Published : 03 Apr 2015 01:17 PM
Last Updated : 03 Apr 2015 01:17 PM
உலக இளைஞர்களை சொக்க வைத்திருக்கும் பேஸ்புக் சமூக வலைத்தளம் தமது ஊழியர்களுக்காகக் கனவு அலுவலகம் ஒன்றைச் சமீபத்தில் திறந்துள்ளது. 4 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாகும் இந்த அலுவலகத்தின் மொட்டை மாடிக் கூரைத் தோட்டத்தின் பரப்பளவு மட்டும் 9 ஏக்கராம். இந்தக் கூரைத் தோட்டத்தின் படத்தைப் பார்த்தாலே நமக்கு ஆச்சரியத்தில் மூச்சு முட்டுகிறது.
புதிய பேஸ்புக் அலுவலகத்தை வடிவமைத்திருப்பவர் புகழ்பெற்ற கனடிய - அமெரிக்க கட்டிட வடிவமைப்பாளர் ப்ராங்க் கெரி. இந்தப் புதிய கட்டிடத்தின் பெயர் எம்பிகே 20. வண்ண வண்ண சுவர் ஓவியங்களும் நவீன சிற்பங்களும் அலங்கரிக்கும் கலை நயமிக்க கட்டிடமாக எம்பிகே 20 வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் அலுவலகத்தின் மொட்டை மாடியில் பசுமையான தாவரங்களைக் கண்குளிரப் பார்த்துக் கொண்டே ஊழியர்கள் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் நடைப்பயிற்சி செய்யலாம். சுற்றிலும் பாதுகாப்புக்குச் சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள சதுப்புநிலப் பகுதியான மென்லோ பார்க் பகுதியில் இந்தக் கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது.
யாருமே எதிர்பார்த்திராத வகையிலும், ஆடம்பரமின்றியும், பயன்மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பதே மார்க் ஸக்கர்பெர்க்கின் விருப்பம் என்கிறார் கெர்ரி.
கட்டிடத்தின் உள்பக்கம், சின்னச் சின்ன பகுதிகளைக் கொண்ட ஒரு பிரம்மாண்ட வெளியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்துகளைப் பகிரந்துகொள்ளும் வகையிலும் வெளிப்படையானதாகவும் இருக்க இந்த ஏற்பாடு என்கிறார் பேஸ் புக்கின் துணைத் தலைவரான ஜான் டெனான்ஸ்.
தற்போதைய பேஸ்புக் தலைமயகத்துக்கும் புதிய இடத்துக்கும் இடையில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை ஒன்று இருக்கிறது. ஆனாலும் இந்த இரண்டு கட்டிடங்களையும் இணைப்பதற்கு ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாகப் புதிய கட்டிடத்துக்கு நடந்தும் சைக்கிளிலும் ட்ராமிலும் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பேஸ்புக்கின் புதிய அலுவலகம் பற்றி அதன் நிறுவனர் ஸக்கர்பெர்க் பேசுகையில், “வேலை சரியாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை எங்கள் இடத்திற்குள் நுழையும் ஒருவர் உணர வேண்டும். இந்த உலகத்தைத் தொடர்புகொள்ளும் எங்கள் லட்சியத்தில் இன்னும் என்ன வேலைகள் மிச்சமிருக்கின்றன என்பதையும் எங்கள் கட்டிடம் உணர்த்த வேண்டும்” என்கிறார்.
பேஸ்புக் நிறுவனம் மட்டுமல்ல, ஆப்பிள் இன்க் நிறுவனமும் விண்வெளிக் கப்பலின் வடிவத்தில் ஒரு பிரம்மாண்ட அலுவலகம் ஒன்றைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. ஊடக நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக 161 மில்லியன் டாலர் செலவில் ஒரு பாதாளக் கருத்தரங்கக் கூடத்தையும் உருவாக்க உள்ளது. கூகுள் நிறுவனமும் சீக்கிரத்தில் இடம் மாற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT