Published : 24 Apr 2015 02:40 PM
Last Updated : 24 Apr 2015 02:40 PM
மனிதன் காதலை உணர ஆரம்பித்ததிலிருந்து காதலைத் தன்னால் முடிந்த அளவு கொண்டாடி வருகிறான்.
சூரிய ஒளிக் கதிர்கள் பூமியைப் பற்றிக் கொள்வதும்
நிலவு ஒளிக் கதிர்கள் கடலை முத்தமிடுவதும்
என்னை நீ வெறுத்து விட்டால் இந்த முத்தங்களின் மதிப்பென்ன ? - இது ஷெல்லி
நம் முத்தத்துக்கிடையே சிக்கிக்கொண்டு
ஈரமான வார்த்தைகள் சொல்லியிருக்குமோ ?
நமக்குக் கொஞ்சம் கூட
ஈரமே இல்லையென்று !!!
என எழுதத் தோன்றுகிறது.
காதலால் சாம்ராஜ்யங்கள் எழும்பியுமிருக்கின்றன, வீழ்ந்துமிருக்கின்றன. ஆதி மனிதன் நாகரிக மனிதனாவதற்குக் காதல் பிரதான காரணம் என்று கவிஞர்களும், ஏன் வரலாற்றாளர்களும், அறிவியலாளர்களும் கூடச் சொல்கிறார்கள்.
காதல், குறுக்கு வெட்டி விளக்க முடியாத அற்புத உணர்வு. காமம் என்று சொல்லப்பட்டாலும் அது காமம் மட்டுமல்ல, நேசம் என்று சொல்லப்பட்டாலும் அது நேசம் மட்டுமல்ல. அது உயிரின் ரகசியத்தைப் போல, கடவுளைப் போல, பிரபஞ்சத்தின் தோற்றுவாய் போல முழுவதும் வரையறுக்க முடியாத ஒன்று.
இப்படி எத்தனையோ கவிதைகளையும் விளக்கங்களையும் காதலுக்கு அளித்தாலும் உண்மையில் காதல் என்ற உணர்வு என்ன? அது ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறது? மனிதர்களை உற்சாகமாக்குகிறது, நேசம் மிகுந்தவர் களாக்குகிறது, சாதிக்கவும் வைக்கிறது, சாகடிக்கவும் செய்கிறது, காதலின் இந்த வலிமைக்கு என்னதான் காரணம் என்று விஞ்ஞானம் தொடர்ந்து தேடிவருகிறது. அந்தத் தேடலுக்குச் சில விடைகளும் கிடைத்துள்ளன.
சீன விஞ்ஞானிகள், காதலில் இருப்பவர்கள், காதல் முறிந்தவர்கள், இதுவரை காதலே புரியாதவர்கள் என மூன்று தரப்பிலிருந்தும் தலா 34 நபர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். மூன்று தரப்பும் சேர்த்துப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 102 பேரும் ஒரே வயது மற்றும் ஒரே மாதிரியான சமூக நிலையிலிருப்பவர்கள்.
இந்தப் பரிசோதனையில் காதல் குறித்த அறிவியல் உண்மைகள் பல புரிய வந்திருக்கின்றன. காதலில் இருப்பவர்களுக்கு மூளையின் பகுதிகளான dorsal anterior cingulate cortex, insula, caudate, amygdala, and nucleus accumbens, temporo-parietal junction, posterior cingulate cortex, medial prefrontal cortex, inferior parietal, precuneus, மற்றும் temporal lobe போன்ற பகுதிகளின் செயல்பாடு அதிகரித்திருக்கிறது.
அவர்கள் காதலில் செலவழித்த நேரத்தைப் பொறுத்து முன் சொன்ன மூளைப் பகுதிகளின் செயல்பாடு அதிகரித்திருக்கிறது. அதே சமயம் காதலில் முறிந்தவர்களுக்கும், காதலிக்காதவர்களுக்கும் முன் சொன்ன மூளைப் பகுதிகளின் செயல்பாடு காதலில் இருப்பவர்களைவிடக் குறைவாகவே இருந்துள்ளது.
மூளைப் பகுதிகளின் செயல்பாடுகளைத் தூண்டி விடும் ஆற்றல் ஆக்சிடோசின், செரோடின் போன்ற மூளை ரசாயனங்களால் ஏற்படுகிறது. இந்த ரசாயனங்கள் சுரக்கும்போது மேற்சொன்ன மூளைப் பகுதிகளின் செயல்பாடுகள் அதிகரித்து இன்பத்தை உணர்கின்றன. மூளையின் பகுதிகள் இன்பமாக உணர்வதால், உலகம் ரம்மியமாகிறது, ரசனை பெருகுகிறது, அன்பு பொங்குகிறது.
ஆனால், காதல் வந்தவுடன் குறிப்பிட்ட இந்த ரசாயனங்கள் எப்படிச் சுரக்கின்றன? மூளைப் பகுதிகளில் ஏற்படும் இந்த ரசாயன மாற்றம் காலத்திற்கும் நீடிக்குமா ? மூளைப் பகுதிகளின் ரசாயன மாற்றங்களைப் பரிசோதித்து அதன் மூலம் ஒருவர் உண்மையில் காதலில் இருக்கிறாரா என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா?
ரசாயன விளையாட்டுகளைத் தாண்டி உயிரைப் போன்றே காதலும் முழுவதும் வரையறுக்க முடியாத செயல்பாடல்லவா? நேசத்தை உயிர்வேதியியலின் அடிப்படையில் விளக்கிவிட முடியுமா? இப்படி மேலும் பல கேள்விகள் கிளம்பிய வண்ணம் இருக்கின்றன. ஆனால் உயிரையும் பிரபஞ்சத்தையும் காதலையும் விஞ்ஞானம் ஒரு நாள் முழுவதுமாக விளக்கிவிடலாம். எது எப்படியானாலும், காதல் என்று ஒன்று இல்லை, ஈர்ப்பு என்று ஒன்று இல்லை எல்லாம் மாயை என்ற பம்மாத்துக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது அறிவியல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT