிற்பங்களையும் இந்தக் கண்காட்சியில் பார்க்க முடிகிறது.

பெண்களின் இன்றைய நிலைமையைத் தன் ஓவியங்களில் பிரதிபலிக்க வைத்திருக்கிறார் செலின் சபாஷினி. கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் இவரது ஓவியங்கள் அனைத்தும் ஒன்றின் தொடர்ச்சி மற்றொன்று என்ற கதியில் அமைந்துள்ளன. பெண்கள் தங்களுக்குத் தாங்களே எப்படிக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்கிறார்கள், பிறருடைய கனவுகளைத் தங்களுடைய கனவுகளாக எப்படி இயல்பாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கச்சிதமாக விளக்குகின்றன செலினின் ஓவியங்கள்.

“இப்போது பெண்கள் கிட்டத்தட்ட அருகிவரும் உயிரினமாகச் சமூகத்தில் கருதப்படுகின்றனர். ஒரு பாலினப் போர் நடைபெறுவதுபோல், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்துவருகின்றன. நிறப் பாகுபாடு, நீண்ட கூந்தல் எனச் சமூகம் பெண்களுக்கு வரையறுத்துள்ள போலி வரைமுறைகளை என் ஓவியங்களில் உடைத்திருக்கிறேன்” என்கிறார் செலின் சுபாஷினி.

சந்திரா இளங்கோ ஆர்ட் ஃபவுண்டேஷனின் விருதுபெற்றிருக்கிறது விமலேஷ்வரனின் ‘மிராக்கி’ ஓவியம். விமலேஷ்வரனின் தந்தை ஓர் ஓவிய ஆசிரியர் என்பதால் ஒரு நல்ல படைப்பை உருவாக்கும்படி விமலேஷ்வரனைத் தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கிறார்.

இதனால், ஒரு நல்ல படைப்பை உருவாக்க வேண்டும் என்பது எவ்வித மனநெருக்கடியை ஏற்படுத்தும் என்பதையே ஓவியமாக்கியுள்ளார் விமலேஷ்வரன். அது தன்னுடைய ஆன்மாவை வெளிப்படுத்து வதால் அதற்கு ‘மிராக்கி’ என்று தலைப்பிட்டி ருக்கிறார். இப்படி இந்த ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் ஓவியங்கள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்டி ருக்கின்றன.

இயற்கை, ஆன்மா, மனிதர்களின் உணர்வுகள், ஓவியர்களின் வாழ்க்கை எனப் பல்வேறு அம்சங்களையும் பேசுகின்றன நாகராஜனின் ஓவியங்கள். “எல்லோரும் ஏதோவொருவிதத்தில் நமக்குள் பலவித உணர்வுகளை மறைத்துவைத்திருக்கிறோம். அவற்றைத் தேவையில்லாத இடத்திலும், தேவையான இடத்திலும் மாறிமாறி வெளிப்படுத்துகிறோம். அதைத்தான் என்னுடைய ஓவியங்களில் வெளிப்படுத்தியிருக்கிறேன்” என்கிறார் நாகராஜன்.

சுஷில்குமாரின் ஓவியங்கள் முழுக்கவே சுயம் பற்றிய அலச லாகவே. இருக்கின்றன. நினைவுகளை அழிக்கவும், மீட்டெடுக்கவும் எப்படி நாம் ஒவ்வொருவரும் முயல்கிறோம் என்பதை இவரது ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன.

செல்வத்தின் ‘அறியாத இருப்பு’ சிற்பம் சமூகம் ஒரு தனிமனிதனுக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆழமாக வெளிப் படுத்துகிறது.

இந்த ஓவியக் கண்காட்சி மே 17-ம்தேதி வரை லலித் கலா அகாடமியில் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x