Published : 17 May 2014 05:31 PM
Last Updated : 17 May 2014 05:31 PM
அது 1981-ம் ஆண்டின் மே மாதம் 13-ம் நாள் அன்றைய மாலை நேரம். எல்லா நாளையும் போல் விடிந்த அந்த நாள் எல்லா நாளையும் போல் முடிந்திருக்க வேண்டிய தருணம் அது. ஆனால் அந்த நாள் அப்படி முடியாததால் வரலாற்றின் பக்கத்தில் முக்கிய நாளாகப் பதிவுசெய்யப்பட்டது.
மாலை மயங்கி இருள் கவியத் தயாரான அந்த மாலைப் பொழுதில் போப் இரண்டாம் ஜான் பால் திறந்த வெளி ஜீப்பில் வாடிகன் சிடியில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தின் வழியே சென்றுகொண்டிருந்தார். போலந்து நாட்டைச் சேர்ந்த போப் 1978-ல்தான் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இத்தாலி நாட்டைச் சாராத முதல் போப் ஆண்டவர் அவரே. அவர் பெருந்திரளான தனது ஆதரவாளர்களது கூட்டத்தைக் கடந்துகொண்டிருந்தார். அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்த அசம்பாவிதச் சம்பவம் நடந்தேறியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் தொடர்ந்து நான்கு துப்பாக்கிக் குண்டுகள் போப்பைக் குறிவைத்துப் பாய்ந்துவந்தன. இரண்டு குண்டுகள் வயிற்றின் கீழ்ப் பகுதியைத் துளைத்தன. ஒன்று இடது ஆட்காட்டி விரலையும் மற்றொன்று வலது தோளையும் பதம் பார்த்தன. ரத்த வெள்ளத்தில் மிதந்த போப் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் போப்பின் பாதுகாவலர்கள் இருவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
போப் மீது கொலை முயற்சி
போப் இரண்டாம் ஜான் பாலை 9மிமீ ப்ரௌனிங் ஹைபவர் செமி ஆட்டோமேடிக் பிஸ்டலால் சுட்டுக் கொல்ல முயன்றவர் பல்கேரிய நாட்டின் சோபியா பகுதியைச் சேர்ந்த மெஹ்மெட் அலி அஹ்கா என்பவர். இவர் தனது பெயரை மாற்றிக்கொண்டு பொய்யான பாஸ்போர்ட் உதவியுடன் 1981 ம் ஆண்டின் மே மாதம் 10 அன்று மிலன் நகரிலிருந்து ரயில் மூலம் ரோம் நகருக்குள் ஊடுருவியுள்ளார். துருக்கியைச் சேர்ந்த ஒருவரும் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இருவரும் இவருக்கு உதவியுள்ளனர். இத்தாலியில் இருந்த பல்கேரிய ராணுவ நிபுணரான ஸிலோ வாஸ்ஸிலேவ் என்பவரே திட்டத்தை அரங்கேற்றுவதற்கான கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். போப்பை மெஹ்மெட் சுட்டுக் கொன்றவுடன் ஓரல் செலிக் என்பவர் ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்வார். அப்போது உருவாகும் களேபரத்தின் நடுவே இருவரும் தப்பித்துவிட வேண்டும் என்பது ஏற்பாடு. ஆனால் போப்பின் மீது குண்டு பாய்ந்ததை ஒட்டி ஏற்பட்ட பதற்றமான சூழலால் கவலை கொண்ட ஓரல் செலிக் பயந்து ஓடிவிட்டார். மெஹ்மெட் கூட்டத்தினிடையே தப்பிக்க வழியின்றி போலீஸாரிடம் மாட்டிக்கொண்டார்.
மன்னிப்பு தந்த மகான்
1981 ஜூலையில் மெஹ்மெட் அலி அஹ்காவுக்கு இத்தாலி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சிறையிலிருந்த மெஹ்மெட்டை 1983-ல் போப் சென்று பார்த்துவந்தார். போப் மெஹ்மெட்டை மன்னித்து ஏற்றுக்கொண்டார். மெஹ்மெட்டின் குடும்பத்தினருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டார். மெஹ்மெட்டின் சகோதரரையும் தாயையும் சந்தித்துப் பேசினார். இந்த உறவால் போப் கேட்டுக்கொண்டதற்கிணங்க மெஹ்மெட் மன்னிக்கப்பட்டு 2000-வது ஆண்டில் துருக்கிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் 1979-ல் பத்திரிகையாளர் ஒருவரைக் கொல்ல முயன்ற வழக்கின் காரணமாகச் சிறையிலடைக்கப்பட்டார். இத்தாலியில் சிறையிலிருந்த நாட்களைக் கழிக்க மறுத்துவிட்டது துருக்கி நீதிமன்றம். எனவே சிறைத் தண்டனை தொடர்ந்தது. தண்டனை முடிந்த பின்னர் 2010-ம் ஆண்டு ஜனவர் 10-ல் தான் மெஹ்மெட் விடுதலையானார்.
போப் இரண்டாம் ஜான் பால் மீதான தாக்குதல் திட்டத்தின் மூளையாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பான கேஜிபி இருந்ததாகச் சொல்லப்பட்டது. போலந்து நாட்டின் கூட்டொற்றுமைக்குப் பாடுபட்ட இயக்கத்திற்கு போப் தெரிவித்த ஆதரவு காரணமாக அதிருப்தி அடைந்த ரஷ்யா, போப்பைக் கொல்லச் சதி செய்தது என்று கூறப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு டாம் க்ளன்ஸி என்னும் நாவலாசிரியர் ரெட் ரேப்பிட் என்னும் புதினத்தை எழுதியுள்ளார்; கரோல்: த போப், த மேன் என்னும் தொலைக் காட்சித் தொடரும் எடுக்கப்பட்டுள்ளது. எந்தப் போப்பைக் கொல்ல மெஹ்மெட் முன்வந்தாரோ அந்த போப் 2005-ல் உடல் நலமின்றி இருந்தபோது அவர் உயிர் பிழைக்க மனமுருக பிரார்த்தித்து அவரது உடல்நலம் சீராக வாழ்த்தி கடிதம் அனுப்பினாராம் மெஹ்மெட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT