Published : 03 Apr 2015 02:27 PM
Last Updated : 03 Apr 2015 02:27 PM
தி. நகர் ரங்கநாதன் தெருவில் கூட்டத்தோடு கூட்டமாக நடக்கும்போதுகூட உங்கள் தலை தனியாகத் தெரிய வேண்டும் என்ற ஆசை உள்ளதா? அப்படியானால் நீங்கள் உடனடியாக அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்துக்குச் செல்ல வேண்டும். அங்குதான் சிகை அலங்கார நிபுணரான ராப் ஃபெரல் இருக்கிறார். உங்கள் தலை மேல் பல பெரிய தலைகளின் உருவங்களை அச்சு அசலாக உருவாக்க வல்லவர் இவர்.
தலைக்கு மேல் தலை
பொதுவாகப் பிரபலமான நபர்களுக்குச் சிகை அலங்கார நிபுணராக இருப்பவர்கள் பிரபலமடைவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ராப், சாதாரண மக்களின் தலை மேல் பிரபலங்களின் முகங்களை வடிப்பதன் மூலம் பிரபலமடைந்து வருகிறார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தக் கலையைச் செய்து வருகிறார்.
2014-ல் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது அர்ஜென்டீனாவின் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸின் முகத்தை ஒருவரின் தலையில் வரைந்தபோது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டார். அதன் பின் ராபின் புகழ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.
எப்படிச் செய்கிறார்?
இது வெறும் கட்டிங், ஷேவிங் மட்டுமல்ல. பொதுவாக சவரத்துக்குத் தேவையான பிளேட், ஷேவிங் ஸ்டிக்கோடு, ஐ லைனர் மற்றும் லிப் லைனரையும் வைத்து வரைந்து தள்ளுகிறார் மனிதர்.
யாருடைய முகத்தை வடிக்க வேண்டுமோ அவருடைய கறுப்பு வெள்ளை ஒளிப்படத்தை ஸ்மார்ட் போன் திரையில் வைத்துக்கொண்டு சும்மா சரசரவென வேலையைத் தொடங்குகிறார். கைவசம் தொழில் இருப்பதால் மார்டின் லூதர் கிங், புரூஸ்லீ, மர்லின் மன்றோ, நெல்சன் மண்டேலா, கார்ட்டூன் கதாபாத்திரங்கள் எனப் புகழின் உச்சியைத் தொட்ட பலரின் முகங்களைப் பல பேர் உச்சந்தலையில் வரைந்துவருகிறார்.
ஒரு தலை முடியை செதுக்கக் கிட்டத்தட்ட 2 மணி நேரம் எடுத்துக் கொள்கிறார் ராப். 20 டாலர்கள் தொடங்கி 150 டாலர்கள்வரை வசூலிக்கிறார்.
தலை மேல் வரையும்போது எப்படி இருக்கிறது எனக் கேட்பவர்களிடம், “ஒரு பேஸ் பால் மீது வரைய முயற்சிப்பது போல இருக்கும். ஒவ்வொரு முறையும் எங்கு தொடங்குவது என்பது சவால்தான். ஒவ்வொரு பகுதியாக முடியை செதுக்கி, திருத்துவேன்.
பிறகு ஐ லைனர், லிப் லைனர் கொண்டு வண்ணம் சேர்ப்பேன். அதிலும் கருப்பு ஐ லைனர் உங்கள் தலை மேல் நான் வரையும் முகத்தை நிமிர்ந்து நிற்கச் செய்யும்” என்கிறார் சிரித்தபடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT