Last Updated : 01 May, 2015 05:34 PM

 

Published : 01 May 2015 05:34 PM
Last Updated : 01 May 2015 05:34 PM

காத்தாடி சொல்லும் சேதி

இளைஞர்களின் மன மன மெண்டல் மனதைக் கவர்ந்திழுக்கும் சக்தி திரையிசைக்கு மட்டுமே உண்டு. அதிலும் காதல் சூப், மன்னிக்கவும் காதல் ரசத்தைப் பிழிந்தால் மட்டுமே அவர்களுடைய ஸ்மார்ட் போன் பிளே லிஸ்ட்டில் இடம்பிடிக்க முடியும். இளைஞர்களின் இசை ஆர்வம் குறித்து பலரின் கருத்து இதுதான்.

ஆனால் இளைஞர்கள் மனதிலும், மொபைலிலும் இடம் பிடிக்கும்படியான தனி இசை ஆல்பங்கள் பல வரத் தொடங்கிவிட்டன. சூப்பர் சிங்கர் புகழ் கவுதம் பரத்வாஜ் பாடி, நடித்திருக்கும் ஒரு வீடியோ இசை ஆல்பம் கடந்த வாரம் வெளியானது. சுவாரஸ்யமான கதை அம்சத்தோடு இந்த இசை வீடியோவைத் தயாரித்து, இயக்கியது ஐஸ் பாய்ஸ் எண்டர்டெயின்மென்ட் எனும் இளைஞர் கூட்டணி.

பாட்டு, விளையாட்டு

ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் மூன்று சிறுவர்கள் உற்சாகமாக லொட்டாயைக் கையில் சுற்றிக்கொண்டே வானில் சரசரவெனக் காத்தாடி பறக்கவிடுகிறார்கள். மாடி படிக்கட்டில் மறைந்து நின்று ஒரு சிறுவனும், ஒரு சிறுமியும் இவர்கள் விளையாடுவதை ஆசையோடு பார்க்கிறார்கள். உடனே அவர்களையும் தங்கள் விளையாட்டில் இணைத்துக்கொள்கிறார்கள் காத்தாடி வைத்திருக்கும் குட்டீஸ்கள்.

அதே மொட்டை மாடியில் இந்தக் குழந்தைகளின் அளவற்ற மகிழ்ச்சியைப் பார்த்தபடி இனிய குரலில் பாடத் தொடங்குகிறார் கவுதம் பரத்வாஜ். “ஓ! உலகமே. அமைதியை வளர்த்தெடு” என்னும் அர்த்தத்தை எடுத்துரைக்கும் ‘மைத்ரீம் பஜதா’பாடல் அது. கர்னாடக இசை தேவதை எம்.எஸ். சுப்புலட்சுமி 1996-ல் ஐக்கிய நாடுகள் சபையில் உலக அமைதியை முன்மொழியும் விதத்தில் ‘மைத்ரீம் பஜதா’வைப் பாடினார். கர்னாடக சங்கீதத்தில் அமைந்த இப்பாடலைத் தற்போது மெல்லிசையாக வடிவமைத்துள்ளார் இசை அமைப்பாளர் பிரஷாந்த் டெக்னோ.

முதலில் உள்ளூர் அமைதி

திரையில் தோன்றும் கவுதம் பாடப் பாட, சிறுவர்களின் விளையாட்டும் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் பக்கத்து வீட்டுச் சிறுவனின் காத்தாடியை இந்தச் சிறுவர்கள் அறுத்துவிடச் சண்டை பற்றிக்கொள்கிறது. காத்தாடியைக் கையில் பிடித்திருந்த இரண்டு பேரைத் தவிர மற்ற குட்டீஸ்களெல்லாம் கலைந்து ஓடிவிடுகிறார்கள். இரண்டு சிறுவர்களும் அடிதடியில் இறங்க, அவர்களைத் தேடி ஓடி வருகிறார்கள் அவர்களுடைய அப்பாக்கள்.

குழந்தைகளின் சண்டை பெரியவர்களின் சண்டையாக மாறுகிறது. இரண்டு அப்பாக்களும் மூர்க்கத்தனமாக மோதிக்கொள்ளும்போது குழந்தைகளின் இயல்பு வெளிப்படுகிறது. சண்டை போட்ட சிறுவர்கள் அறுபட்ட காத்தாடியை வாஞ்சையோடு தூக்கிக்கொண்டு சேர்ந்து விளையாடத் தொடங்குகிறார்கள். தீவிரமாகச் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் அப்பாக்கள் தங்கள் குழந்தைகள் மீண்டும் ஒற்றுமையாக விளையாடுவதைக் கண்டவுடன் தங்களுடைய அறியாமையை உணர்ந்து வெட்கப்படுகிறார்கள்.

“இளைஞர்களால் எதையும் புதுமையாகச் சொல்ல முடியும். அமைதி, ஒற்றுமையின் முக்கியத்துவத்தைக் காட்சிப்படுத்த கோரமான வன்முறையின் விளைவைத்தான் காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. யதார்த்தமான வாழ்க்கைச் சம்பவங்கள் மூலம் அதிக தாக்கம் ஏற்படுத்த முடியும் என நினைத்தோம்” என்கிறார் இளம் தயாரிப்பாளர் சரண்யா.

கவுதம் பரத்வாஜின் நயமான குரல், இயல்பான கதைப் போக்கு, பிரஷாந்தின் இனிமையான இசை, அற்புதமான கருத்து என அத்தனை அம்சங்களையும் சிறப்பாக ஒருங்கிணைத்து இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது மேம்பட்ட உலகைக் காண விழையும் இந்த வீடியோ இசை ஆல்பம்.

பாடலைக் காண: >http://bit.ly/1DOTeyx

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x