Published : 10 Apr 2015 02:03 PM
Last Updated : 10 Apr 2015 02:03 PM
கல்லூரிக்குள் மாணவிகள் ஒரு பக்கம் நடந்து செல்ல, குழந்தைகளும் செல்கின்றனர். ஆமாங்க, புதுச்சேரியிலுள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் குழந்தைகளுக்கான சிறு பள்ளியும் இயங்குகிறது. இப்பள்ளியில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது, கற்றுத்தருவது தொடங்கி சாப்பிடவைத்து தூங்கவைப்பதுவரை அனைத்து வேலைகளையும் செய்வது கல்லூரி மாணவிகள்தான்.
1 மாணவிக்கு 2 குழந்தைகள்
புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியில் பிஎஸ்சி ஹோம் சயின்ஸ் மாணவிகள் பாடத் திட்டத்துக்காக இச்சிறு பள்ளி நடத்தப்படுகிறது. இப்பள்ளியில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆய்வுப் பள்ளி 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்குகிறது. இப்பள்ளியில் ஒரு கல்லூரி மாணவிக்கு இரு குழந்தைகள் ஒதுக்கப்படுகிறார்கள். குழந்தைகளின் மனநிலை, கவனிக்கும் திறன், உணவுப் பழக்கம், உறக்கம் உள்ளிட்ட விஷயங்களைக் கவனித்து ரிப்போர்ட் தயாரித்து சமர்ப்பிக்கிறார்கள்.
குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு அதை ரிப்போர்ட்டாகத் தயாரிக்க எல்கேஜி, யூகேஜியில் தலா 35 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளது கல்வி கற்கும் திறன், சாப்பிடும் முறை, விரும்பிச் சாப்பிடும் உணவு, மனநிலை, அவர்களின் விருப்பம், படுத்துத் தூங்கும் முறை உட்பட அனைத்தையும் குறித்துக் கொள்கிறார்கள். அதில் மாறுபாடு தேவையெனில் அவர்களுக்கு விளையாட்டு முறையில் சொல்லித் தருகிறார்கள்.
குழந்தைகளுக்குச் சத்தான உணவு லஞ்ச் பாக்ஸில் கட்டி தருகிறார்களா என்று கவனிக்கிறார்கள். குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உணவுக்கும் அதிகத் தொடர்புள்ளதைப் பெற்றோர்களிடம் தெரிவிக்கிறார்கள். இவற்றையெல்லாம் முறையாகக் கவனித்துக்கொள்வதாகச் சொல்கிறார் 3-ம் ஆண்டு மாணவி சோபியா.
விளையாட்டும் சண்டையும்
குழந்தைகள் காலையில் பள்ளிக்கு வந்தவுடன் அவர்களுக்குப் பாடங்கள் விளையாட்டு முறையில் சொல்லித் தரப்படுகின்றன. பின்பு, சத்தான சுண்டல், பாயசம் என்று சிற்றுண்டியைக் கல்லூரியிலேயே தருகிறார்கள். அதையடுத்து பாடம், விளையாட்டு எனக் குழந்தைகளின் பள்ளி நேரம் செல்கிறது. மதிய உணவு இடைவேளையில் கல்லூரி மாணவிகள் வந்து குழந்தைகள் சரியாகக் சாப்பிடுகிறார்களா என்பதைக் கவனித்துக்கொள்கிறார்கள். சிறு குழந்தைகளுக்கு ஊட்டிவிடுகிறார்கள். இதர குழந்தைகளுடன் இணைந்து சாப்பிடுவதை ஊக்குவிக்கிறார்கள்.
குழந்தைகளின் மனநிலையை எளிதாக எங்களால் உணர முடியும் என்கிறார் மூன்றாம் ஆண்டு மாணவி சவுபர்ணிகா. விளையாடுவதை வைத்தே அவர்களின் விருப்பதை உணர்கிறார்கள். சில சமயம் குழந்தைகள் சோகமாக இருப்பார்கள். பல குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் ஏற்படும் சிறு, சிறு சண்டைகளால் துவள்வார்கள். குழந்தைகளின் பிணக்குகள் சிறிது நேரத்தில் இயல்பாகச் சரியாகிவிடும்.
அதை உதாரணமாக வைத்து மற்ற குழந்தைகளுக்கு விளக்குவதாகச் சொல்கிறார் சவுபர்னிகா. ஓடி ஆடி விளையாடும் குழந்தைகள், அமர்ந்து இருக்கும் குழந்தைகள் எனக் குழந்தைகளின் ஆர்வத்தையும் தனித்தனியாக அறிந்து அதற்கேற்ப அவர்களின் விருப்பத்திறனைக் கண்டறிந்து மேம்படுத்துகிறார்கள். ஓடியாடும் விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் சில குழந்தைகளை அத்தகைய விளையாட்டில் ஈடுபடுத்துகிறார்கள்.
அதே போல் ஓவியம் வரைவது உள்ளிட்ட பிற விஷயங்களில் ஆர்வமாக இருக்கும் குழந்தைகளின் விருப்பங்களையும் கண்டறிந்து அவர்களின் ரிப்போர்ட்டில் குறிப்பிடுவதாகவும் சவுபர்ணிகா தெரிவித்தார். தற்காலத்துக்குத் தேவையான குட் டச், பேட் டச் போன்ற விஷயங்களையும் இயல்பாகக் கதை போல் குழந்தைகளுக்குக் கற்றுத்தருகிறார்கள். அத்துடன் குழந்தைகளுடன், குழந்தைகளாகக் கல்லூரி மாணவிகள் மாறிவிடுகிறார்கள் என்பதுதான் சிறப்பானது.
படங்கள் எம். சாம்ராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT