Published : 10 Apr 2015 02:53 PM
Last Updated : 10 Apr 2015 02:53 PM
குப்பை உணவின் அதீதப் பிரியர்களாக இருப்பவர்கள் இளைஞர்கள்தான். ஆனால், இப்போது அவர்களே குப்பை உணவின் பாதகங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். அதற்கான ஒரு சிறந்த உதாரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.எஸ்சி., எலக்ட்ரானிக் மீடியா இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் ‘ட்ரோ.ஜன்’(Tro.Jun) என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியைச் சொல்லலாம். அவர்களுடைய இந்த ஆரோக்கியமான முயற்சிக்கு கேம்பஸுக்குள் தடபுடலான வரவேற்பு கிடைத்து வருகிறது.
ட்ரோ.ஜன் வைரஸ்
குப்பை உணவு உடல்நலனுக்குச் செய்யும் கெடுதல்களை முழுவதுமாகத் தெரிந்துகொண்டால் அவற்றைச் சாப்பிடுவதை இளைஞர்கள் நிச்சயமாகத் தவிர்ப்பார்கள் என்று உறுதியாகச் சொல்கின்றனர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த மாணவர்கள். ‘ட்ரோ.ஜன்’ என்ற வைரஸ் பெயரை இந்நிகழ்ச்சிக்கு வைத்தது கேம்பஸுக்குள் கூடுதல் எதிர்ப் பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
“கம்ப்யூட்ரைப் பாதுகாப்பதற்கு எப்படி வைரஸைப் பயன்படுத்துகிறோமோ, அதேமாதிரிதான் இந்த ‘ட்ரோ.ஜன்’ வைரஸ் குப்பை உணவுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. குப்பை உணவுகளைச் சாப்பிடக் கூடாது என்று சொன்னால் மட்டும் போதாது. அதற்கு மாற்றுவழியைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தோம்.
அப்படியொரு முயற்சிதான் ‘ட்ரோ.ஜன்” என்கிறார் மாணவர் சித்தார்த். அதை உறுதிப்படுத்துவது மாதிரியே இந்நிகழ்ச்சியில் நாடகம், ஆரோக்கிய உணவு விற்பனை, குப்பை உணவுகளுக்கு எதிரான ஆவணப் படம் போன்ற பல்வேறு அம்சங்களை இணைத்திருக்கிறார்கள் இம்மாணவர்கள்.
இது ஒரு புது ரூட்
குப்பை உணவுகளுக்கு மாற்றாகச் சாப்பிடுவதற்குச் சுவையான பல்வேறு ஆரோக்கியமான உணவுகளை விற்பனை செய்து கேம்பஸை அசத்தியிருக்கிறார்கள் மாணவிகள் பிரியதர்ஷினி, லக்ஷ்மி ஸ்ரீ , மீனாள். “ஆரோக்கியமான உணவுகளை அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இப்போது நாம் இருக்கிறோம்.
அதனால்தான் இந்நிகழ்ச்சிக்காக எங்கள் அம்மாக்களிடம் ஆலோசனைகள் கேட்டு கம்மங்கூழ், திணைப் பொங்கல், உளுத்தம்பருப்பு லட்டு, பச்சப்பருப்பு லட்டு, நவதானிய சுண்டல் போன்ற பல்வேறு தின்பண்டங்களை விற்பனைக்கு வைத்திருந்தோம். அதற்கு எல்லாத் தரப்புகளிருந்தும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது” என்கிறார் பிரியதர்ஷினி.
இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு நாடகத்தில் குப்பை உணவுகளையே கதாபாத்திரமாக்கி இருந்தார் மாணவி கிருத்திகா. நாடகத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் கூடுதலாக மாணவர்களின் கவனத்தை ஈர்த்தன. “குப்பை உணவுகள் எப்போதும் நம்மை சாப்பிடத் தூண்டும் விதமாகவே தயாரிக்கப்படுகின்றன. அதை மாணவர்களுக்குப் புரியவைக்கும் விதமாகவே நாடகத்தை உருவாக்கியிருந்தோம்” என்கிறார் இவர்.
நம் முன்னோர்களைப் போலவே நாமும் எண்பது வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால் குப்பை உணவுகளுக்கு ‘குட்-பை’ சொல்ல வேண்டியது அவசியம் என்கின்றனர் இந்த மாணவர்கள்.
சித்தார்த்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT