Published : 08 May 2015 01:17 PM
Last Updated : 08 May 2015 01:17 PM
ஒரு காதில் ஸ்மார்ட் போன், ஒரு கையில் டீவி ரிமோட், இன்னொரு கையில் டாப்லெட், இன்னும் இரண்டு கைகள் இருந்தால் இன்னும் நான்கு ஐந்து கருவிகளோடு இருப்போம். எதிரே தட்டில் சோறு. பக்கத்தில் யார் உட்கார்ந்திருப்பது தெரியாது. இப்படியாக வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடும் நேரமே குறைந்துவிட்டது. அப்படிச் சேர்ந்தாலும் அந்த நேரத்தைத் தொலைக்காட்சிகளும் அவரவர் கையில் உள்ள மொபைலும் பறித்து விடுகிறதே என்று வருத்தப்படுபவரா நீங்கள்.
ஒரு நல்ல ஞாயிற்றுக்கிழமை மத்திய விருந்தில் தொலைக்காட்சியோ, மொபைல் அழைப்போ இடையூறு செய்யாமல் இருப்பதற்கு ‘பெப்பர் ஹாக்கர்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டோல்மியோ நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
இந்த ‘பெப்பர் ஹாக்கர்’-ஐப் பார்க்கும் போது மிளகுப்பொடி இயந்திரத்தைப் போல இருக்கும். அந்த இயந்திரத்துக்குள் இருக்கும் அமைப்பு, வீட்டில் செயல்படும் வை-பை இணைப்புகள், மொபைல் தொலைபேசிகள் மற்றும் தொலைக்காட்சிகளை 30 நிமிடங்கள் செயலிழக்கச் செய்துவிடும். மிளகுப்பொடியைத் தூவுவதற்குத் திருப்புவது போல பெப்பர் ஹாக்கரின் தலையைத் திருப்பினால் போதும்.
டோல்மியோ நிறுவனத்தின் மார்கெட்டிங் இயக்குநர் ரிச்சர்ட் ஸ்டியர் தான் இந்த பெப்பர் ஹாக்கரை உருவாக்கியவர். “எந்தத் தொழில்நுட்பம் மக்களை இணைப்பதற்கு பயன்படுகிறதோ, அதே தொழில்நுட்பம்தான் குடும்ப உறவுகளில் தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது. இப்போதைக்கு இந்தக் கருவி சந்தைக்கு வராவிட்டாலும், இரவு விருந்து மேஜையில் எல்லாரும் இருக்கும்போது, மொபைல் கருவிகள் துண்டிக்கப்பட்டிருந்தால் அந்தப் பொழுது எவ்வளவு நிம்மதியா இருக்கிறது என்பதைக் குடும்பத்தினர் உணரமுடிகிறது” என்கிறார்.
அதிகபட்சமாக மொபைல் மற்றும் கேட்ஜெட்களில் மூழ்கி வீட்டையே மறந்திருக்கும் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களிடம் இந்தக் கருவியைக் கொடுத்து டோல்மியோ நிறுவனத்தினர் அவர்களது எதிர்வினைகளையும் வீடியோவில் பதிவுசெய்துள்ளனர்.
பெப்பர் ஹாக்கர் எந்திரத்தைப் பார்த்து தாய்மார்கள் சிலர் குழப்பமடைந்தாலும் பெரும்பாலானவர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு வீட்டிலும் மொபைல், ஐபேட், டேப்லட், தொலைக்காட்சிகள் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் 12 வரை சராசரியாக உள்ளன என்று தெரியவந்துள்ளது. இந்தக் கருவிகளின் அதீதப் பயன்பாட்டால் எல்லோருடைய குடும்பத்திலும் பிரச்சினைகளும் உருவாகியுள்ளன.
இணையத்தில் காண: >http://bit.ly/1Nt0xAp
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT